உதாரணமாக நம்மிடம் ஒருவர் கடன் வாங்கிச் சென்ற பின் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “அவர் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்...” என்று தான் எண்ணுகின்றோம். கோபமும் வேதனையும் படுகின்றோம்.
கடனைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை என்று அடிக்கடி அவர்களும் வேதனைப்பட்டால்
1.அந்த உணர்வுடன் வியாபாரம் செய்தால் நஷ்டம்தான் வரும்... வியாபாரம் ஆகாது...!
2.அவர்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றால் நமக்கும் பணம் வராது.
3.இத்தகைய நிலையில் நாம் அவர்களைத் தேடிச் சென்றாலும்
4.பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களைச் சாபமிடும் நிலைகள் தான் வருகின்றது
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
ஈஸ்வரா... என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்... எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முதலில் நாம் தியானிக்க வேண்டும்.
பின்... நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அவர் குடும்பத்திலுள்ளோர் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யும் தொழில் முழுவதும் படர வேண்டும்
3.அவருடைய தொழில் நன்கு விருத்தியாக வேண்டும்
4.அவருடைய வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்
5.அவருக்குத் தொழிலில் லாபம் வர வேண்டும்
6.நம்மிடம் வாங்கிச் சென்ற பணத்தினைத் திரும்பக் கட்டும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்
7.அவர்களும் நன்றாக ஆவார்கள்... வர வேண்டிய பணமும் வந்து சேரும்.
இந்த முறைப்படி அவரை எண்ணி நாம் தியானிக்கும் போது அவர் மேல் பட்ட வேதனையோ கோபமோ நமக்குள் அணுவாக உருவாகாது... நோயாகவும் மாறாது... நம்முடைய வியாபாரமும் கெடாது.
ஆனால் கடனை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டால் நம் வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கிறது. மன நோயாகி உடல் நோயும் ஆகின்றது.
ஆகவே நம் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்ற நிலையில் பயன்படுத்தி அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து மேலே சொன்ன மாதிரித் தியானிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
அதே போல பிள்ளைகளை நினைக்கும் பொழுது சரியாகப் படிக்கவில்லையே என்று நினைக்கின்றோம். ஆனால் அப்படி நினைத்து வேதனைப்படாது
1.அவன் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும்
4.குடும்பப் பற்று வளர்ந்து... குடும்பத்தைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.
இதே போல் குடும்பத்தில் உள்ளோர் யாராவது குறைகளைக் கூறினால் அவர் குறையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வினை எடுத்தால் அவருடைய குறை உணர்வு நமக்குள் வராது.
இது தான் உண்மையான விரதம்...!
அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க நம்முடைய சொல்லும் செயலும் பிறருடைய தீமைகளை நமக்குள் விடாதபடி தடுக்கும் சக்தியாக வரும்.
1.அதே சமயத்தில் அவர்கள் நம்மை எண்ணும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் அவர்களைத் திருந்தி வாழச் செய்யும்.
ஆகவே நாம் அதிகாலை எழுந்தவுடன் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை வலு ஏற்றிக் கொண்டு பிறரின் தீமையான உணர்வை நுகராதபடி குறைந்தது 10 நிமிடமாவது இந்த எண்ணத்தைக் கூட்டிப் பழக வேண்டும்.
பின் எங்கள் குடும்பத்தில் பண்பும் பரிவும் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெற்று நலமும் வளமும் பெற வேண்டும்.
நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அந்த அருள் ஒளி படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய நாம் தியானிக்க வேண்டும்.
1.அப்பொழுது அந்த அதிகாலை நேரத்தில் தீமைகளை நுகராது
2.அருள் ஞானத்தை உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது
3.பற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் வருகின்றது
4.மற்றவர்கள் மீது பற்றற்ற நிலைகளை நாம் மாற்றிக் கொள்ள முடிகின்றது
அதே சமயத்தில் அவர்களையும் அந்த உயர்ந்த உணர்வை துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் படி செய்கின்றோம். இது எல்லாம் இந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.