ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2014

பூணூல் பூட்டுவதின் தத்துவம் என்ன?

ஒரு சேனாதிபதி தன் அரசனிடம் அடுத்த நாட்டுக்காரன் நம் மீது படையெடுத்து வருகிறான் என்று கூறுவானே ஆனால், அது சேனாதிபதி கேள்வியுற்ற செய்தியாகவே இருக்கும்.

அரச நீதி சபையில் இருக்கும் அரசனிடத்தில் கூறப்படும் இந்தச் செய்தியானது, அரசனிடத்தில் ஆவேச உணர்வையே வெளிப்படுத்தச் செய்யும்.

அதுபோன்றே, ஒருவன் நம்மை இடித்துப் பேசுகின்றான் என்றால், அச்சமயம் நம் உயிரால் உடல் இயக்கப்பட்டு நம்மிடமிருந்து ஆவேச உணர்வுகள் வெளிப்படுகின்றன.

இந்த உண்மைகளை வியாசர் நமக்கு வசிஷ்டாத்துவம் என்று பெயரிட்டு எடுத்துரைக்கின்றார்.

உடலின் உறுப்பின் இயக்கத்தைக் கண்டறிந்து உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்ற மாமகரிஷி வியாசரின் இத்தத்துவத்தை நமக்கு ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வசிஷ்டாத்துவத்தை நமக்கு நினைவூட்டுவதற்காகவே பூணூல் பூட்டும் முறை உருவாக்கப்பட்டது.

எத்தனை தீமைகள் வந்தாலும் எவ்வாறு நல் உணர்வுகளைக் காத்திடல் வேண்டும்? மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் கவர்ந்து எவ்வாறு செயல்படவேண்டும் என்று வியாசர் நமக்கு உணர்த்தினார்.

மேலும், வசிஷ்டாத்துவம் காட்டிய நிலைகள் கொண்டு
நம் உடலுக்குள் அனைத்து நிலைகள் இருப்பினும்,
நஞ்சினை அடக்கி
நல் உணர்வின் தன்மையை வளர்க்கும்
ரிஷியின் தன்மையைப் பெறும்
நன்னாளாக எண்ணுவதுதான் பூணூல் பூட்டும் நாள்.

அன்று நல்ல நெறிகளை வளர்ப்பதற்கு பூணூல் பூட்டும் முறை உருவாக்கப்பட்டது.

ஆனால், இன்று சாஸ்திரம் என்றும் சம்பிரதாயம் என்றும் என் மதம், என் இனம் என்ற நிலைகளில்தான் இந்தப் பூணூல் பூட்டும் நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்றோம்.