பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.
ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளைத் தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.
அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.
வானியல்... புவியியல்... உயிரியல்... என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.
அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது உயிரியல் தத்துவமாக அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.
1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் மாற்றமே காணப்படுகின்றது.
காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…!
1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.........
இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.
அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.
1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் - “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே...! (திருமூலர்)