ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2021

நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் பிரதி உபகாரம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்...!

 

நம் குடும்பத்தில் அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள் நன்மை செய்தபின் அந்த நம்மை செய்தவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்...?

1.அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்...
2.எனக்கு எல்லா வகையிலும் நன்மைகளை வழிவகுத்துக் கொடுத்தார் என்று அவரை எண்ணி ஏங்குகின்றோம்.

ஆனால்... சந்தர்ப்பவசத்தால் அவர் உடலை விட்டுப் பிரிந்தால் அவரை நாம் மீண்டும் எப்படி எண்ணுகின்றோம்...? நம் எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்...?

எனக்கு எவ்வளவோ உபகாரம் செய்தார்... போய்விட்டாரே...! எனக்கு இனி யார் உதவி செய்வார்கள்...? என்று மிகவும் வேதனைப்படுகின்றோம்.

அதற்கு முதலில்... அவர் நோயுடன் வாடும் பொழுது “நல்ல மனிதர் இப்படி நோயுடன் வாடுகின்றார்...” என்ற உணர்வை நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

அவர் உடலை விட்டுப் பிரியும் பொழுது...
1.நல்ல மனிதர் போய்விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு அவர் வேதனைப்படும் காலத்தில் எடுத்த உணர்வு நமக்குள் இருப்பதனால்
3.அந்த உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது.

நமக்குப் பல நல்லதைச் செய்தார். ஆனால் உடலை விட்டு பிரியும் பொழுது அவரை எண்ணி நாம் ஏங்கி இழுக்கப்படும் பொழுது அவர் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகிறது.

வந்த பின் அவர் எந்தக் கஷ்டங்களை எல்லாம் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்...?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார் ஆனால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்
1.நம்முடைய அறியாமை... பண்பும் அன்பும் கொண்டு பரிவுடன் நாம் எண்ணும் பொழுது
2.அவர் ஜீவன் பிரியப்படும் பொழுது வேகமான உணர்வுடன் நாம் எண்ணும் பொழுது நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலிலும் அது கவரப்பட்டு நமக்கும் அவர் உடலில் இருந்த நோய் வரத் தொடங்கி விடுகின்றது.

அந்த ஆன்மா நமக்குள் வந்தபின் இங்கேயும் அந்த நோயின் விஷத்தை வளர்த்து நாமும் இறந்தபின் அடுத்து மனித உடலுக்குள் செல்லாதபடி உடலை விட்டுச் சென்றபின் விஷத்தின் தன்மை கொண்ட உடலுக்குள் தான் செல்வோம்.

மாடு ஆடு இவைகளெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் அதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலை மாற்றிக் கொள்கின்றது.

மானும் யானையும் புலியும் நரியும் நாயும் இவை எல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப விகிதாச்சாரப்படி அந்த உறுப்பில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.விஷத்தின் இயக்கத்தால் தான் அதன் ரூபங்கள் உருவாகின்றது.
2.உயிரால் அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்தந்த உடல்கள் எப்படி மாறுகின்றது என்பதனை
3.குருநாதர் உயிரின வாழ்வில் ரூப மாற்றங்கள் எவ்வாறு என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இந்த வழியினை எல்லாம் தெளிந்து கொண்ட பின்னும் நமக்கு எவ்வளவோ நன்மை செய்தார் என்றாலும்... இனி அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா...?

அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில்... நோயினால் வேதனைப்படுகின்றாரே...!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
3.எல்லோருக்கும் நன்மை செய்த அந்த ஆன்மா இன்னொரு உடல் பெறாத நிலையில்
4.அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று யாராவது நாம் எண்ணுகின்றோமா...?

இல்லை...!

அதற்கு மாறாக அவரை மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அவரின் வேதனையான உணர்வுகளை உருவாக்கப்பட்டு நாமும் இறந்த பின் மீண்டும் மனிதனல்லாத உருவாக உருவாக்கத்தான் நாம் பயன்படுத்த முடிகின்றது.

ஆனால் நாம் அவர்களை மீண்டும் பிறவிக்கு வராதபடி அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்... பிறவி இல்லா நிலையும் அடையச் செய்ய முடியும்.

அது தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி...!