இந்தத் தியான வழியினைக் கடைப்பிடித்து வருவோர் எப்பொழுதுமே “விழித்திருத்தல்” (CONSCIOUS) வேண்டும். சந்தர்ப்பவசத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அதைத் தடுக்கும் விதமாக நாம் எடுக்கும் தியானத்தை உஷார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்படுகின்றோம். அவருக்கு உதவி செய்வதற்காகச் செல்கின்றோம். பார்த்ததும் அவருடைய கஷ்டத்தைக் கேட்டறிகின்றோம்.
அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...?
அவருடைய நோயினைக் கேட்டு அறிந்து கொண்டபின் ஈஸ்வரா...! என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.
நோயுற்றிருக்கும் அந்த நண்பனிடம்...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய்..
2.நோயிலிருந்து விடுபடுவாய்... உன் உடல் நலம் பெறும்...! என்ற உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
3.அவருடைய வேதனை நமக்குள் புகாதபடி இப்படி விழித்திருத்தல் வேண்டும்
ஏனென்றால் வேதனைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நமக்குள் தீமை வராது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு
3.மற்றவர்களுக்கும் இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால்
4.அவர்களையும் காக்க முடியும்... நம்மையும் காக்க முடியும்.
இத்தகைய தெளிவான உணர்வு கொண்டு செயல்பட்டு நோயுற்றவரிடம்... துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்... உங்கள் நோய் நீங்கிவிடும்...! என்று சொல்லுங்கள். இந்த உணர்வை நாம் அவர்களுக்குள் வித்தாகப் பதித்து விட வேண்டும்.
ஏனென்றால் நோயிலிருந்து அவர் விடுபட முடியாத நிலை இருக்கும் பொழுது இந்த உணர்வைப் பாய்ச்சி அவருக்குள் இந்த உணர்வை ஏற்ற வேண்டும்.
அவரும் நாம் சொன்னபடி இதை எண்ணத் தொடங்கினால் அவர் நோய் நீங்கக் காரணமாகின்றது. அவர் ஓரளவுக்கு மன உறுதியைப் பெறவும் இது உதவுகின்றது.
நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பல தீமையின் உணர்வுகளை நாம் கேட்டறிந்தாலும் மேலே சொன்ன முறைப்படி செய்து... துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் வலிமை கொண்டு... நம்மைக் காத்து நம் நண்பர்களையும் காத்திட வேண்டும்.
ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யும் பொழுது எந்த அலை வரிசையில் வைக்கின்றனரோ அந்த அலையைத் தான் அது கவர்கின்றது... நாம் கேட்கவோ காணவோ முடிகின்றது.
ஆனால் பிடிக்கவில்லை என்றால் வேறு அலை வரிசைகளை உடனுக்குடன் மாற்றுகிறோம்.
இதைப் போன்றுதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பலருடைய உணர்வுகளைக் கேட்டாலும் நுகர்ந்தறிந்தாலும் அந்தத் துயரத்தின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அடுத்த கணமே...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.இந்த அலை வரிசையை நமக்குள் எடுத்துத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.
நாம் எடுத்துக் கொள்ளும் அந்த துருவ நட்சத்திரத்தின் உண்ர்வு கொண்டு நண்பனைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் இது உதவும்.
இதை ஒரு பழக்கமாக நாம் வளர்த்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் அறியாது சேரும் தீய வினைகள் இருந்து உடனுக்குடன் நாம் விடுபட முடியும்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வினை நாம் பெற்று நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாமும் அடைதல் வேண்டும்.
இதன் மூலம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனை நாம் யாரென்று அறிய முடிகின்றது
1.அவனையே வேண்டி... அவனுள்ளேயே கேட்டு
2.நாம் விரும்பியதை இங்கே உருவாக்க முடியும்
தெளிந்த மனம் கொண்டு நாம் அருள் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்ததை அவன் (உயிரான ஈசன்) உருவாக்கி அவன் வழியிலேயே நம்மை வழி நடத்தி நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.
ஆகவே ஞானிகள் காட்டிய வழி சென்றால் இந்த வாழ்க்கையில் நாம் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலை அடையும் சக்தி பெறுகிறோம்.