ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2022

உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்… உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

நம்மைத் திட்டியவனை எண்ணும் போது அவனைச் சும்மா விடலாமா…? கொலை செய்யலாமா…? என்று கூட எண்ணம் வந்துவிடுகிறது. நம் பிள்ளைகளாக இருந்தாலும் கூட வெறுக்கும் தன்மையே வருகிறது.

இது எல்லாம் கலி தான்.

1.வெறுக்கும் தன்மை கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது
2.அல்லது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் போது
3.நம் உடலுக்குள் அதே உணர்வாகக் கலி ஆகி
4.மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களை நமக்குள் நாம் கொலை செய்துவிடுகின்றோம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அந்த வலுவான விஷத் தன்மைகள் மனிதனை உருவாக்கும் அணுக்களை… அதனுடைய செயலாக்கங்களை மாற்றி விட்டால் கலியாக மாறுகின்றது நமக்குள்ளேயே.

மற்ற விஷத்தின் தன்மையைப் பெருக்கி மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகள் பெற்றுவிடுகின்றது. இதை நாம் மாற்ற வேண்டுமல்லவா.

1.ஒவ்வொரு உடலையும் காக்க… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் தான் வருகிறது.
2.இந்த உடலைக் காக்கத் தான் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி இயக்கச் சக்தியாக வருகிறது.

இது யாரால் இயக்கப்படுகிறது…?

நம் உயிரால் தான் இயக்கப்படுகிறது என்பதை மனிதனான பின் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன். ஆகவே அவன் கூறிய வழிப்படி பார்த்தோம் என்றால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகிறது.

அவன் நமக்குள் இருக்கப்படும் போது…
1.அவனை எண்ணி உயர்ந்த ஞானியின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அதனை நம் உடலுக்குள் உருவாக்குவதும் அவனே தான்
2.அந்த ஞானத்தின் வழியில் எண்ணும்போது அந்தச் சுவையின் எண்ணங்கள் வருகிறது
3.அந்த எண்ணத்தின் அடர்த்தியானால் தீமையை நீக்கிடும் வலுவாகிறது.
4.தீமையை நீக்கிடும் வலுவாக்கப்படும் போது அந்த உயிரின் இயக்கத்தால் தீமைகள் நமக்குள் புகாத தன்மை வருகிறது.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று மனிதனான பின் நாம் எல்லாவற்றையும் அறிந்திடும் உணர்வு வருகிறது… கார்த்திகேயா. நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வினை… அந்த நஞ்சினை மலமாக மாற்றிடும் உடலாக மாற்றிவிடுகிறது நம் உயிரே தான்.

அவன் தான் இத்தனை செயலுக்கும் காரணம்…!

எதை இந்த உடலில் ஆசைப்படுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றான். ஆகவே தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வு பெற்ற பின் நஞ்சை ஒளியாக மாற்றுகின்றான்.

இதைப் பெறக்கூடிய தகுதியாக எல்லோரும் வர வேண்டும் என்பதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு (ஞானகுரு) எப்படிப் போதித்தாரோ
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கப்படும் போது
2.வசிஷ்டர் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையின் தன்மையை நீங்கள் அதிகமாக வளர்த்தால் “அது பிரம்மமாகி…”
3.உயிரைப் போன்று அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறி நாம் கல்கியாகின்றோம்.