ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2021

பாவம்... கஷ்டப்படுகின்றார்கள்...! என்று பிறரை எண்ணினால் வரும் விளைவுகள்

 

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நாம் நல்லதைச் செய்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவிகளைச் (தர்மத்தை) செய்கின்றோம்.

ஆனால் அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகளோ வலிமை கொண்டது... நாம் நுகரும்போது அது வாலி (எதிர்நிலை) ஆகிவிடுகின்றது. நாம் நல்லதுதான் செய்கின்றோம். இருந்தாலும்...
1.மற்றவர்கள் துன்பப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்த பின்
2.இரக்கம் ஈகை என்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மடியச் செய்து விடுகின்றது.

பாவம்... அவர்களின் தரித்திரம் இப்படி இருக்கின்றது...! என்று ஏங்கி நாம் சுவாசித்ததை நம் உயிர் அந்த உணர்வால் உணரச் செய்கிறது. அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறுகின்றது.

அவர்கள் பட்ட வேதனையும் சோர்வான உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி... நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை பட்ட பின் அது ஜீரணிக்கும் சக்தியை இழந்து விடுகின்றது. சிறு குடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் அந்த விஷத்தால் மயக்கம் அடைகின்றது.

உதாரணமாக ஒரு விஷத்தினை உட்கொண்டால் உடல் முழுவதும் படர்ந்து நம்மை எப்படி அது மயக்கம் அடையச் செய்கின்றதோ அதே போல்
1.நாம் சுவாசித்த மற்றவரின் வேதனையான உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.சிறு குடலுக்குச் சென்ற பின் சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
3.மற்றவர்கள் பட்ட வேதனை எதுவோ அதன் உணர்வு நம்மை அன்றைய தினம் இந்த உபாதை (அஜீரணம்) அடையச் செய்கின்றது.

செல்வம் இருந்தது என்ற நிலையில் நல்ல சத்துள்ள ஆகாரத்தைத் தான் சாப்பிட்டோம். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினோம்... உதவியும் செய்து விட்டோம்.

ஆனால் உதவி செய்யும் போது நாம் கேட்டுணர்ந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நமக்கு இந்த நிலை (உடலில் உபாதை) ஆகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட வேதனை நமக்குள் எப்படி வருகிறது...?

அவர்கள் உடலில் விளைந்த வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் போது சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் கவர்ந்து கொள்கிறது. அந்த வேதனையை இயக்கச் செய்யும் அணுவாக மாறுகின்றது.

நாம் அவர்களை உற்றுப் பார்க்கும் போது அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. இயக்கிய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது உமிழ் நீராக மாறி உடலில் கலக்கப்படுகின்றது.

1.வேதனை என்றாலே விஷம்.
2.ஆக விஷமான உமிழ் நீராக அது மாறி ஆகாரத்துடன் கலந்து அமிலமாகி இரத்தமாகின்றது.
3.அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் குடிகொண்டு
4.விஷத்தின் தன்மையை இயக்கும் ஒரு கருத்தன்மை அடைகின்றது.

இப்படி... மற்றவர்கள் உடலில் விளைந்த வேதனையின் உணர்வுகள் அணுக்களாக விளைந்து நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பித்து விடுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இதைப் போன்று பல நிலைகள் வருகின்றது.

அதே போல் தொழிலுக்குச் செல்கின்றோம். அங்கே பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம்... பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம். வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நுகர்கின்றோம்... அறிகின்றோம்...!

குறைகளையும் தவறுகளை நீக்க அதற்கு வேண்டிய உபாயங்களைச் சொல்கின்றோம். உபாயங்களைச் சொல்லிவிட்டு வந்த பின் நம் உடலில் தீமை வருகின்றது...! எப்படி...?

குறைகளைச் சொல்வார்கள்... அது என்ன... ஏது...? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விரும்புவோம். ஆனால் அவர்களோ சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் நம்மைச் சோர்வடையச் செய்து விடுவார்கள்.

1.அன்றைய தினம் இதை எல்லாம் கேட்டு
2.அதன் பின் வந்து ஆகாரத்தை உட்கொண்டால் சரியாகச் சாப்பிட முடியாது
3.அதே உணர்வின் இயக்க அணுவாக இரத்தத்தில் மாறுகின்றது.
4.இரத்தத்தில் இப்படி மாறிய பின் உடல் முழுவதும் படர்கின்றது.
5.நம் உடலில் கெட்ட அணுக்கள் சேர ஆரம்பிக்கிறது.

இப்படித்தான் நமக்குள் தீமைகள் வருகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை நம் உயிர் ஓ..ம் நமச்சிவாய... ஓ..,ம் நமச்சிவாய...! என்று உடலாக (நமதாக - சிவமாக) ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எண்ணுவது அனைத்தையும் ஓ... என்று பிரணவமாக்கி ம்... என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே இருப்பது தான் உயிரின் வேலை.

சலிப்படைந்த சங்கடப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் ஓ...ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் ஆனபின்... அவர் இப்படிப் பேசினார்... அதிலே குறைகள் இப்படி இருந்தது... நான் உதவி செய்தேன்...! என்று எல்லாம் முதலிலே சொல்வோம்.

ஆனால் கடைசியில் பார்த்தால் நமக்குள் உருவாகும் அணுக்கள் விளைந்த பின் நம் உடலிலும் அதே உணர்வின் இயக்கமாகி “சிவாய நம ஓ...ம் என்று அதே உணர்வின் சொல்லாக வரத் தொடங்கி விடுகின்றது.

1.ஆக... அவன் உடல் நலிந்தது நம்முடைய உடலும் நலியத் தொடங்குகிறது
2.அவன் உணர்வு குறைந்தது... நம்முடைய நல்ல குணமும் குறையத் தொடங்குகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா...?