ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2021

கணஹோமம்

 

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்...
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்... மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி...!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்...!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து... அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக... நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி... ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்... மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து... அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி... அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது...!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்...?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்... அவர் பாட்டுக்குப் போகின்றார்... கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்...! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று...
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்...” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி... அடுத்தவன் கையில் சிக்கி... அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.

யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி... அல்லது அதைக் கேட்டாலும் சரி... அதன் நிலையிலே தான் சிக்க முடியும்... அதிலிருந்து தப்ப முடியாது.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல...!

ஆக... அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல...!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்... இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்... இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).