இந்த உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டவர்கள் ஒவ்வொருவருமே தியானத்தை வழி நடத்த முன் வர வேண்டும்.
தியானம் முடிந்த பிற்பாடு யாருக்காவது உடல் நலம் சரியில்லை சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு வாத நோய் இருந்ததென்றால்… அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
3.நோய் நீங்க வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று
4.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.
இந்தப் பழக்கத்தை நாம் எங்கே சென்றாலும் கொண்டு வர வேண்டும். இங்கே சொல்லிக் கொடுப்பதை ஒருவர் செய்தாலும்… மற்றவர்களும் நான் செய்கின்றேன்…! என்று முன்னுக்கு வர வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்கள் இதை வழி நடத்த வேண்டும்.
1.ஏனென்றால் எம்மைச் சந்தித்தவர்களுக்கு இந்த அருள் வாக்கினைக் கொடுக்கின்றோம்.
2.கணவன் மனைவியாக இந்தக் கூட்டமைப்பினை உருவாக்கி வழி நடத்த வேண்டும்.
ஒரு கட்டுப்பாடான நிலைக்கு வர வேண்டும்.
குறைகளைக் கண்டால் அந்தக் குறையைப் பற்றிப் பேசக் கூடாது. அதை நிவர்த்தி செய்வதற்கு என்ன மார்க்கமோ அதை எடுத்துப் பேச வேண்டும்.
உதாரணாமக ஒரு இடத்தில் தூசி விழுந்தால்… பிசின் மாதிரி இருக்கிறது. அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலே எண்ணை விட்டால் போகாது. சோப்பைப் போட்டுத் தண்ணீரை விட்டால் போய்விடும்.
ஆனால் எண்ணையுடன் சேர்ந்த அழுக்காக இருந்தால் தண்ணீரை விட்டால் போகாது. அதற்குக் கிரசினை விட்டுத் தான் தூய்மைப்படுத்த வேண்டும்.
1.ஆகையினால் எது எதற்கு எப்படிச் செய்ய வேண்டும்…? என்ற நிலைப்படுத்தி
2.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அறியாது வந்த தீமைகளை நீக்கக்கூடிய சக்திகளை நாம் பெற வேண்டும்.
நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும். அதற்குத் தான் இந்தத் தியானமே…!
தியானம் என்றால் என்னமோ ஏது என்று இல்லை.
1.உங்கள் எண்ணங்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு சென்று
2.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் போது நீங்கள் அந்த நிலைக்கே ஆளாகின்றீர்கள்.
அதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.
என்னைப் (ஞானகுரு) போன்று நீங்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற வேண்டும். நான் எப்படிச் சொல்வது…? என்று கூச்சம் இல்லாதபடி தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி ஒரு பழக்கத்தைக் கொண்டு வந்து
1.உலக மக்களுக்கு வழி காட்டக் கூடிய தன்மைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்
2.நீங்கள் ஒவ்வொருவருமே ரிஷியாக வேண்டும்.
உங்கள் பார்வையில் மற்றவர்கள் தீமைகளையும் துனபங்களையும் பிணிகளையும் போக்கக்கூடிய சக்தி பெற வேண்டும். அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம்.
குறைகளையோ மற்ற நிலைகளையோ காண நேர்ந்தால்
1.அதை நீக்கும் உபாயங்களைச் சொல்லுங்கள்
2.அந்தக் குறைகளையே பேசி அதையே வளர்க்கும் நிலை இல்லாதபடி
3.துணிவுடன் அதை நீக்கும் முறைகளை எடுத்துக் காட்டி அந்த அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும்படி செய்யுங்கள்.
அருள் உணர்வின் மீது பற்று கொண்டு மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி வாழச் செய்யும் அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்யுங்கள். அருள் வழியில் வளர வேண்டும் என்று நமது குரு அருளை அனைவரையும் பெறச் செய்யுங்கள்.
எல்லோரும் மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெறச் செய்யும் அந்தத் திறனை நீங்கள் பெற வேண்டும் என்று நமது குரு அருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு). நாம் அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.
உலக மக்கள் அறியாது சேர்த்துக் கொண்ட பகைமைகள் நீங்கி அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திட மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்…! என்று பிரார்த்திப்போம்.
1.சாமானியர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யும் சக்தியாக
2.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை உருவாக்குவோம்.