ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2025

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?


ஆலயங்களுக்குச் செல்வோர் இன்று பெரும்பகுதியானவர்கள் எப்படி வணங்குகின்றார்கள்…?
 
1.என் பையனை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்அவன் இப்பொழுது என்னை எதிர்க்கின்றானே…!
2.எனக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் ஒத்துக் கொள்ளாத நிலைகளில் வேதனைகளை நீ அனுபவிக்கச் செய்கின்றாயா…?
3.எத்தனை காலம் தான் நீ என்னை சோதிக்கின்றாய்…? என்று தீமையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.
 
கையிலே விஷத்தைத் தடவி அப்படியே அடுத்த பொருளை எடுப்பது போன்று தான் செயல்படுகின்றோம்.
 
ஆனால் ஞானிகள் காட்டியதோஆலயத்திற்குள் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்களை எண்ணித் தியானித்து அந்தச் சக்தியைத் திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைதான் அதாவது நல்லதை வளர்ப்பது தான் தியானம்…”
 
ஒருவன் நம்மை ஏசி விட்டாலோ பையன் மீது பற்று இருந்து அவன் தவறு செய்கின்றான் என்று ஒரு முறை ஆழமாகப் பதிவு செய்து விட்டாலோ இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே…! என்று தியானிக்கின்றோம்…
 
1.அதனின் உணர்வு நமக்குள் அவனை வெறுக்கும் நிலையாக அந்த வெறுப்பு வளர்ந்து
2.நம் சொல்லைக் கேட்போருக்கு நம்மை வெறுக்கும் நிலையும்
3.அதே வெறுக்கும் நிலை வியாபாரத்தில் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது என்னைப் பார்க்கும் போது வெறுப்பாகி
4.நம் வியாபாரமும் மந்தமாகி விடுகிறது.
 
இது மட்டுமல்ல…! வாழ்க்கையில் எங்கே சென்றாலும் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு போன்ற உணர்வுகளை அடிக்கடி எண்ணினோம் என்றால் இதெல்லாம் தியானம் தான்…”
 
இந்தத் தியானத்தின் பலன் நாம் தொழில் செய்யும் இடங்களிலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகி அதையே மீண்டும் எண்ணி இவனும் இப்படிச் செய்கின்றான் அவனும் இப்படிச் செய்கின்றான் எல்லோரும் மோசமானவர்கள்…! என்று இதைத் தியானிக்கிறோம்…”
 
மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தை நீக்கி சுவை மிக்கதாகப் படைக்கின்றோம். இதே போல தங்க நகை செய்யும் போது செம்பும் வெள்ளியையும் வைத்து அழகான ஆபரணமாகச் செய்தாலும்பின் மீண்டும் அதை அழித்துப் புதிய நகை செய்ய வேண்டும் என்றால் திரவகத்தினை ஊற்றி அதனுடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் ஆவியாக்கி நீக்கிவிட்டுச் சுத்தமான நிலையில் மீண்டும் நகையைச் செய்கின்றோம்.
 
இதைப் போன்று தான்
1.இந்த மனித வாழ்க்கையில் துன்பப்படுவோருக்கு நாம் நன்மைகள் செய்தாலும்
2.நம்மை அறியாமல் பிற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது துரிதமாக இயக்கி வேதனைப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தினாலும்
3.அதைத் துடைக்காது விட்டு விட்டால் நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.
 
இப்படி மீண்டும் மீண்டும் நல்ல குணங்களை மறைக்கும் செயலாக அந்தத் தீமைகளைத் துடைக்காது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை அடுக்கடுக்காகச் சேர்த்துக் கொண்டே வந்தால் நல்ல உணர்வுகளை எல்லாம் நாம் செயலற்றதாக மாற்றி விடுகின்றோம்.
 
நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சரீரத்தைப் பாழ்படுத்தி நம் எண்ணத்தையும் சொல்லையும் மற்றவர்கள் கேட்கப்படும் போது அங்கேயும் பாழ்படுத்திக் கொள்ளும் நிலையாக உருவாகி விடுகிறது.
 
1.ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை ஒவ்வொரு நாளும் தியானிக்கின்றோம்…?
2.சங்கடத்தையும் சலிப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வேதனையும் தான் நாம் தியானிக்கின்றோம்.
 
இதிலிருந்து விடுபட வேண்டும் அல்லவா…!
 
ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி விநாயகரைப் பார்க்கப்படும் போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தியானித்து எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கிடைக்க வேண்டும்அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால் கீதையிலே சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
 
1.பிறர் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.விளைந்த அந்த உணர்வின் சொல் கேட்போர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி விடுகின்றது.
 
நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்…? நாம் எடுக்கும் தியானம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்கள்.
 
நல்லது செய்யும் பொழுது மறைந்த நிலையில் தீமைகள் நமக்குள் உள் சென்று நல்ல குணங்களை இயக்கத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தத் தடைகளை நீக்க..
1.அருள் ஞானிகளின் உணர்வைத் தியானித்து உள் செலுத்தித் தீமையை அகற்றிடும் நிலையாக
2.ஆறாவது அறிவால் இயற்கையில் விளைந்த நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை அதற்குள் சேர்ப்பித்து சுவை மிக்கதாகப் படைப்பது போல
3.எது நல்ல குணமோ அதை நம் வாழ்க்கையில் மீண்டும் சுவைமிக்கதாக மாற்றும் நிலையாகத் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.
 
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த நன்மையின் நிலைகளைக் காத்திடவும் அந்த நன்மைகள் உங்கள் உடலைக் காத்திடவும் பிறருக்கு நன்மை செய்த அவர்களைக் காத்திடவும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று உங்களை அறியாத வந்த தீமைகளை நீக்க ஒருரிமோட் கண்ட்ரோல்…!”
 
அதாவது ஒரு வேப்பமரம் தன்னுடைய கசப்பான மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் தன் அருகிலே மற்ற நறுமணங்கள் வந்தாலும் அதை வர விடுவதில்லை. இதே போன்று தான் ரோஜாச் செடி மற்ற மணங்களைத் தன் அருகிலே வர விடுவதில்லை.
 
இதைப் போல கோபம் கொண்டவர்கள் சாந்தமாக ஒருவர் பேசினால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும். சாந்தமானவர்களுக்கு கோபமாகப் பேசுபவர்கள் செயலைப் பார்த்தபின் அவர்களுக்கு அந்த வேதனை வருகின்றது.
 
ஆனால் தாவர இனங்கள் அனைத்தும் மற்ற மணங்களைத் தன் அருகிலே வரவிடாதபடி ஒதுக்கி விடுகின்றது. மனிதர்களோ
1.அதே மணத்தைக் கொண்ட எண்ணங்களை நாம் நுகர்ந்து தான்அறிய முடிகின்றது.
2.ஆனால் தாவரங்கள் நுகராது தன் வலுவால் மணத்தால் ஒதுக்குகின்றது.
 
அதே தாவர இனச் சத்து மனிதனுக்குள் வரும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்துபின் இதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. ஆனால் உள் சென்று தான் வெளி செல்கின்றது.
 
உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் உண்டான வித்தியாசம் இது தான்…!
 
இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற தங்கத்திலே திரவகத்தை ஊற்றுவது போல மகரிஷிகள் உணர்வை நமக்குள் நுகர்ந்து தீமைகள் புகாது காத்திடும் நிலையே அருள் ஞானிகள் காட்டிய தெய்வப் பண்புகள்.
 
எத்தகைய துயரம் ஏற்பட்டாலும் ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று தியானித்தால் இந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.
 
நான் சொன்ன இந்த முறைப்படி தியானித்தால் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்….! (ஞானகுரு)