ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2012

ஞானகுரு மெய் உணர்வை நமக்குள் பதிவு செய்யும் முறை

1. குருதேவர் ஞானகுருவிற்கு அனுபவபூர்வமாக உணர்த்திய உண்மைகள்
நமது குருநாதர் சொன்னபடி, மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது? அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது? ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும்போது, அந்த நல்லதை எண்ணும்போது, அவரகளை, துயரங்கள் எப்படி வந்தடைகின்றது?

அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி, பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்துக் கொண்டு, அந்த பக்தி என்ற நிலைகளில் இருந்தாலும்,
நல்லதை எண்ணுகின்றனர்.
நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில்,
இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர்.

ஆனால், நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது. நல்லதைப் பெற வேண்டுமென்று, அரசர்கள் பக்தி ஒன்றைமட்டும் நமக்குக் காட்டிவிட்டு, நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை, அவர்கள் விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால், அந்தப் பக்தி என்ற நிலைகளில், நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும், மெய் ஒளியின் தன்மை தனக்குள் உணர்ந்தால், மக்கள் அடிபணியமாட்டார்கள் என்ற நிலைகள் கொண்டு, அரசர்கள் அவர்கள் சுகபோகங்களுக்காக, உலக ரீதியிலேயே உண்மைகளை மாற்றினார்கள்.

இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளின் நிலைகள், அது நம் பூமிக்குள் வந்தாலும், மற்ற சாதாரண மக்கள் பெறாத நிலைகளில் எப்படித் தடைபடுத்திவிட்டது என்ற நிலைகளிலும், இதிலிருந்து மீண்டு, நாம் எப்படி இந்த உடலிலிருந்து, இந்த உயிராத்மாவை ஒளி நிலை பெறச்செய்ய வேண்டுமென்ற இந்த நிலையைத்தான், நமது குருநாதர், அவர் கடைசி நேரத்தில், இந்த உடலைவிட்டு அந்த உயிராத்மா செல்லப் போகும்போது, முதன் நிலையாக இதைச் சொன்னார்.

அதைச் சொல்லி, இந்தப் பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக, முதலில் அனுபவ ரீதியாக, அவர் இருக்கும்போதே பல அனுபவங்களை, எம்மைப் பெறச் செய்தார். அதாவது கன்னியாகுமரி முதல், இமய மலை வரை சென்று வரச் செய்தார்.

வட துருவத்திலிருந்தும், தென் துருவத்திலிருந்தும் ஆற்றல்மிக்க சக்திகளை, இந்த பூமி எப்படிப் பெறுகின்றது என்ற நிலையும், அவர் உடலோடு இருக்கப்படும்போது, நேரடியாகவே அவர் எமக்கு உணர்த்தி, நாம் எப்படி T.V.களில் பார்கின்றோமோ, இதைப்போன்ற நிலைகளை, அவர் அவருடன் அணைத்துக் கொண்டு, அவர் உடல் எங்கே செல்கின்றதோ அவருடன் அணைத்துக் கொண்டு, ஆங்காங்கு நிறுத்தி, அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது என்ற நிலையை, எமக்கு உணர்த்தினார்.

அவர் உணர்த்திய எண்ணங்களை வைத்துத்தான், எல்லோரும் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையில், நீங்கள் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையில், 12 வருட காலம் பல காடுகள், மேடுகள் அலைந்து, மற்ற உயிரினங்கள் எவ்வாறு செயல் படுகின்றது, தாவர இனச் சத்துக்கள் எப்படி தாவர இனச் சத்தை இழுக்கின்றது? தாவர இனச் சத்தை தனக்குள் எவ்வாறு வளர்கின்றது? தாவர இனச் செடிகள் எப்படி வளர்கின்றது? என்று அறிந்தோம்.

அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு, பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையை, அவர் உணர்த்திச் சென்ற அந்த நிலையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும், அதை உணர்வதற்கு, நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கே, அதை செய்தார்.

அப்படி, எமக்குள் பெற்று வளர்த்த, அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெறுவதற்கே, யாம் உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
2. ஞானகுரு நமக்குள் மெய் உணர்வைப் பதிவாக்கும் நிலை
நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று, உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள், இதற்கு, குரு வழிகொண்டு, உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.

அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால்தான், உங்கள்  உணர்வின் தன்மை வலு கூடும்.

நாம் அனைவருமே  TV, RADIO  மூலமாக, அனைத்தையும் பார்த்து, கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று, விஞ்ஞான அறிவுகொண்டு எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய, அந்த உணர்வின் தன்மையை, அந்த அலைகளை எடுத்து படங்களை அனுப்புகின்றது.

அப்படி அனுப்பும் பொழுது, உடனே அந்தப் படங்களை எடுத்துக்கொள்வதற்காக வேண்டி, கம்ப்யூடர் சிஸ்டம் என்று, அந்த உணர்வலைகளை அது ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து, அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு, அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும், அது எடுத்து அனுப்பும் படங்களையோ, அங்கிருக்கும் உணர்வலைகளை அது படமெடுத்து, தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது, கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்துவிடுகின்றது.

இதைப்போன்று உங்கள் உடலின் தன்மை அனைத்துமே இயந்திரம்”,
நீங்கள் தியானத்தாலே எடுத்துக்கொண்டு,
உணர்வின் கண்ணின் புலனறிவு ஆண்டெனா.
அந்தப் பவரின் சக்தி நாம் தியானிக்கப்படும்போது, நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும், கண்ணுக்குள் தொடர்பு உண்டு.

நாம் எந்தெந்த நிலைகளில் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின் தன்மை, உங்கள் புலனறிவால் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு, கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிக்குள், அது தொடர்பு கொள்கின்றது.

அவ்வாறு அது தொடர்பு கொள்ளும்பொழுது, நாம் தியானமிருக்கும் பொழுது, ஒவ்வொருவரும் சந்தித்து தியானமிருக்கின்றோம். இதை நீங்கள் செயல்படுத்தும்போது,  
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய,
அந்தக் கருவிழியான நிலைகளிலே,
மெய்ஞானிகளின் அருளாற்றல்களை
நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உந்தி,
அந்த உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

அதாவது, கண்ணாலே பார்ப்பதும், அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு, உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதும், எனக்கு நமது குருநாதர் எவ்வாறு காட்டினாரோ, அந்த உணர்வின் நிலைகள் கொண்டே, உங்கள் கருவிழிக்குள், அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும்போது,  நீங்கள் இரவிலே படுத்துக்கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.

இவ்வாறு இரவிலே, இப்போது நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டபின், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று, ஆத்மசுத்தி செய்துவிட்டு நீங்கள் படுக்கும்போது, இந்த உணர்வலையின் ஓட்டங்கள் இருந்து கொண்டிருக்கும்.

அப்பொழுது இரவிலே நாம் தியானிக்கப்படும்போது, சப்தரிஷி மண்டலங்களில் இருந்து, துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய அலைகளை, நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தும் பொழுது, அது  தன்னிச்சையாகவே, அந்த உணர்வுகளை அது இழுத்துச் செயல்படுத்திவிடும்.