ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2012

நான் எதை நினைத்தாலும் “உயிரின் நினைவுகள்” அடிக்கடி எனக்கு வரவேண்டும்

அந்த மகாஞானிகள் தனக்குள் வளர்த்து எடுத்து,  உணர்வின் சக்தியை வெளிப்படுத்திய, அருள்ஞான சக்தியான அருள்ஞான வித்துக்கள் அனைத்தும், நமக்கு முன் இந்தக் காற்றில் படர்ந்திருக்கின்றது.

அதை நுகர்ந்து எடுத்து, அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் பெற்று, அவர்கள் எப்படி உணர்வை ஒளியாக மாற்றி, விண்ணின் நிலைகளில், ஒளி சரீரமாகப் பெற்று, என்றும் நிலையான நிலைகளில் இருக்கின்றனரோ, அந்த நிலையை அடையச் செய்வதும், அந்த நிலைக்கு நாம் எண்ணியதைக் கொடுத்து, அதைப் படைப்பதும் “நமது உயிரே”.

ஆக, “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா” என்ற இந்த உணர்வை,
உணர்ச்சிப் பூர்வமாக எண்ணத்தில் எண்ணி,
மெய் ஒளியின் தன்மை பெற்ற நமது உயிரின் நிலைகளில்,
இதை உணர்த்திச் சென்ற
மகா மெய் ஞானியருடைய உணர்வுடன் ஒன்றச் செய்து,
அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான், “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா” என்பது, வெறும் வாயிலே அழகுக்காகச் சொல்லாமால், யாம் பாடும் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி, அந்த ஏக்கத்தின் நிலைகளில் பதிவு செய்கின்றோம்.

“என் இசையில் நீ இசைப்பாய்”. அதாவது யாம் சொல்லும் இந்த உணர்வின் நிலைகள் அனைத்தும், எனக்குள் உயிராக இருந்து இசைப்பவனும் அவனே. ஆகையினாலே “என் இசையில் நீ இசைப்பாய்”.

“என் நினைவில் நீ வருவாய்”
ஆக, என் நினைவில் நீ வருவாய் என்பது
“ஈஸ்வரா” என்று நமது உயிர்,
நான் எதை நினைத்தாலும், எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய உயிரின் நினைவுகள்” அடிக்கடி எனக்கு வரவேண்டும்.
எனக்குள் ஈசனாக நின்று, உற்பத்தி செய்யக்கூடிய இந்த உணர்வின் சக்தி, எனக்குள் நிலையாக இருந்து வரவேண்டும்.

நான் அறியாத நிலைகளில் தீமையைப் பார்த்தாலும், ஈசனுக்கு அந்த தீய உணர்வின் தன்மை பட்டு, அவனுக்கு எரிச்சலை ஊட்டி, அவன் தாங்காது நிற்கின்றான்.

ஆகவே, அந்த நினைவு கொண்டு, தீயதை நான் பார்த்தாலும்,
அந்த உணர்வின் சக்தி, ஈசனுக்கு அது படக்கூடாது என்ற நிலையில்
“மெய் ஒளியை நான் பெற வேண்டும்”,
“மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெற வேண்டும்”
என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து
நம் உயிருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

ஏனென்றால், நாம் தீயதை எண்ணி, நமக்குள் இருக்கும் ஈசனுக்கும், அந்தத் தீய உணர்வுகள் படும்போதுதான், நமது உடலிலேயும் அந்தத் தொல்லைகள் வருகின்றது.

ஆகையினாலேதான், “என் இசையில் நீ இசைப்பாய், என் நினைவில் நீ வருவாய், ஈஸ்வரா குருதேவா” என்ற நிலைகளை, ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணி ஏங்கவேண்டும்.

“நான் இல்லை, நீ இல்லா இவ்வுலகில்”, இந்த உடலில் இந்த உயிர் இல்லை என்றால், இந்த உலகத்திற்குள் எதுவுமே இல்லை.
“நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்
எல்லா நினைவையும் பெற்றிடவே,
எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா”.

அந்த மெய்ஞானிகள் காட்டிய, பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை நான் பெறுவதற்கு, அருள் கூர்வாய் ஈஸ்வரா என்று, என் உயிரை, நான் கேட்டு வேண்டுகிறேன்.

எமக்கு நமது குருநாதர் காட்டிய அவ்வழி அதுவே, அதனின் வழியில், யாம் உங்களுக்கும் காட்டுகின்றோம். இதையே நீங்கள் எண்ணி,
உங்களை ஆண்டு கொண்டிருக்கும்,
உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
அந்த ஈசனை மறவாது, அவனிடம் வேண்டுங்கள்.
அதை யாம் வேண்டுவது போல், நீங்களும் வேண்டுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, உங்கள் உணர்வின் எண்ணங்களை அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கின்றோம். அதே போன்று, முதன் முதலில் ஆற்றல் மிக்க இந்த உடலின் சக்தியை, உணர்வினை ஒளியாக மாற்றி, துருவ நட்சத்திரமாகச் சென்றடைந்துள்ளார் துருவ மகரிஷி.

அதிலிருந்து வெளிப்படும், துருவ மகரிஷிகளின் ஆற்றல்மிக்க எண்ண அலைகளும், நமக்கு முன் படர்ந்திருப்பதை, அதைப் பருகும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், யாம் இதை உபதேசிக்கின்றோம்.

நாம் எப்படி ஒரு தேரை இழுத்து,
“எல்லை சேர வேண்டும் என்று”
ஒன்று சேர்ந்து அந்த எண்ணத்தைச் செலுத்தி
அந்தத் தேரை இழுத்து எல்லை சேர்க்கின்றோம்.
அதைப் போன்று, மனிதனான நாம் அனைவரும்,
நமது குருநாதர் கொடுத்த
ஆற்றல்மிக்க சக்தியின் எண்ண அலைகளை,
மெய்ஞானிகள் பெற்ற அந்த உணர்வின் சக்திகளை,
யாம் உங்களுக்குள் உபதேசித்து,
இந்த உணர்வைத் தூண்டச் செய்து,
உங்கள் உயிருடன் ஒன்றச் செய்து,
இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து,
அந்த உணர்வுகொண்டுதான்,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று,
எல்லோருடைய எண்ணங்களையும், யாம் குவிக்கப்படும்போது,
அதை நமக்கு முன் சுழலச் செய்கின்றோம்.

ஆக, இதைப் பெறவேண்டும் என்று ஏங்கி எண்ணும் அனைவருக்கும், அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள், அப்படி சுழன்று வருவதை, உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான், இதை யாம் உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.