ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2021

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

  

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்று இப்படி நான்கு ஐந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக அமைத்து விட்டது.

சூரியன் தனக்குள் கோள்களை வளர்த்து... நட்சத்திரங்களையும் வளர்த்து... தனித் தன்மையாக முதலில் எப்படி உருவானதோ அதைப் போல
1.இதிலே வளர்ச்சியடைந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
2.நம் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சமாக உருவாக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து தனக்கென்று ஒரு குடும்பமாகிப் பிரிந்து செல்கிறார்கள் அல்லவா...!

அப்பொழுது அங்கிருக்கும் தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். கொள்ளுப் பேரன் என்றெல்லாம் வந்த பிற்பாடு யாரையாவது பார்க்க முடிகின்றதா...! அல்லது அப்படியே இருந்தாலும் வயதானவர்களை அவர்கள் கவனிப்பதில்லை.

இதே மாதிரித் தான் இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சூரியனாக மாறும் பொழுது இது உருவாகக் காரணமாக இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகின்றது.

உதாரணமாக நம் உடல் அழிந்த பின் பார்த்தோம் என்றால்... அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் அந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளி வந்துவிடுகின்றது.

1.ஆனால் நல்ல உடலாக இருக்கும் போது முதலில் வெறும் அணுக்களாகத் தான் இருந்தது
2.பின் உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது.
3.உயிரணுக்களாக ஆன பின் அதனதன் உணர்வுகளை தன் இரைகளைத் தேடி அதன் வளர்ச்சி பெறுகின்றது.

மனிதன் இறந்தால் அந்த உடலிலே உருவாகும் அந்த உயிரணுக்கள் மற்ற உடலிலே சேர்த்து அதை உணவாக எடுத்து வளர்க்கும் தன்மை வருகின்றது.

அதைப் போலத் தான்...
1.சூரியன் அழிந்தால் அந்த உணர்வுகள்
2.புதிதாக உருவாகும் பிரபஞ்சங்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

சூரியன் அழிந்த பின் அந்த உணர்வின் சக்தி ஒரு புயல் போன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு கோளோ அல்லது மற்ற பாறையோ அதில் சிக்கினால் அதை மீண்டும் ஆவியாக மாற்றித் தனது நிலைகளுக்குள் பரப்பும்.

அப்பொழுது இந்தப் புதிய பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதைக் கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

குருநாதர் அவர் கண்ட அகண்ட அண்டத்தின் உண்மைகளை எல்லாம்
1.உன்னால் நுகர முடியும்... பார்க்க முடியும்... என்று தான் எனக்குச் சொன்னார்.
2.அவர் சொன்ன வழியில் இதை எல்லாம் நான் (ஞானகுரு) பார்த்துத் தான் சொல்கிறேன்.
3.நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவாக்கும் பொழுது இது வளர்ச்சி அடைய அடைய நமது பிரபஞ்சமும் நமது பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து எப்படி உணவு கிடைக்கிறது...? என்பதையும் நீங்கள் அறிய முடியும்.

ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் தான் இத்தனையும் பேசுகிறேன். இருந்தாலும் படித்தவர்கள் நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் எடுக்க முடியும்.

எனக்குக் குறித்து வைக்கக் கூட நேரமில்லை. குருநாதர் சொன்னதை மனதில் பதிய வைத்து அதைத்தான் உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன்.

நீங்கள் சொன்னதை இரண்டாவது தரம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்
1.வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவு இல்லை
2.குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் கொண்டு எனக்குள் அது பதிவான பின்
3.நினைவு கொண்டு எண்ணும் போது அந்த உணர்வை அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை இப்பொழுது வெளிப்படும் பொழுது செவி வழி நீங்கள் கேட்ட பின் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது. கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நீங்கள் வளர்த்துக் கொண்டால் நான் எதையெல்லாம் பார்த்தேனோ...
1.அதையெல்லாம் நீங்களும் காட்சியாகக் காண முடியும்
2.தீமைகளை அகற்றும் அந்த வல்லமையும் நீங்கள் பெற முடியும்.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கினால் பிறவியில்லா நிலையையும் நீங்கள் அடைய முடியும்.