ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2021

உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்...?

 

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று சொல்லும் பொழுதெல்லாம் நம் உயிரை ஈசனாக மதித்து நம் உடலுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் “உயிரே குருவாக இருக்கின்றது...” என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ... எந்தக் குணத்தை நுகர்கின்றோமோ... அந்தக் குணமே உயிரிலே பட்டு நம்மை ஆட்சி புரிகின்றது.

உதாரணமாக ஒரு கோபமான குணத்தை நுகர்கிறோம் என்றால் உயிரிலே அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மைக் கோபக்காரனாக ஆக்கி அது தான் நம்மை ஆட்சி புரியும் (நாம் இயக்குவது அல்ல அந்த உணர்வே இயக்குகிறது).

அதே போல் ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த உணர்வை நுகர்ந்தால் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த வேதனையான உணர்ச்சிகள் தான் நம்மை ஆட்சி புரியும்.

அதே சமயத்தில் சாந்தமும் ஞானமும் கொண்டு நாம் பேசினால் அதன் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு நம் வாழ்க்கையில் ஞானத்தின் உணர்வாக அது தான் நம்மை ஆட்சி புரிகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அவை அனைத்தும் உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்கின்றது. அதன் வழி தான் நம் சொல் செயல் எல்லாமே அமைக்கின்றது.
1.இதற்கு உயிர் பொறுப்பல்ல...
2.உடல் பொறுப்பல்ல...
3.நாம் நுகர்ந்த (அந்தந்த) உணர்வு தான் பொறுப்பு...!

அதை உனர்த்துவதற்குத்தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் தான் விஷ்ணு. நாம் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது. உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று சொல்லாகவும் செயலாகவும் இயக்குகிறது.

உதாரணமாக...
1.ஒரு காரமான உணர்வை நுகர்ந்தால் ஆ... என்று அலறுகின்றோம்.
2.ஒரு கசப்பான உணர்வை நுகர்ந்தால் ஓய்... என்கிறோம்.
3.அரிப்பின் தன்மை கொண்ட விஷத்தின் தன்மையை நுகர நேர்ந்தால் உச்... உச்... என்று சொல்கின்றோம்.

இவ்வாறு நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (மணங்கள்) உயிரிலே பட்டு அந்தந்த உணர்ச்சிகள் நம்மைச் செயல்படுத்துவதும் அந்த உணர்வின் வழிப்படியே நமக்குள் எண்ணங்கள் வருவதும் நம்மை இயக்குவதும் போன்ற நிலைகள் நடக்கின்றது.

இப்படி நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் பலவாறு இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையை (உதாரணமாகக் கோபம் என்றால்) மீண்டும் மீண்டும் எண்ணிப் பல முறை எடுத்தால் இந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து கோபத்தை உண்டாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

அதனால்தான் நம் இரத்த நாளங்கள் இருக்குமிடத்த்தை இந்திரலோகம் என்று சொல்வது. அதாவது இந்திரீகம்... என்று சொல்வதை இந்திரலோகம் என்று காரணப் பெயராக வைக்கின்றார்கள்.

நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது சங்கு... நாதங்களாக எழும்பி அந்த உணர்ச்சிகள் தான் நமக்குள் இயக்குகின்றது.

இருந்தாலும் இதை இயக்குவது யார்...? நம் உயிரான ஈசன் தான், உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஞானிகள் வைக்கின்றார்கள். ஈசன் என்றால்...
1.உருவாக்குபவன்...
2.உணர்த்துபவன்...
3.இயக்குபவன்...! என்று பொருள்.

ஆனால் நாம் நுகர்ந்தது எந்த உணர்வாக இருந்தாலும் அதைப் பல முறை எண்ணி எடுத்துக் கொண்டால் நம் உடலுக்குள் சென்று இரத்தத்திலே கருவுற்று அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் “எதை நுகர வேண்டும்...?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.