ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2023

“உபதேசம் நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டுப் போனால் மெய்ப் பொருளைக் காணும் நிலையை இழக்க நேரும்

அகஸ்தியன் உடலில் உருவான விண்ணுலக ஆற்றல்…
1.வானவியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்..
2.தன் இன மக்கள் அறிந்து கொள்வதற்காக அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள் அனைத்தையும்
3.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இன்றும் அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

அகஸ்தியனைப் பின் தொடர்ந்து வந்தோர்… நுகர்ந்தவர்கள் இதை அறிய முடியும். அந்த விண்ணுலக ஆற்றலை அவர்களும் அறியும் தன்மை பெறுகின்றார்கள்.

அதன் வழியில் தான்
1.நமது குருநாதரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தார்... தனக்குள் பெற்றார்
2.தனக்குள் பெற்றதை எம்மையும் (ஞானகுரு) பெறச் செய்தார்..
3.சந்தர்ப்பத்தால் அவரைச் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது
4.தான் பெற்ற அந்த விண்ணுலக ஆற்றல் ஒவ்வொன்றையும் எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
5.பதிந்ததை… நான் நினைவு கொண்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தைத் தூண்டுகின்றார்
6.அவர் சொன்ன முறைப்படி விண்ணிலே என் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அவர் கண்ட உண்மைகளை நானும் காண முடிந்தது.
7.குருவின் தொடர் கொண்டு அந்த அறியும் ஆற்றலை நானும் பெற முடிகின்றது… அகஸ்தியன் உணர்வை நுகர முடிகின்றது
8.உலகம் எப்படி உருவானது…? என்ற நிலையை என்னில் அறிய முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று அதன் உணர்வுகளைத்தான் சொல்லாக இங்கே வெளிப்படுத்துகின்றேன்.
1.செவி வழி உணர்ச்சிகளைத் தூண்டி…
2.உங்கள் கண் பார்வையில் நுகரும் ஈர்ப்பாகக் கொண்டு வருகின்றேன்.
3.நீங்கள் நுகரப்படும் போது… உயிருடன் ஒன்றி உணர்வின் அலையை உங்களில் பரப்பச் செய்து
4.அதை உங்கள் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாக விதைக்கும் தன்மையாகப் பக்குவப்படுத்துகின்றேன்.
5.அந்த உணர்வுக்குள்ளிருந்து அருள் ஞானி கண்ட உணர்வை நீங்கள் வளர்க்க முடியும்.

ஏனென்றால் குருநாதர் எவ்வாறு எனக்குச் செய்தாரோ அதன் வழியில் தான் உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றேன். பிரபஞ்சத்தின் இயக்கத்தை அகஸ்தியன் கண்டதை நீங்களும் நேரடியாகக் காண முடியும். பேரண்டத்தின் நிலைகளையும் உணர முடியும்.

உங்களுக்குள் உருப்பெரும் இந்த உணர்வின் தன்மை கொண்டு “உங்களை நீங்களும் உணர முடியும்…” ஏனென்றால் மனிதரான பின் கார்த்திகேயா…!

எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் பெற்றவன்… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் மனிதன். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது. இதையெல்லாம் நம் காவியங்கள் தெளிவாக்குகின்றது.

1.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட… நமது குருநாதர் கண்ட அனைத்தையும்
2.நீங்கள் அறிதல் வேண்டும் என்ற நிலைக்கே இதை உருவாக்குகின்றேன்.

அருள் ஞானி அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் உங்களுக்குள் வளர வளர மனித இச்சையின் ஆசைகள் உருவாகும் நிலையை அடக்குகின்றது… உங்களை அறியாது வரும் இருள் சூழும் நிலைகளை அடக்குகின்றது… தீமை விளைவிக்கும் நிலையை அது அடக்குகின்றது.

அதற்குத் தான் இந்த உபதேசம்…!

ஆகவே… மெய் ஞானிகள் உணர்வை இந்த உபதேச வாயிலாகக் கேட்கப்படும் பொழுது அதே உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி
1.அதனின் அறிவாக நீங்கள் நுகரும் தன்மை வருகிறது - நீங்கள் நினைவைச் செலுத்தினால்…!
2.ஆனால் இதையெல்லாம் கேட்டுணர்ந்து… “நன்றாக இருக்கின்றது…!” என்று மறந்து விட்டால் மெய்ப்பொருளைக் காணும் திறனை இழக்கின்றீர்கள்.

யாம் சொல்லும் இணக்கத்தின் உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அந்த உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்தால் மீண்டும் நினைவின் ஆற்றல் வருகின்றது.

அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை நுகர முடியும்… அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றும் திறனைப் பெறுகின்றீர்கள்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!