குருநாதர் ஒரு முறை திருச்செந்தூர் கடலுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது
இரவு நேரம். நல்ல இருட்டு. எமக்கு சாதாரண நீச்சல்தான் தெரியும். இருந்தாலும், குருநாதர்
எம்மைக் கடலில் இறங்கச் செய்து மிதக்கும்படி செய்தார்.
இங்கே மிதந்து கொண்டிருக்கும் பொழுது பெரும் அலைகள் வந்து எம்மீது மோதி கடலில்
வெகு தூரத்திற்கு இழுத்துக்கொண்டு போய்விட்டது.
அங்கே ஆசனம் போடச் செய்து, கையை தலையணை போல் தலையின் பின்புறம் வைத்துக் கொள்
என்று குருநாதர் கூறினார்.
அவ்வாறே யாம் செய்தோம். கொஞ்ச நேரத்தில் உடலில் அசைவு எதுவுமில்லாமல் கடலில்
மிதக்க ஆரம்பித்துவிட்டோம். சற்று நேரத்தில், மீண்டும் கடலின் அலைகள் வந்து மோதி இன்னும்
வெகுதூரத்திற்கு இழுத்துக் கொண்டு போய்விட்டன.
எமக்கோ மனதில் பயம் ஏற்பட்டுவிட்டது. அப்பொழுதுதான் என்னென்னமோ ஆசைகள் மனதில் எழுகின்றன. அதே
நேரத்தில் பெரிய மீன் இனங்கள் நம்மை வந்து விழுங்கிவிடுமோ? என்ற பயமும் மனதில் எழுகின்றது.
இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் எழுந்து கரையை அடையவேண்டும் என்ற ஆசை எழுந்து காலை
ஆசனத்தை விட்டுப்பிரித்தால் உடனே நீர் ஆளை உள்ளே இழுக்கின்றது.
இதனால் போட்டிருந்த ஆசனத்திலிருந்து காலைப் பிரிக்க முடியவில்லை. ஆசனத்திலிருந்து
காலைப் பிரித்தாலோ மோதும் அலைகள் ஆளை உள்ளே அமுக்குகின்றன.
இதில் எங்கே தப்பிப்பது? ஆசனத்திலிருந்து காலைப் பிரிக்க முயன்ற சமயத்தில் தண்ணீரையும்
வயிறு நிறையக் குடித்துவிட்டோம். அதனால் புரையோடுகின்றது.
அப்புறம் என்ன செய்வது? மறுபடியும் ஆசனத்தைப் போட்டு புரையை நிவர்த்தி பண்ண
வேண்டியதாயிற்று.
கடல் அலை அப்படி இருக்கும்,
இப்படி இருக்கும் என்று வெறும் வாயில்
பேசுவது அல்ல இது.
அந்தக் கடல் அலைகளுக்கு மத்தியிலேயே எம்மைப் படுக்கச் செய்தார் குருநாதர். அலைகளால் புரட்டிப் புரட்டி அடிக்கப்படும்
பொழுது, அதில் சமாளிக்கும் ஆற்றலைக் கொடுத்தாலும் மனதில் என்ன
நினைவுகள் எழுகின்றன?
நினைவுகள் உண்டாகும் பொழுது உடல் பலவீனப்பட்டு எப்படி ஆளை நீரில் மூழ்கச் செய்கின்றது.
கீழே இழுத்தவுடனே பயத்தில் எப்படி நீரைக் குடிக்கச் செய்கின்றது? அதன் பிறகு ஆள் எப்படித்
தப்பிப்பது?
எவ்வளவு பெரிய நீச்சல்காரரும் கொஞ்சம் பயந்தால் போதும், நீர் வாயினுள் போய்
அதனால் அந்த நேரத்தில் நீச்சல் திறமையும் போய் அந்த ஆசாமி நீரில் தத்தளிக்க ஆரம்பித்துவிடுவார்.
இது போன்ற நிலைமைதான் எமக்கும் அந்த இடத்தில் இருந்தது.
காரணம், மனித வாழ்க்கையில் சந்தர்ப்பங்களில் எத்தனை உணர்வுகள் வருகின்றன?
அத்தகைய உணர்வுகளை வென்று, மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்மிடத்தில் பதியவைத்து வளர்ப்பது
எங்ஙனம் என்பதை
நமது குருநாதர்
எமக்கு உணர்த்தி விளையவைத்த நிலைகளை
உங்களிடத்திலும் வித்தாகப் பதித்திருக்கிறோம்.
இவ்வாறு, உங்களிடத்தில் பதிக்கப்பட்ட மகாஞானிகளின் அருள்வித்தின் அருமையை உங்களுக்கு
உணர்த்தும் விதமாக எமக்கு குருதேவர் தந்தருளிய அனுபவங்களை எடுத்து உபதேசிக்கின்றோம்.
எனவே இதனின் அருமையை உணர்ந்து மனித வாழ்க்கையில் வரும் சஞ்சலம், கோபம், குரோதம்,
வெறுப்பு போன்ற உணர்வுகளை வென்று எல்லா மகரிஷிகளின் அருளாற்றலை நீங்கள் பெறுவதற்கும் அதனின் துணை கொண்டு இருள் நீங்கி மெய்ப்பொருள் காணும் நிலையை
நீங்கள் பெறுவதற்கும் எமது அருளாசிகள்.