ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2022

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

குடும்பத்தில் அன்புடன் தான் வாழ்கின்றோம். பிள்ளை அமெரிக்காவில் இருந்தாலும் “என் பிள்ளை ஒரு மாதமாகத் தபால் போடவில்லையே…” என்று தாய்க்குள் வேதனையின் உணர்வின் தன்மை வரும் போது அது வலுவான உணர்வுகளாக வருகின்றது… பாச உணர்வு இயக்குகிறது.

அந்த வேதனையின் உணர்வுகளைப் பாசத்தால் தாய் பதிவு செய்கிறது. பாசத்தின் உணர்வு கொண்டு குழந்தையை எண்ணி வேதனைகளைப் பாய்ச்சப்படும் போது அங்கே என்ன நடக்கிறது…?

தாய் வெளிப்படுத்திய வேதனை உணர்வு
1.அங்கே (அமெரிக்காவில்) அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அது நுகரப்பட்டு… சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
2.மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து காயமாகின்றான்.

அப்போது… நான் நினைத்தேனே… அது போல் ஆகிவிட்டதே…! என்று தாய் மீண்டும் வேதனைப்படுகிறது. ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனையுடன் எண்ணப்படும் போது… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ…? என்ற பதட்ட உணர்வின் இயக்கம் தான்…” அங்கே குழந்தையை அவ்வாறு இயக்குகிறது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தபால் போடவில்லை… சரி…!
1.இருந்தாலும் மன வலு கொண்டு உறுதியான நிலைகள் கொண்டு
2.தபால் வருவதில் ஏதோ மாற்றங்கள் இருக்கலாம்… என்று இதை மாற்றி விட்டால்
3.தபாலின் மாற்றங்களாகத் தான் நாம் அறிந்து கொள்ளக் கூடிய தன்மை வரும்.
4.பின்னாடி பார்த்தோம் என்றால் ஓ… தபால் தேங்கி வந்தது…! என்ற நிலை வரும்.

ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனை உணர்வு கலக்கப்படும் போது எந்தக் குழந்தை மேல் பாசமாக இருந்தோமோ… அங்கே இயக்கப்பட்டுச் சிந்தனை இழக்கச் செய்து குழந்தை தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்ல சந்தோஷமாக இருக்கின்றோம் என்று பதிவாக்கிக் கொள்கிறோம். கூட்டாகத் தொழிலும் செய்கிறோம்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் ஏதோ மந்தமாகி விட்டால் இவன் எனக்குத் துரோகம் செய்கிறான்… இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய்…! என்ற கோப உணர்வுகள் பதிவாகத் தொடங்கிவிடுகிறது.

இருவரும் சேர்த்து தொழில் செய்யும் போது பொருள் நஷ்டமான பின்… இரண்டு பேருமே துரோகம் செய்தான் பாவி…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலை வருகிறது.

உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது… உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது…! என்று இருவருமே அடிக்கடி சொல்லத் தொடங்குவார்கள்.

1.இப்படி இரண்டு பேருக்குள்ளும் ஆகிப் பிரிவு ஏற்பட்ட பிற்பாடு
2.அடுத்து அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி…
3.இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது.
4.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேரும் தான் கெடுகின்றனர்.

இதைப் போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சிறு திரைகளாக அமைந்து நம் நல்ல குணங்களை அது மறைத்துச் சிந்தனை என்ற நிலை நமக்குள் வருவதில்லை. ஆகவே தெளிந்த மனதுடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்குத் தான் சித்திரை… புது வருடப் பிறப்பைக் கொண்டாடுகின்றோம்.

எப்படி..?

நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடிய நிலைகளில் இருந்து
1.என் நண்பன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் குழந்தை கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்
3.கணவன் மனைவி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்தல் வேண்டும்.
4.யாருடன் பகைமையாக இருந்தாலும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வர வேண்டும்
5.அருள் உணர்வு பெற வேண்டும் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்.

இப்படி எண்ணும் போது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம். சிறு திரைகளை நீக்கிவிடுகின்றோம். பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்.

நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வரும் போது நம்மை அறியாது ஒருவருக்கொருவர் இயக்கும் தீமையான உணர்வின் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அதற்குண்டான பயிற்சி தான் இது.