மனிதச் சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்... முக்குணங்கள் என்றும்... உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்...” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.
உலக வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்
சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.
உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக...!” அமைத்துக் காட்டினான்.
1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.
அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் (எலி) காட்டினார்கள்.
மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெறுவதற்காக வேண்டி கீழான நிலையை விலக்கி விட்டுத் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துப் போதனைகளும் கொடுக்கப்பட்டன.
இந்த மனிதச் சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்...?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாக ஒளிச் சரீரம் பெற்றிடவே இந்தப் பாடங்கள்...!
மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.
1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது...!
ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்...!