ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2012

புலி அடுத்து, ஏன் மலைப்பாம்பாகப் பிறக்கின்றது?

 
குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள் (6)
1. புலி செத்தபின் அதன் உடலில் என்ன நடக்கின்றது?
குருதேவர், “சரி போவோம் காட்டிற்குஎன்று சொல்லி, என்னைக் கூட்டிக் கொண்டு போனார். வெகு தூரம் போனோம். அங்கு ஒரு புலி இறந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் இங்கு உட்காரலாம் என்று சொன்னார்.

இறந்த புலியின் அருகில், அகலமான பாறை இருந்தது. அதில் உட்காரும்படி சொன்னார். உட்கார்ந்தோம். “இறந்த புலியைப் பார்த்துக் கொண்டே இருஎன்றார்.

பார்த்துக் கொண்டே இருந்தேன். புலியின் உடலிலிருந்து வரும் நாற்றத்தைப் பார்த்ததும், அங்கு என்னால் உட்கார முடியவில்லை.

நீ இங்கு உட்கார்ந்து, பார்த்து கொண்டே இருக்க வேண்டும்என்று கட்டாயப் படுத்தினார்.

வேறு வழியில்லாமல், நாற்றத்தைச் சகித்துக் கொண்டு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். புலியின் உடலில், புழுக்கள் அரித்துக் கொண்டு இருந்தன. நிறைய புழுக்கள் என்று சொன்னேன்.
பார்த்தாயா, புலியின் உயிர் உடலில் இருக்கும்போது, புலி சுவாசித்த உணர்வுகள், புலி உடலின் ஜீவ அணுக்களாக உருவாகி, ஜீவ அணுக்களின் மலங்கள், புலியின் உடலாகிறதுஎன்றார் குருதேவர்.

புலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின்,
புலியின் உடலை உருவாக்கிய ஜீவ அணுக்கள்
உயிர் அணுக்களாக மாறி,
புலியின் உடலை இரையாக்கி,
புழுக்களாக உடல் பெறுகின்றன என்று,
விளக்கமாகச் சொன்னார் குருதேவர்.

இவ்வாறு உடல் பெற்ற புழுக்கள், புலியின் தசைகளை இரையாக்கி வளரும் பொழுது, புழுக்களின் மலங்கள் வெளிப்படும்போது, நாற்றமாகின்றது என்றார், குருதேவர்.

இந்த நாற்றத்தை, இயக்க அணுக்கள் கவர்ந்திடும் நிலையில், நாற்றத்தை இயக்கும் அணுக்களாக, நம் பூமியில் பரவிப் படர்கின்றது என்றார் குருதேவர்.
2. இரத்தத்தை உறிஞ்சும் கொடி
இந்நிலையில், புலியின் நாற்றத்தைக் கவர்ந்து கொண்ட இயக்க அணுக்கள் கூட்டமாகப் போகும் பாதையில், இதன் அழுத்தத்தால், எதிர்படும் மற்ற தாவர இனங்களின் சத்தைக் கவர்ந்து கொண்ட இயக்க அணுக்கள், வேகமாக விலகிச் செல்லும்.

அப்படி விலகிச் செல்லும்பொழுது, விஷச் செடியின் சத்தைக் கவர்ந்து கொண்ட இயக்கும் அணுவில் மோதும் நிலையில், சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு சுழலும்போது, சுழல் காற்றாக மாறும் நிலையில், தன் அருகில் வரும் மற்ற தாவர இனங்களின் சத்தை கவர்ந்துக் கொண்ட இயக்க அணுக்களும், புலியின் உணர்வின் நாற்றத்தைக் கவர்ந்து கொண்ட இயக்க அணுக்களும், சுழல் காற்றால் ஈர்க்கப்படுகின்றது.

அப்படி ஈர்க்கப்பட்டு, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நிலையில் வெப்பமாகி, புலியின் உணர்வின் நாற்றமும், மற்ற தாவர இனங்களின் உணர்வுகளின் சத்துக்களும், விஷச் செடியும், விஷ உணர்வின் சத்துக்களும் ஒன்றாக இணைந்துவிடுகின்றது.

அவ்வாறு இணைந்து, ஒரு கொடியாக உருவாக்கும் வித்தாக உருவாகும் நிலை ஏற்படுகின்றது, என்று விளக்கமாகச் சொல்லி, இதைக் காட்சியாகவும் காண்பிக்கின்றார் குருதேவர்.

இவ்வாறு, கொடியாக உருவாகும் இந்த வித்து நிலத்தில் பதிந்தால், நிலத்தில் நீர்ப்பதம் இருப்பின், மின்னல் வரும்போது மின்னலின் அதிர்வுகள் இந்த வித்தில் மோதும் பொழுது, கொடியாக உருவாகும் நிலை ஏற்படுகின்றது.

இப்படி, கொடியாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்தக் கொடியின் அருகில் நின்றால், இந்தக் கொடி மெதுவாக நகர்ந்து வந்து, நம் காலைச் சுற்றிக் கொண்டு, நம் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார்.

ஆக, இரத்தம் உள்ள மானோ, ஆடு, மாடுகளோ, குருவி, காக்காய் போன்ற பறவைகளோ இந்தக் கொடியின் அருகில் நின்றால், கொடிகள் அவைகளைச் சுற்றிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சி விடும் என்றார்.

அந்தக் கொடி இருக்கும் இடத்திற்கு, என்னைக் கூட்டிக் கொண்டு போனார். கொடியின் அருகில் நிற்கும்படி சொன்னார்.
கொடி மெதுவாக நகர்ந்து, எனனருகில் வருகிறது.
என் காலைச் சுற்றுகின்றது.
என் உடலில் மின்சாரம் பாய்வது போன்று இருந்தது.

என் கையில் வைத்திருந்த கத்தியால், கொடியை வெட்டும்படிச் சொன்னார் குருதேவர்.

வெட்டினேன். வெட்டிய துண்டு, “பல்லி வாலை வெட்டினால், எப்படித் துள்ளுமோ, அதைப் போன்று துள்ளுகின்றது”. இதை அனுபவப் பூர்வமாக உணர்த்துகின்றார், குருநாதர்.

புலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தபின், புலியின் உடலை உருவாக்கக் காரணமாக இருந்த ஜீவ அணுக்கள், உயிர் அணுக்களாக மாறி, புலியின் அழுகிய தசைகளை உணவாக்கி, புழுவாக உடல்பெற்று, புழுவின் மலமாக வெளிப்படும் நிலையில் நாற்றமான மணம் வீசுகிறது.

இந்நிலையில், நாற்றமாக வெளிப்படும் மணத்தை இயக்க அணுக்கள் கவர்ந்து, அந்த நாற்றத்தை இயக்கும் அணுக்களாக மாறும் நிலையில், மற்ற தாவர இனங்களின் உணர்வுகளுடன் கலந்து, இணைந்து, ஒரு கொடியாகின்றது.

கொடியானபின், “புலி எப்படி இரத்தத்தை உறிஞ்சி, தன் உணவாக்கி வாழ்ந்ததோஅதைப் போன்றே, புலி இரத்தத்தை உறிஞ்சிடும் உணர்வுகள் கொடியுடன் கலந்திருப்பதனால், புலியைப் போன்றே, இரத்தத்தை உறிஞ்சி வளரும் கொடியாகின்றது.
3. உன்னிகள் எப்படித் தோன்றுகின்றன?
புலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின், புலியின் உடலை உருவாக்கக் காரணமான ஜீவ அணுக்கள், உயிர் அணுக்களாக மாறிவரும் நிலையில், புலியின் தசைகளை உணவாக உட்கொண்டு வாழும் புழுவாக, உடல்கள் பெறுகின்றது.

இந்நிலையில், புலியின் தசைகள் அனைத்தும் தீர்ந்தபின், புழுவிற்கு உணவின்றி, புழுவின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலையில், இரத்தத்தை உறிஞ்சி, உடல் பெறும் உயிர் அணுக்களாகச் செல்கிறது.

இவ்வாறு, இரத்தத்தை உறிஞ்சி உடல்கள் பெறும் உயிர் அணுக்களாகச் செல்லும் நிலையில், இந்த உயிர் அணுக்கள், புலி எத்தனை வகையான உடல்களைக் கொன்று தின்றதோ, அத்தனை வகையான உடல்கள், இந்த உயிர் அணுக்களை ஈர்க்கும் நிலையில், ஈர்க்கப்பட்ட உடலகளில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சி, உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது
இவ்வாறு, இரத்தத்தை உறிஞ்சும் உயிர் அணுக்கள் உன்னியாகவும், இரத்தத்தை உறிஞ்சும் ஈக்களாகவோ உடல்பெற்று, உன்னியாக, ஈக்களாக இரத்தத்தை உறிஞ்சி வாழும் நிலை ஏற்படுகின்றது.
4. புலி அடுத்து, ஏன் மலைப்பாம்பாகப் பிறக்கின்றது?
புலி, எத்தனை வகையான உடல்களைத் துன்புறுத்தி, வேதனைப்படுத்திக் கொன்று இரத்தத்தைக் குடித்து, தசைகளைத் தின்று வளர்ந்ததோ, வேதனைப்படுத்தித் தின்ற, வேதனையான உணர்வுகள் அனைத்தும், புலியின் உயிர் ஆன்மாவாகப் பெருகுகின்றது.

அப்படி வளர்ந்து, புலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலையில், மலைப்பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று, மலைப்பாம்பாக உடல் பெறுகின்றது

ஆனால், மலைப்பாம்பாக உருப்பெற்ற நிலையில்,
அந்தப் பாம்பு தன் உணவுக்காக, ஒரு ஆட்டைக் கவ்விப்பிடித்து
ஆட்டை விழுங்கும் போது,
எத்தனை வேதனைப்பட்டு ஆட்டை முழுமையாக விழுங்கி,
தன் இரையாக்கி உடலை வளர்க்கின்றது என்று உணர்த்தி
காட்சியாகவும் காண்பித்தார், குருதேவர்.

பார்த்தாயா? புலி தன் உடலை வளர்க்க எத்தனை உடல்களை வேதனைப்படுத்திக் கொன்று, இரத்தத்தை உறிஞ்சி, தசைகளை ரசித்துத் தின்று, உடலை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

ஆனால், புலியின் உயிர் புலியின் உடலில் இருக்கும்போது வேதனைப்படச் செய்த உணர்வுகள், ஜீவ அணுக்களாக உருவாகி, வேதனைப்படும் உடலாக உருவாக்கி, நோயாக்கி, புலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்று, வேதனைப்பட்டே, இரையை வேதனையுடன் விழுங்கி வாழும், மலைப்பாம்பாக உடல் பெறச் செய்து விடுகிறது உயிர், என்று விளக்கமாகச் சொன்னார் குருதேவர்.
5. பிறரை வேதனைப்படுத்தி இரசித்து வாழ்ந்தால், அடுத்து புலியாகத்தான் பிறப்போம்.
இதைப் போன்றே, உன் வாழ்க்கையில் பிறரை வேதனைப்படும்படி செய்து, அதை ரசித்து வாழ்ந்தாயானால், உன் உயிர், வேதனைப்படச் செய்த உணர்வுகளை உன் உடலில் ஜீவ அணுக்களை உருவாக்கி, உடலில் வேதனைப்படுத்தும் நோய்களை உருவாக்கிவிடும்.

பின், வேதனைப்படும் உணர்வுகளுடன் உன் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா, வேதனைப்படுத்தித் தன் இரையாக்கி வாழும், புலியின் உடலின் ஈர்ப்புக்குள் நுழைந்து சென்று, புலியாக உடல் பெறச் செய்துவிடும் உன் உயிர்.
இன்றைய வாழ்க்கையில், எந்த வகை உணர்வுகளை உன் உடலில் வளர்த்துக் கொள்கிறாயோ, அதற்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கிவிடும் உன் உயிர் என்று உபதேசித்துவிட்டு, காட்சியாகவும் காண்பித்தார் குருதேவர்.