ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2021

சுவாசத்திற்கும் நாடிகளின் இயக்கத்திற்கும் உண்டான தொடர் இயக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக ஐம்புலன்களில் செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்…” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்துச் செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழி ஓடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும் முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும். உணரவும் முடியும்.