ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2021

உட்கொள்ளும் உணவு பிடிக்கவில்லை என்றால் எப்படி வெளியே தள்ளுகிறோமோ அது போல் தீமைகளை உந்தி வெளியே தள்ள வேண்டும்

 

காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றேன்... அதற்குத்தான் உபதேசங்கள் வாயிலாக இங்கே பதிவாக்குகின்றேன் (ஞானகுரு)

மீண்டும் மீண்டும் இதை நினைவு கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கின்றது. இருளைப் போக்கிடும் சக்தியாக வளர்கின்றது.

1.ஆகவே உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சங்கடங்களைப் பார்க்கின்றீர்களோ
2.உடனே ஓ...ம் ஈஸ்வரா... என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியன் துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது அந்த நேரத்தில் அதை நுகரும் பொழுது உங்களுக்குள் அதீதமாக வளருகின்றது.

ஏனென்றால் அன்றாடம் காலையில் இருந்து இரவு வரை பார்த்தால் எத்தனையோ உணர்வுகள் நம் மீது மோதுகின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை போன்ற இத்தனை உணர்வுகளும் நமக்குள் பதிவாகின்றது.

1.இந்த பதிவின் தன்மைகள் அனைத்தும் நம் ஆன்மாவில் இருக்கின்றது.
2.நம் உடலில் உள்ள அணுக்கள் அது ஒவ்வொன்றையும் வரிசையாக நுகர்ந்து சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரிலே மோதிய பின் அந்த எண்ணங்கள் எல்லாம் வரத் தொடங்குகின்றது.

நாம் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட... அவன் சண்டை போட்டான்... இவன் ஏமாற்றினான்... தொழில் இந்த மாதிரிப் போய்விட்டது... என்ற எண்ணங்கள் எல்லாம் வருகின்றது.

ரோட்டில் சென்றாலும்... நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட எத்தனையோ இது போன்று நமக்குள் அன்றாடம் பதிவாகிக் கொண்டே வருகின்றது.

இப்படிப் பதிவான உணர்வுகள் விளைய ஆரம்பிக்கும் போது நமக்குள் அந்த உணர்வுகள் அதனதன் உணர்வை உணவாக எடுத்து ஆன்மாவிலிருந்து நுகருகின்றது.

நுகரும் பொழுது உயிரில் பட்ட பின் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கிறது அப்பொழுது நல்ல அணுக்கள் சோர்வடைகிறது... சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
1.இந்த இடத்தில் யார் தவறு செய்தது...?
2.யாரும் தவறு செய்ய வில்லையே...!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் வேதனைப்படுவர்களைப் பார்க்கின்றோம். இந்த வேதனையான உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அது வேதனைப்படச் செய்யும் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் துருவ நட்சத்திரம் நீக்கியது. அந்த அரும் பெரும் சக்திகளை நுகரும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம் இந்த உபதேச வாயிலாக.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்தால்
2.அது தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வருகின்றது.

இயற்கையில் சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மம் ஆகின்றது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மனிதன் உருவாக்கி அருள் உணர்வுகளை உயிர் வழி நுகர்ந்து உருவாக்கினால் அது பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவை சிறைப்பிடித்தான் முருகன்...!

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகள் கொண்டு தீமை வருகிறது என்று தெரிந்து கொண்டபின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று உணர்வாக எடுத்தால் தான் அதை உருவாக்க முடியும்.

இதுவும் சந்தர்ப்பம் தான். அப்பொழுது தீமையை நீக்கும் சக்தியாக அது வரும். இது நம்மால் முடியாதா...?

என்னைத் திட்டினான்...! என்று சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்டபின் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்...!” என்று நாம் சொல்கின்றோம். இந்தத் தீமையான உணர்வு நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் அல்லவா...?

தடுக்காமல்... சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை அப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் அந்தத் தீமையான உணர்வுகள் உடலிலே விளையும்.

சாபங்கள் இடுவதும்... கொதித்துப் போய்ப் பேசுவதும்... அடிப்பேன் என்பதும்... குத்துவேன் என்பதும்... கொன்று விடுவேன்... என்றும் இது போன்ற உணர்வெல்லாம் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.

1.விளைந்த பின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவது போன்று குத்த ஆரம்பிக்கும்.
2.அந்த மாதிரியாக ஆன பின் ஐய்யய்யோ.. அம்மம்மா...! வேதனையாகச் சொல்லும் நிலை தான் வரும்.

பிறரை கொல்ல வேண்டும் எண்ணினோம்...! அந்த உணர்வுகளை நுகர்ந்த பின் அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்குகிறது.

அப்பொழுது நாம் தான் அந்த வேதனையை அனுபவிக்கின்றோம்.

பிறரைக் குத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் அதனின் வீரியத் தன்மை உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது.

1.ஆகவே நாம் அருள் உணர்வு பெற வேண்டும் என்று இங்கே தடுத்து நிறுத்தி விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மற்றவர்களும் பெற வேண்டும் என்று அவர்களுக்கு ஊட்டி
3.அந்தத் தீமையை உந்தித் தள்ள வேண்டும்... அப்போது தான் நம்மைக் காக்க முடியும்.

அத்தகைய “ஒரு காக்கும் சக்தி வேண்டும்...” என்பதற்குத்தான் அதிகாலை நேரத்தில் உயர்ந்த உணர்வின் தன்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

பதிவாக்கிக் கொண்ட பின் அடிக்கடி நீங்கள் அதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமையை அகற்றும் வல்லமையை நீங்கள் பெற வேண்டும்.