ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2012

அகஸ்தியன் சிறு வயதில் செய்த செயல்கள்

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள்
1. அகஸ்தியன் எப்படிப் பிறந்தான் 
இவ்வாறு, புலஸ்தியர் குகைகளில் வாழ்ந்து வரும் காலத்தில், புலஸ்தியரின் மனைவி கர்ப்பமாகின்றாள். விஷ முறிவு வேரும், மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்களும், கர்ப்பிணியின் கையில் கட்டி இருப்பதால், இவைகளில் இருந்து வெளிப்படும் மணத்தை, அந்தக் கர்ப்பிணியும் சுவாசிக்க நேர்கின்றது. குகையில் நோய்களைப் போக்கிடும் மூலிகையில் இருந்து வரும் மணத்தையும், கர்ப்பிணி நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

புலஸ்தியர் மனைவி, கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும், கட்டியிருக்கும் மின்னலின் கதிரியக்கங்களைத் தணியச் செய்யும் வேரும், விஷத்தை முறித்திடும் வேரும், புலி மிரட்டி, கரடி மிரட்டி, யானை மிரட்டி, நரி மிரட்டி, ஆகிய வேர்களிலிருந்து வெளிப்படும் மணத்தின் உணர்வுகளை, கர்ப்பிணி சுவாசிக்கும் நிலை ஏற்படுகின்றது.

புலஸ்தியர், கர்ப்பிணியான தன் மனைவிக்கு, பல விதமான விஷங்களை முறித்திடும் வேர்களைக் கல்லில் உரசி, உரசிய சாற்றை சிறுதுளி ஆகாரத்துடன் கலந்து கொடுத்து வந்தார். மின்னலின் அதிர்வினை அடக்கிடும் வேர்களைக் கல்லில் உரசி, சாறாகத் தன் மனைவிக்கு ஆகாரத்துடன் துளி கலந்து கொடுத்து வந்தார்.

இதைப் போன்றே, பல விதமான விஷ முறிவு மூலிகைகளை நோய்களைக்  குணப்படுத்தும் மூலிகைகளை, கர்ப்பிணியான தன் மனைவிக்குக் கொடுத்து வந்தார் புலஸ்தியர்.

இவ்வாறு, கர்ப்பிணி நுகர்ந்த மணங்களின் உணர்வுகள், இரத்தத்துடன் கலந்துவிடுவதினால், தாயின் இரத்தத்தில் கருவில் வளரும் சிசுவின் உடலிலும்,
விஷத்தை முறித்திடும் சக்தியும்,
நோய்களை நீக்கிடும் சக்தியும்,
மின்னலின் வீரியத்தைத் தனித்திடும் சக்தியும்,
கருவில் வளரும் சிசு பெறுகின்றது.

இது போன்று கருவில் வளரும் சிசு,
பத்து மாதங்களும்,
சக்தி பெற்று கருவில் வளர்கின்றது என்று,
குருதேவர் விளக்கமாகச் சொல்லி வந்தார்.
இவ்வாறு கருவில் வளர்ந்து வரும் சிசு, 10 மாதங்களும் மின்னலின் கதிரியக்கங்களைத் தணியச் செய்யும் சக்தியையும், விஷத்தை முறித்திடும் சக்தியையும், மிருகங்களைப் பணிய செய்யும் சக்தியையும், பெற்று, தாய் கருவில் வளர்ந்த குழந்தையாகப் பிறக்கின்றது.

இவ்வாறு பிறந்த குழந்தையின் அருகில், ஈயோ, எறும்புகளோ, விஷப்பூச்சிகளோ, வராது விலகிச் சென்றுவிடுகின்றன. இதைப் பார்த்தார், புலஸ்தியர். ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

புலஸ்தியரின் மனைவியும், குழந்தையைப் பார்த்து அதிசயப்படுகின்றார். குழந்தையின் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைக் காட்டிலும், பார்வையிலும், செயலிலும், வித்தியாசமாகக் காணப்படுவதை, புலஸ்தியரும், அவர் மனைவியும் உணர்கின்றனர்.

புலஸ்தியரும், அவர் மனைவியும் இந்தக் குழந்தைக்கு அகஸ்தியன் என்று பெயர் வைத்தனர் என்று, விளக்கமாகக் கூறி, காட்சியாகக் காண்பித்தார் குருநாதர்.
2. அகஸ்தியன் சிறு வயதில் செய்த செயல்கள்
அகஸ்தியன் குழந்தையாக வளரும் பருவத்தில், பயமின்றி பூச்சிகளை, தேனீ போன்ற விஷ ஜந்துகளைப் பிடித்து விளையாடுவான். ஆனால், அகஸ்தியனை விஷப் பூச்சிகளும், தேள்களும் ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு குழந்தை வளர்ந்து வரும் பருவத்தில், மூன்று வயதில் காணாமல் போகிறான். அவனைத் தேடிச் சென்று, காடுகள், நீர் இருக்கும் இடங்கள் எல்லாம் தேடிப் பார்க்கின்றார்கள். அங்கும் காணவில்லை.

கடைசியில் குழந்தையைக் கண்டுபிடித்தார்கள். ஓநாய் இருக்கும் இடத்தில், ஓநாயைப் பிடிக்கப் போகின்றான். ஆனால், ஓநாய்  விலகிச் சென்று விடுகிறது. இப்படி அவன் செயல்களை, பயத்துடனும், ஆச்சரியத்துடனும், பார்க்கின்றனர்.

புலஸ்தியரும் அவரது மனைவியும்,. இந்த நிலையில் அவர்கள் குழந்தையைக் கூட்டி வந்துவிடுகிறார்கள். இதை எனக்குக் காட்சியாக, அதாவது படமாகக் காணும்படி செய்கின்றார், குருதேவர்.

புலஸ்தியர் வாழ்ந்த காலங்களில், அவர்கள் பேசிய பேச்சும், அவர்களின் உடல்களில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளும், இன்றும் நம் பூமியில் பரவி உள்ளது.
இந்த உணர்வுகளைத்தான்,
உன்னை நுகரும்படிச் செய்து,
அன்று நடந்த நிகழ்ச்சிகளை,
காட்சியாகக் காணும்படிச் செய்தது, என்றார் குருதேவர்.

தினமும், குழந்தை அகஸ்தியன், வளரும் பருவத்தில் அற்புதச் செயல்களை, செய்து கொண்டு இருப்பான். மலைவாழ் மக்களுக்கு, மூலிகைகளை பறித்து வந்து கொடுத்து, நோய்களைக் குணப்படுத்தி விடுவான்.

அவன் காட்டுக்குள் போகும்போது, ஏதாவது விஷப் பாம்பைப் பிடித்து வருவான். காட்டுக்குள் போகும்போது, தனியாகப் போவான். விஷப்பாம்பை வைத்து, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவான். பின், அந்தப் பாம்பை காட்டில் விட்டு விடுவான் என்று குருதேவர் விளக்கமாகச் சொன்னார். அதை, எம்மைக் காட்சியாகவும் காணச் செய்தார்.

இது போன்று, அவன் நடந்து செல்லும் பருவத்தில், பாம்பு இனங்களை, ஒடிச் சென்று பிடித்து விளையாடுவான். பயமின்றி காட்டுக்குள் சென்று விடுவான்.

அகஸ்தியனைக் கண்டதும், புலி, கரடி, நரிகள், ஓநாய்கள், யானைகள் முதற்கொண்டு விலகிச் சென்று விடுகின்றன.

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் நிலையில், பசி எடுத்தால் அவன் கைகளுக்கு எட்டும் மூலிகைகளைப் பறித்துத் தின்று, பசியைப் போக்கிக் கொள்வான்.

பல மூலிகைகளை நுகர்ந்தறிந்து, பறித்து வருவான். அக்கால மக்களின் நோய்களை நுகர்ந்தறிந்து, அதற்குண்டான மூலிகைகளைக் கொடுத்து, நோய்களைக் குணப்படுத்தி விடுவான், அகஸ்தியன்

இதையெல்லாம் பார்த்த புலஸ்தியரும், அவரது மனைவியும், ஆச்சரியமும், அதிசயமும் படுகின்றார்கள். அவர்களது இன மக்களும், அகஸ்தியனின் செயலைக் கண்டு, தெய்வீகக் குழந்தை என்று மதித்து, வணங்கிச் செல்வார்கள்.

நான்கு வயது குழந்தைப் பருவத்தில், ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை, நுகர்ந்து அறிகின்றான். மாறுப்பட்ட செடியின் மணத்தையும், நுகர்ந்து அறிகின்றான். இரு மணத்தின் உணர்வுகள் சேர்ந்து, தன் உடலின் உணர்ச்சிகள் தன்னை எப்படி இயக்குகிறது என்று, தன் அகத்தின் இயக்கத்தை அறிவாக உணர்கின்றான்.
அகஸ்தியன் வானை நோக்கிப் பார்த்து, மேகங்களைக் கூடும்படிச் செய்து, மழை பெய்யும்படி செய்வான்.

இவ்வாறு. 5 வயது சிறுவனாக இருக்கும்போது, இளமையில் முதுமையானவர்கள் செய்யும் செயலைச் செய்து கொண்டிருப்பான், அகஸ்தியன்.