பண்புகளை இழந்து நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது தையா…தக்கா… என்று ஆடுவதும் ஆணும் பெண்ணும் மோதுவது போல் செயல்படுத்துவதும்… இது தான் இன்றைக்கு இருக்கும் ஆடல் பாடல் கொண்டாட்டம் எல்லாமே.
கழுதை கத்துகிற மாதிரியும்… குதிரை கத்துகிற மாதிரி ஊளையிடுவதும்… அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் கொண்டு ஆடுவது தான் இன்றைய டான்ஸ் (DANCE).
ஆடுவதைப் பார்த்தால் ஏய்….ஊய்… என்று அவனையே பைத்தியக்காரனாக ஆக்கும் நிலையில் இது தான் கலாச்சாரமாகப் போய்விட்டது.
ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?
மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எதிர்படும் உணர்வுகளால் மனது சோர்வடைகிறது. அதனால் உள் உறுப்புகள் சோர்வடைந்து பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதைச் சீராக்குவதற்காக வேண்டி…
1.இனிமையான இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்குத் தக்க அபிநயங்களைக் காட்டப்படும் போது
2.உள் உறுப்புகள் இயக்கமாகி உடலில்… சிக்கல் உள்ள நீர்களை மாற்றுவதும்
3.தும்மல் வரும் போது ஒரு பக்கம் சிக்கலானால்… இங்கே அபிநயமாகும் போது அந்தச் சிக்கலை மாற்றி
4.உடல் நலம் பெறுவதற்கும் மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்வதற்கும் நாட்டியங்களாக (ஆடல் கலைகள்) உருவாக்கினார்கள்.
ஏனென்றால் மனிதன் வேகமாக இருக்கும் போது உள் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் சிக்கலாகி விட்டால் அதனால் இருமல்கள் வரும்.
1.அடிக்கடி விரிவடையவில்லை என்றால் அழுத்தங்கள் அதிகமாகும்
2.அப்போது நுரையீரலில் எதிர்ப்பாகிவிடும்.
3.நாளடைவில் அந்த உறுப்பே பாழடைந்து விடுகிறது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் கலை அபிநயம் கொண்டு உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தனக்குள் தோற்றுவிக்கும்படி செய்தார்கள்.
1.தன்னை அறியாது உடலில் உண்டாகும் நரம்புப் பிடித்தங்களையோ
2.உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்கலையோ நீக்குவதற்கு அதைச் செயல்படுத்தினார்கள்.
ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் தையா… தக்கா… என்று குதித்து தவறான உணர்வுகளைத் தூண்டி… கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து… மாடுகளைப் போல் நம்மை ஆடும்படி வைத்துவிட்டார்கள்.
குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?
விளக்கை (ஜோதியை) ஏற்றி வைத்துச் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்து…
1. அவன் உலக ஞானம் பெற வேண்டும்
2.உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும்
3.குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக வேண்டும்
4.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும்
5.பண்புள்ளவனாக வளர வேண்டும் பரிவுள்ளவனாக வளர வேண்டும் என்று வாழ்த்துக்களைச் சொல்லி
6.பாடலைப் பாடி அவனை மகிழச் செய்து… உன்னுடைய வழி எப்படி இருக்க வேண்டும்…?
7.அன்னை தந்தையரால் நீ வளர்க்கப்பட்ட நிலைகள் என்ன…? கல்வியின் தரங்கள் என்ன…? கருத்தின் தன்மை என்ன…? என்ற
8.இந்த உணர்வுகளின் தன்மை எடுத்துப் பாடலின் ரூபமாக அவனுக்கு எடுத்துக் கூறியது தான் அக்கால வழக்கங்கள் – ஆடல் பாடல்கள்.
அதை யாராவது நாம் இப்போது செய்கிறோமா என்றால் இல்லை. இதைச் சொன்னால் அநாகரீகம் என்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்.
எரியும் வெளிச்சத்தை ஊதி அணைத்து இருள் சூழச் செய்து… எல்லோரும் சப்தமிட்டு… அதன் பின் கேக்கைக் கத்தியால் அறுத்துக் கொடுப்பது தான் நம்முடைய கலாச்சாரமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.