இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.”அநீதியையே நீதி…” என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.
இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”
சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியாத பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.
இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும்… செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில்… தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.
அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.
நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.
இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”
இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.
விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?
இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.
இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.
இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது...!
இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.
அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.
ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!
வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.