உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.
காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.
இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?
ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.
மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.
காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.
அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்... அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.
உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.
அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.
இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.
எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.
ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.