ஒலி கொண்டு தான் ஒளி கொண்டு உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!
இவ் ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.
1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.
அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.
அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.
மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.
ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும்... ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே... இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.
இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.
1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.
இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.
உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எவ் எறும்பும் பூச்சிகளும் ஏறா வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.
இந்த எறும்பின் ஊர்தல்... அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு “மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி” அவ் எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.
இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.
எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.
எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.
மரண பயம் என்ற அச்சத்தை விட்டு... இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு...
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.
உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.