1. மூலம்
உயிர், நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்
சில சமயங்களில்,
நாம்
எவ்வளவு தெளிவாக இருந்தாலும், நம்முடைய பையன் நான்கு தடவை அடம்பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்துவிடுகின்றது. அது, நம்
எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை, இழக்கச் செய்கின்றது.
இந்த நஞ்சான உணர்வு வந்து
ஊடுருவப்படும் பொழுது, இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின்
உணர்வுகள், அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு,
அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து, எண்ண வலுவைக் கொண்டு
வரவேண்டும்.
அதற்குத்தான், நாம் ஒவ்வொரு
நிமிடமும் “ஈஸ்வரா” என்று நம் உயிரிடம்
எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும். இந்தக் கண்ணின்
நினைவை, அங்கே கொண்டு போக வேண்டும்.
கூட்டுத் தியானத்தில், நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து,
உயிருடன் இணைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று, அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க
வேண்டும்.
இவ்வாறு காட்டியதைத்தான், இந்தக் குண்டலினி யோகக்காரர்கள்
“ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள். நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ, அது நமக்குள்
அணுக்களில், “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
உடலின்
உறுப்புக்களுக்கு மூலம், அணுக்களின்
தன்மை.
மூலாதாரம் இங்கே “உயிர்”
இதைத்தான், “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை, காலமறிந்து”
என்கிற பொழுது,
நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு.
அதற்கு வளர்ச்சி இல்லாதபடி,
“மூண்டெழும் கனலைக் காலமறிந்து,
கருத்துடன் செயல்பட வேண்டும்” என்றுதான்,
அந்த இடத்தில் காட்டப்பட்டது.
இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், அங்கே கட்டளை
இடப்படும் பொழுதுதான், ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.
அப்பொழுது ஆக்ஞை இட்டு, பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய், இதன் வழிகொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ, என்று சொல்கின்றார்கள்.
அப்பொழுது ஆக்ஞை இட்டு, பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய், இதன் வழிகொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ, என்று சொல்கின்றார்கள்.
ஆக மூலாதாரம், இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே
இழுக்கப்பட்டு, இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு, இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில்
இருந்து பிரிக்கப்படுகின்றது என்று, இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது
என்று, இவர்கள் கொண்டு போகின்றார்கள்.
ஆனால், நமக்கு மூலம் உயிர்.
நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
இந்த ஆதாரத்தை, நமக்குள்
மறைந்திருக்கும்
ஒவ்வொரு அணுக்களுக்கும்
சேர்ப்பிக்க வேண்டும்.
இதுதான் குண்டலினி.
கண்ணின் நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி, உணர்வினை உடலுக்குள் பரப்புதல்
வேண்டும். அந்த
உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது, இதைப்
பிளக்கின்றது.
ஏனென்றால், நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது
சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை
மறைந்திருக்கின்றதோ, களையை நீக்கியவுடன், மழைக் காலம்
வந்துவிட்டதென்றால், துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.
அதே மாதிரி,. அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது. ஒருவர்
கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்துவிட்டால், சண்டை போடுவதைப் பார்த்தால்,
அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது.
உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும்.
உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும். சண்டையை வேடிக்கை பார்த்தால், வீட்டில் சண்டை போடுவீர்கள். அந்தக் காலப்பருவத்தில், அது வளர ஆரம்பித்து
விடுகின்றது.
நமக்குள் விளைய வைத்த வித்துகள், அந்தந்தக் காலப்பருவம் வந்துவிட்டால் அது அது விளைய
ஆரம்பித்துவிடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும், நமக்குத்
தேவைப்பட்டதை விளையச் செய்ய, களையை நீக்குகின்றோம். அதை
நாம் நீக்குவதற்கு, சக்தி கொடுக்கின்றோம்.
எந்தக் காலப்பருவமானாலும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற
வேண்டும். அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி, வலுப் பெறச் செய்து, அதற்குச் சாப்பாடு
இல்லாமல் செய்ய வேண்டும்.
இந்தக் களையை நீக்க வேண்டும். இதை
நீக்கினால்தான், அதற்குச் சாப்பாடு கிடைக்காது.
இல்லையென்றால், சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.
ஓரு குடும்பத்தில்
வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால்,
அந்தக் காலப்பருவம் என்ன செய்யுமென்றால், அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து, வளர்ச்சியடைய ஆரம்பித்துவிடுகின்றது.
இப்படிப் பெரும்பகுதி, எங்கு
திரும்பினாலும், ரயிலில் போகும் பொழுது, அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால்
வேதனை. கடையில் இருக்கும்போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு, அவர் தரவில்லை
என்றால் வேதனை. கோபம், குரோதம், வெறுப்பு.
இதுவெல்லாம்
சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது, உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
அது அது வளரும்.
மனிதருடைய மனநிலை,
காலையில் ஒரு மனதாக இருக்கும்.
இதை விட்டு வெளியே போகின்றோமென்றால்,
மனது வேறு விதமாக மாறும்.
தொழிலில் அமர்ந்தவுடன்
என்னவாகும் என்றால், ஒருவன்
நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான்.
நாம் இங்கே இருக்கும் வரையில், இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது
மறந்திருப்போம். அந்த இடத்தில் (தொழிலில்) உட்கார்ந்தவுடனே, அவனைப் பார்த்தவுடனே, மீண்டும் அந்தக் களை முளைக்க
ஆரம்பித்துவிடும்.
வேதனை வெறுப்பு வந்துவிட்டால்,
நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல
அமைப்பை அமைக்க வேண்டுமென்றால், வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக்
காலப்பருவத்தில், அது அது விளைகின்றது.
நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்,
மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல மாற்றியமைத்த அருள்ஞானிகளின் உணர்வுகளை
உள்செலுத்தி, அந்தந்தப்
பருவங்கள் வரப்படும் பொழுது, களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது.
2.
மகரிஷிகளின் உணர்வை உயிர் வழி இயக்க வேண்டும் - “ஆக்ஞை”
நாம் உதாரணமாக, காலை வேளைகளில்
தொழில் சம்பந்தமாகப் போகின்றோம். நாம் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது, பல நிலைகளைப்
பார்க்கின்றோம். அனைத்தும் உயிரிலே பட்டு, நமது ஆன்மாவாக மாறிவிடுகின்றது. நம் மனநிலை,
அதற்குத்தக்க மாறிவிடுகின்றது.
பஸ்ஸை விட்டு இறங்கி, ஆபீசுக்குப்
போகும் பொழுது, ஒரு நிலை. இந்த இரண்டு நிலையும் சேர்ந்து, ஆபீசுக்குள் போகும் பொழுது,
ஒருவர் துடைத்துக் கொண்டிருப்பார். இந்த உணர்வுடன் பார்த்தவுடன், பேப்பரும் சேர்ந்து
பறந்து போகும்.
“ஏம்பா, பேப்பரை எடுத்து
வைத்துவிட்டு, தட்டுவதில்லையா? என்ற இந்த உணர்வுதான் வரும். இந்தக் குறுகலான உணர்வுதான்
வரும். அப்பொழுது, இந்த உணர்வை நமக்குள் பதிவு செய்து விட்டோம். ஆபீசுக்குள், குறைகளைத்தான்
வளர்த்துக் கொள்கின்றோம். இந்த உடலான ஆபீசுக்குள்ளேயும், குறைகளை வளர்க்கும் சக்தி
கூடிக் கொள்கின்றது.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்,
நாம் ஆபீசுக்குப் போனவுடனே, ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் துருவ மகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள்,
ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று, நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து,
பல முறை எண்ண வேண்டும்.
இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது. “ஆக்ஞை”. இந்த உணர்வின் தன்மை
கொண்டு, நம் உயிருடன்
எதை எண்ணுகின்றோமோ, உயிர் அதை இயக்கும்.
அந்த துருவ மகரிஷிகளின் அருள்
சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், என்ற உணர்வை புருவமத்தியின் வழியாக, உடலுக்குள்
கொண்டு போக வேண்டும்.
சிறிது நாட்களுக்குப் பழக்கம்
வந்துவிட்டதென்றால், இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது, இந்த உணர்வின் செல்களை
வளர்க்கப்படும் பொழுது, எதை அங்கு பற்றினோமோ, இந்த நினைவு அங்கு கொண்டு போகும்.
முதலில், பிறர் செய்யும்
தவறுகளைக் கண்ணில் பார்க்கின்றோம். கண் இழுத்து ஆன்மாவாக மாற்றுகின்றது. இது சுவாசித்து,
உயிரிலே படுகின்றது. நாம் பார்த்த உணர்வுகள், உடலுக்குள் பரவுகின்றது.
ஆனால், இன்றைய செயல் அதுவானாலும்,
குளவி எப்படிச் சில நிகழ்ச்சிகளைச் செய்து, அந்தப் புழுவின் அணுக்களில் மாற்றங்கள்
ஏற்படுத்துவது போல்,
பிறர் செய்யும் தீமையின்
உணர்வின் தன்மைகள்
இதிலே சென்றபின், அந்த அணுக்களை
வளர்ச்சி பெறச் செய்து,
நம் உடலின் அழகையே கெடுக்கும்.
அவன் அழகற்ற செயலும், தவறான
சொற்களும் சொல்லியிருந்தால், அந்த செயல்களை இங்கு உருவாக்கும் பொழுது, அணுக்கள் மாறுகின்றது.
அது நோயாக விளைகின்றது. நம் உடலின் அழகையும் கெடுக்கின்றது. புழு, குளவியாக மாற்றமான
மாதிரித்தான், இந்த மாற்றமும்.
ஆனால் அதே சமயத்தில், மகரிஷிகளின்
உணர்வுகளை இங்கு கண் கொண்டுதான் பதிவு செய்கின்றோம். நீங்கள் அதைப் பெற வேண்டுமென்ற
ஏக்க உணர்வு கொண்டு, யாம் உங்களுக்குள் பதிவு செய்து விடுகின்றோம். மீண்டும் இதை இயக்கத்திற்குக்
கொண்டுவரப்படும் பொழுது, இதை நீங்கள், உயிரோடு இயக்க வேண்டும்.
முதலில், கண்ணில் ருக்மணி பதிவாக்குகின்றது. பதிவானால்தான் எடுக்க
முடியும். இது, ஆன்மாவில் கலந்து, உயிரிலே
பட்டுத் தெரிந்து கொள்ள முடியும் ஆனால், இப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்ற ஏக்கத்தை, இங்கு கொண்டு வருகின்றோம். பதிவாக்குகின்றோம்.
குருநாதர் எம்மைத் தொட்டு,
அந்தச் சக்தியைப் பெறச் செய்தார். ஆனால் உங்களிடம், மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள்
பெற வேண்டும் என்று எண்ணி, உங்கள் உயிருடன் ஒன்றி எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
எம் ஒருவருக்குத்தான் அதைக்
கொடுத்தார். யாம், எல்லோருடைய உயிரையும் கடவுளாக மதித்து, நீங்கள் அதைப் பெற வேண்டும்
என்று, உங்கள் உயிருடன்
நினைவை இணைக்கின்றோம். அந்த நினைவின் ஆற்றலை அலைகளாகப் பரப்பப்படும் பொழுது, உங்கள் உயிர் மேக்னட், அதைக் கவர்கின்றது.
ஒரு பக்கத்தில் கம்ப்யூட்டரை
இயக்கினால், உலகம் முழுவதற்கும் அதை இயக்குகின்றது. இது ஆணையிடுவதை ஒலிபரப்புச் செய்தார்கள்
என்றால், இது அடுத்த இடத்தில் இயக்குகின்றது.
இதே மாதிரித்தான், குருநாதர்
கொடுத்த இந்தச் சக்தியை, நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை இங்கு பதிவு செய்யப்படும்
பொழுது, இதை எடுக்கச் சொல்லுகின்றோம்.
உங்களிடம், உபதேசிக்கும்
உணர்வுகளைப் பதியச் செய்துவிடுகின்றோம். யாம், “நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை”,
கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம். உங்கள் உயிரைக்
கடவுளாக மதித்து, இந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
குருநாதரைப் பார்க்கும் பொழுது,
பைத்தியக்காரராகத்தான் தெரிந்தார். ஆனால், யாம் சொல்வது சாதாரணமாகத் தெரியும். அவரை
யாம் பைத்தியக்காரராக நினைத்தோம்.
ஆனால், யாம் சொல்வதை நீங்கள்,
“சாமி சாதரணமாகச் சொல்கின்றார்” என்று நினைக்கின்றீர்கள். சொல்லில் சாதாரணம், ஆனால்,
பதிவோ, “குரு அருளின் சக்தியை” உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
நீங்கள் அனைவரும், அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று பதிவு செய்ததை, இதை எண்ணி, உயிருடன் ஒன்றி, அந்த
உணர்வினை, உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஆக்ஞையிட்டு, எங்கள் ஜீவான்மா பெற வேண்டும், ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
எண்ணி,. உங்களுக்குள் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை, மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
எமது அருளாசிகள்.