ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2014

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் கார்த்திகேயா

நாம் தீமையிலிருந்து எப்படி மீளவேண்டும்? எதனின் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக குருநாதர் பல இடங்களுக்கு எம்மைக் கூட்டிச் சென்றார். எது எப்படி உன் உடலில் மாற்றமாகிறது என்று சொல்வார்.

நம் உடலில் மாற்றமாகும் பொழுது அந்த மாற்றத்தின் தன்மையை நாம் அறிந்துகொள்ளும் பொழுது நமது சொற்கள் பிறரை எப்படி நமக்கு எதிரியாக மாற்றுகின்றது?

நம் உடலின் உறுப்புகளும் குணங்களும் எவ்வாறு மாற்றமடைகிறது? என்று ஒவ்வொரு நாளும் தெளிவாகக் காட்டினார்.

தியானத்திலிருப்பவர்களுக்கு திடீரென்று கோபம் வந்தால் தெரியும். இப்படி கோபம் வருகிறதே என்று சிந்திப்பீர்கள்.

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது
அவன் வேண்டுமென்றே செய்கிறான்
அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன்,
அவன் பகைவன் என்ற உணர்வை எடுக்கிறோம்.

அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக அவனைப் பழிதீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது. இது இயற்கையான உணர்வுகள்தான்.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

நம் குடும்பத்தில் குழந்தைகள் மேல் பாசமாக இருந்தாலும் கூட நம்மையறியாமலே அவர்களை வெறுப்பாகப் பேசச் சொல்கிறது.

அதே சமயத்தில் நம் நண்பர்கள் உதவி செய்யும் நிலையில் இருந்தாலும் நம்மையறியாமலே நம்மை வெறுத்துப் பேசவைக்கிறது. இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒருவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்துவிட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது.

நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம். அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம்.

“என்னை இப்படிச் சொன்னார்கள்..,
எப்படிச் சொல்லலாம்? அவர்களை விடலாமா..,?”
என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. 

அப்படி மாற்றியமைத்ததும் நம்மைச் சந்தோஷப்படச் செய்த அணுக்களெல்லாம் இதை ஏற்றுக் கொள்ளாது மறுக்கப்படும் பொழுது கை கால் குடைச்சல், கிறுகிறுப்பு என்று வந்துவிடுகின்றது.

நல்ல அணுக்களுக்குச் சரியான சாப்பாடு கொடுக்கவில்லை என்றால்
நம் நல்ல எண்ணங்களுக்கு வலு கொடுக்கும் நிலை இல்லாமல்
அடுத்தவர்களைப் பற்றி எண்ணும் பொழுது
திடீரென்று மயக்கம் வரும்.
எதிர்பாராத மயக்கத்தினால் சிந்தனையற்ற நிலை வந்துவிடுகின்றது.

இதை யார் செய்தது? நாம் வேண்டாதவர்களை நுகர்ந்தவுடன் உயிர் இதைச் செய்கிறது.

நாம் பல கோடி சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி எது நல்லது? எது கெட்டது? என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை ஆறாவது அறிவு.

ஒரு தீபத்தை ஏற்றியவுடன் இருள் நீங்கி வெளிச்சத்தில் பொருள் தெரிவதைப் போன்று சர்வ கோடி தீமைகளையும் வென்று, நஞ்சினை வென்று உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் கார்த்திகேயா.

ஆக, நமக்குள் வரும் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றோம். அதே போன்று,
நமக்குள் அறியாது வரும் நோய்களையும் அகற்ற முடியும்,
பகைமைகளையும் அகற்ற முடியும்.