ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2012

குருநாதர் எமக்கு உணர்த்திய விஷ முறிவு வேர்களைப் பற்றிய அனுபவம்

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள் (1)
1. குருநாதர் எம்மை எதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்?
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், மிருகங்கள், யானைகள், விஷ ஜந்துகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குகைகள், புதர்களில் மறைந்து வாழ்ந்து வந்த பண்டைய கால மனிதர்கள் (புலையர்கள்), விலங்கினங்கள், மிருகங்கள், பறவை பட்சிகளை வேட்டையாடி, அதன் இறைச்சியினை தங்கள் உணவாக உட்கொண்டும் கனிவாக்கங்கள் விளையும் கால பருவங்களில் கனிகள் காய்கறிகளைத் தங்கள் உணவாக உட்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

மிருகங்கள் தங்கள் இறைக்காக மான், மாடு ஆடுகளையும் மனிதர்களையும் வேட்டையாடித் தின்று, தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.

விலங்கினங்கள், புல், தாவரங்களை மேயச் செய்கின்றன. ஆடு, மாடு, மான்கள் தங்களைக் கொன்று விழுங்கும் மிருகங்களின் மணத்தை நுகர்ந்தறிந்து, மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மறைவான இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன.

பண்டைய கால மனிதர்கள், (புலஸ்தியர்கள்) தங்களது அனுபவ அறிவால், பற்பல மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து, மனிதருக்கு வரும் நோய்களைப் போக்க, நோய்க்கு ஏற்ப மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களைப் போக்கிக் கொண்டார்கள்.

குகைகளில், புதர்களில் வாழ்ந்து வந்த புலஸ்தியர் குடும்பம், பாம்புகள், விஷப் பூச்சிகள், விஷ வண்டுகள், கொசுக்கள், நாய், நரிகள், புலிகள், யானைகள், கழுதைப் புலிகள் போன்ற பலவகை மிருகங்களிடம் இருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மூலிகைகளின் ரகசியங்களை அறிந்துக் கொண்ட புலஸ்தியர்கள், தாங்கள் தங்கியுள்ள குகையின் முகப்பில், பலவகை மூலிகைகளைப் பரப்பி வைத்துவிட்டு, உறங்கி விடுவார்கள்.

முலிகைகளின் மணத்தை நுகர்ந்த மிருகங்கள், விஷ ஜந்துக்கள், குகைப்பக்கம் வராது விலகிச் சென்று விடுகின்றன. இவ்வாறு  மிருகங்களிடமிருந்தும், விஷ ஜந்துக்களிடம் இருந்தும், தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இடி, மின்னல், தங்களைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள, இடிதாங்கி என்ற விழுதை, தங்கள் கைகளில் கட்டிக் கொள்வார்கள். அதனால் இடி, மின்னலிடமிருந்து, அவர்கள் காக்கப்படுவார்கள்.

இப்பொழுதும், தேன் எடுக்கச் செல்பவர்கள், உடல்களில் மூலிகைகளைப் பூசிக்கொள்வார்கள், அல்லது, வாயில் மூலிகைகளை மென்று, தேன் கூட்டின் மீது ஊதினால், தேனீக்கள் கொட்டுவதில்லை. விலகிச் சென்றுவிடுகின்றன.

இதைப்போன்று, அனுபவப்பூர்வமாய் அறிந்து கொள்வதற்கு, குருதேவர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
2. விஷ முறிவு வேர்களைப் பற்றிய என்னுடைய முதல் அனுபவம்
என்னை, ஓர் இடத்தில் அமரும்படிச் சொன்னார். அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில், மூலிகைகள் பலவற்றையும், வேர்கள் பலவற்றையும் கொண்டு வந்தார். என் கையில், ஒரு வேரைக் கொடுத்தார். ஒன்றும் சொல்லாமல், என் முதுகில் பல தேள்களைப் போட்டுவிட்டார்.

நான் தேள்களைக் கண்டு அலறிவிட்டேன்”. ஆனால், தேள்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை. அவைகள் அமைதியாக இருந்தன.

என்னைப் பார்த்து, குருதேவர்கெக்கெக்க…” என்று சிரித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஏதோ மூலிகையைக் கொடுத்தார். அதைச் சாப்பிடும்படி சொன்னார்

சாப்பிட்டேன்.

இனி உன் பசி தீர்ந்துவிடும்என்று, சிரித்துக் கொண்டே சொன்னார்.

குருதேவர் கூறியபடி, எனக்குப் பசி எடுக்கவில்லை. சிறிது தூரம் என்னைக் காட்டுக்குள் கூட்டிச் சென்றார். ஒரு இடத்தில் குருதேவர் அமர்ந்து கொண்டார். என் கையில், ஒரு பச்சிலையைக் கசக்கிப் பூசிக் கொள்ளும்படி கூறினார்.

அவர் சொன்னபடி பூசிக்கொண்டேன். கையில் வேர் ஒன்றைக் கொடுத்து, கையில் வைத்துக் கொள்ளும்படி சொன்னார். அந்த வேரைக் கையில் வைத்துக் கொண்டு, குருதேவர் குறித்த இடத்தைக் காட்டினார்.

அங்கு ஒரு பொருள் இருக்கும்,. அதை எடுத்துக் கொண்டுவாஎன்று கூறினார்.

குருதேவர் கூறிய இடத்திற்குச் சென்றேன். அங்குச் சென்றபின் தான், என்ன பொருள் என்று தெரியவந்தது. நான் எப்போதும் பார்க்காததைப் பார்த்து வியப்படைந்தேன். “அந்தப் பொருள் எது தெரியுமா? நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்”.

காளிங்கராயன்என்ற மிகப் பெரிய கருநாகன். மலைப் பாம்பைப் போன்று, தடிமனாக முப்பது அடி நீளம் இருக்கும். குரு அருளால் அங்கு பயம் வரவில்லை. குருதேவர் கூறியபடி, அந்த நாகம் சுருண்டு படுத்துக் கொண்டது.
அந்த நாகனைத் தொடும்படிக் கூறினார்.

தொட்டேன். பாம்பு ஒன்றும் செய்யவில்லை.

அதைத் தூக்கிக் கொண்டு வரும்படிக் கூறினார்.

என்னால் தூக்க முடியவில்லை என்று சொன்னேன்.

சரி வந்துவிடு என்று சொன்னார். குருதேவரிடம் வந்துவிட்டேன்.
3. வெளிச்சத்தை உமிழும் மரப்பட்டை
அன்று, பொழுது இருண்டு விட்டது. வேறு ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். கும்மிருட்டு சூழ்ந்து கொண்டது. நான் திகைத்தேன். குருதேவர் மறைந்து வைத்திருந்த பையிலிருந்து ஒரு பட்டையை எடுத்தார்.

ஆனால், அந்தப் பட்டையோ மெர்குரி போன்று, பிரகாசமான வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அந்த வெளிச்சத்தில், கொஞ்ச தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து சென்றோம்.

நான் கலைத்துவிட்டேன். நான் சோர்ந்த நிலையைப் பார்த்து, ஒரு மரத்தடியில் விரிப்புகள் ஒன்றும் இல்லை. தழைகளைப் பறித்து, தூசிகளைத் துடைத்துவிட்டு, தழைகளை விரித்துப் படுத்துக் கொண்டோம்.

என் கையில், சில மூலிகைகள்,
சில வேர்களைத் துணியில் கட்டி,
என் இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி சொன்னார்.
நானும், இடுப்பில் கட்டிக் கொண்டுத் தூங்கிவிட்டேன்.

அன்றிரவு, நடுநிசி இருக்கும் உறுமல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு முழித்துக் கொண்டேன். குருதேவர் வைத்திருந்த மெர்குரிப் பட்டை மூடாமல் இருந்தது. கும்மிருட்டாக இருந்தால் பட்டையில் இருந்து வெளிப்படும் வெளிச்சம், 30 அடி தூரம் வரை பரவி இருந்ததால், உறுமிக் கொண்டுவந்தது, கரடி ஒன்று தெரிய வந்தது.

குருதேவர் நல்ல தூக்கத்தில் இருந்தார். நான் விழித்து இருந்து, கரடியின் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கரடி எங்கள் பக்கம் வராமல், வேறு பக்கம் போய்விட்டது. பெரிய, பெரிய கொசுக்கள், ரீங்காரம் இட்டுக் கொண்டு, பறந்து கொண்டு இருந்தன. எங்கள் பக்கம் வரவில்லை. எங்களைக் கடிக்கவும் இல்லை.

விஷப் பூச்சிக்களும், விஷ வண்டுகளும் வேகமாக பறந்து வரும் வேகத்தில், எங்கள் அருகில் வரும் முன் 1 அடி தூரத்தில் கீழே விழுந்து, பறந்து ஓடி விடுகின்றன. சுல்லி எறும்புகள், எங்கள் பக்கம் வராது ஓடிவிடுகின்றன.
எனக்குத் தூக்கம் வரவில்லை. விழித்துக் கொண்டிருக்கிறேன். மான்கள், பன்றிகள் அதனதன் இரையைத் தேடிச் செல்கின்றன. செந்நாய்கள், இரையைத் தேடி வருகின்றன. குருதேவர் தூங்குகிறார். எங்கள் பக்கம் வந்த செந்நாய்கள், மோப்பத்தால் எங்களை நுகர்ந்து அறிகின்றன. விலகிச் சென்று விடுகின்றன. எனக்குத் தூக்கம் வந்து, பயம் இல்லாததால் தூங்கிவிட்டேன்.

4. காட்டிற்குள் உணவு
மறுநாள் விடிந்து விட்டது. எழுந்து கொண்டோம். குருதேவர் என்னைப் பார்த்துநன்றாகத் தூங்கினாயாஎன்று. கேட்டார்,

நடந்தவைகளைச் சொன்னேன்.

பயப்படவில்லையா என்று கேட்டார்.

நீங்கள் அருகில் இருந்ததால் பயம் வரவில்லை என்று சொன்னேன்.

காலை உணவு வேண்டுமாஎன்று கேட்டார்.

வேண்டும் என்றேன்.

சரி, உணவு தேடக் காட்டுக்குள் செல்வோம். என்று, என்னைக் கூடக் கூட்டிக் கொண்டு போனார். காட்டிற்குள், பல செடி கொடிகளைச் சுட்டிக் காட்டி, இவைகளெல்லாம், மருத்துவ குணமுள்ளது என்றார்.

வேறு சில இடங்களுக்கு, என்னை அழைத்துச் சென்றார். “உனக்கு பசி வந்துவிட்டது அல்லவாஎன்று என்னைக் கேட்டார்.

ஆமாம்என்று சொன்னேன்.

ஒரு கொடியைக் காட்டி, அதன் அடியில் கிழங்கு இருக்கும், அதைத் தோண்டி எடுத்து வரும்படி சொல்லிவிட்டு, அதோ அந்த மரத்தடியில் போய் இருக்கிறேன், என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் கிழங்கைத் தோண்டி எடுத்துக் கொண்டு, குருதேவரிடம் சென்றேன்.

குருதேவர் குச்சிகளை, செத்தைகளை பொறுக்கிக் குவித்து வைத்து இருந்தார்கள். நான் கொண்டு சென்ற கிழங்கை, கீழே வைக்கும்படி சொன்னார்.

நாங்கள் கொண்டு சென்ற பாத்திரத்தில் ஒன்றை எடுத்து, என் கையில் கொடுத்து, மூலிகையைக் கொஞ்சம் கொடுத்து, சிறிது தூரம் சென்றால், தணிவான செடியில் தேன் கூடு இருக்கும்.

அப்போது, நான் கொடுத்த மூலிகையை வாயில் போட்டு மென்று, தேன் கூட்டு மீது ஊது, தேனீகள் பறந்து போய்விடும். உன்னைக் கொட்டாது. தேனை எடுத்துவா, என்று சொன்னார்.

குருதேவர் சொன்னபடியே செய்து, தேனை எடுத்து வந்து கொடுத்தேன்.

குருதேவர், கிழங்கைச் சுட்டு ஆறவைத்துக் கொண்டு இருந்தார்கள். நான் கொடுத்த தேனையும், கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து, குருதேவரும் நானும் சாப்பிட்டோம், பின். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார் குருதேவர். மரத்தடியில், சிறிது நேரம் தூங்கினோம்.

என்னை எழுப்பி, “போகலாமா?” என்று கேட்டார்.

சரிஎன்றேன்.

மீதமுள்ள கிழங்கு மாவை எடுத்துக் கொண்டு, காட்டுப் பகுதியில் நடந்து கொண்டே இருந்தோம். மாலை 4 மணி இருக்கும். நீர் இருக்கும் இடமாகப் பார்த்து, மரத்தின் நிழலில் உட்காரும்படி சொன்னார். கொண்டு சென்ற, கிழங்கு மாவைச் சாப்பிட்டோம்.
5. காட்டிற்குள் தனிமையில் இருந்ததால் எனக்கு ஏற்பட்ட பயம்
ஓய்வு எடுக்கும்படி சொன்னார். நடந்து வந்த அலுப்பில், நன்றாகத் தூங்கிவிட்டேன். மாலை 6 மணி அளவில் எழுந்தேன். என் அருகில் குருதேவரைக் காணவில்லை.

15 அடி தூரத்தில் தண்ணீர் இருப்பதால், புலி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன், எனக்கு பயம் வந்துவிட்டது. புலியோ தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பியது. என்னைப் பார்த்தது,. எனக்கு இன்னும் அதிகமாகப் பயம் வந்துவிட்டது.

ஆனால், அந்தப் புலியோ அமைதியாகப் போய்விட்டது. அப்போதுதான், குருதேவர் கொடுத்த புலி மிரட்டி வேர், மூலிகைகள் எம் துணியில் கட்டியிருப்பதை உணர்ந்தேன்.

பல விலங்கினங்கள், அங்கு வந்து தண்ணீர் குடித்துக் கொண்டு செல்கின்றன. ஆறே முக்கால் மணி இருக்கும். இருட்டிக் கொண்டே உள்ளது. குருதேவரைக் காணோம். யானைகள் வருகின்றன. அப்போது, எனக்கு பயம் வரவில்லை.

யானை மிரட்டி வேர், மூலிகைகள் என் இடுப்பில் கட்டியிருப்பதால், யானைகள் தண்ணீரைக் குடித்துவிட்டுப் போய்விடுகின்றன.

நான் தனிமையில் இருப்பதால், எனக்குள் பயம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அப்போது, என் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றது.

வீட்டைப் பற்றிய கவலைகள். எதற்காக இந்தக் கஷ்டங்கள் பட வேண்டும்? தொழில்கள் செய்து கொண்டு, குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, நிம்மதியாய் இருக்கலாமே என்று உணர்வுகள் என்னுள் வலிமைப் பெறுகின்றன.

மன பயத்தால், சிந்தனை இழந்திருக்கும் நிலையில், நான் தொழில் செய்து வாழ்ந்த வாழ்க்கையில், என்னால் பதிவு செய்த உணர்வுகள் என்னுள் வலிமைப் பெற்று, “குழப்பத்தை உருவாக்கி விடுகிறதுஎன்று, என்னால் உணர முடிகின்றது.

குருதேவர்என் மனைவி இறந்துவிடும்என்ற நிலையில் இருந்த பொழுது, என் மனைவியின் நோயை நீக்கி, குணப்படுத்திவிட்டு, “இப்போது என்னை நம்புகிறாய் அல்லவாஎன்று கேள்வி எழுப்பிவிட்டு, “என்னுடன் வருகிறாயா?, நான் சொன்னதைச் செய்வாயா?” என்று கேட்டார் குருதேவர். நான்சரிஎன்று சொன்னேன்.
அதன்பின்தான், என்னை அழைத்துச் சென்று, காடுகளில் மலைகளில் நடக்கும் அதிசயங்கள், அற்புதங்களை எனக்குக் காண்பித்து, அந்த அற்புதங்களை என்னையும் செய்யும்படி உணர்த்தி, என்னையும் அற்புதங்களைச் செய்யும்படி கூறினார்கள் குருதேவர்.

ஆனால், தனியாக இருந்ததால்,
சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட பயத்தால்
குரு கொடுத்த அற்புத சக்திகளை மறந்து,
குருவை மறக்கச் செய்து,
கலங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குருதேவர் வந்தார்.

பல மூலிகைகளை, எடுத்துக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தார். “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டார்.

நான் பயத்தால் உங்களைக் காணவில்லைஎன்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன்.

மிருகங்களிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள, வேர்களை, மூலிகைகளை, உன் இடுப்பில் கட்டியிருக்கிறேன். உன் மனம் உறுதிப்படுவதற்கு, பல உபதேசங்கள், பல உபாயங்களையும் போதித்திருக்கிறேன்.

ஆனால், நீ தனிமையில் இருந்ததால், குருவைக் காணவில்லை என்ற பயம் உன்னில் வலிமை பெற்று, உன் உறுதியை இழக்கச் செய்துவிட்டது. சிந்திக்கும் திறன் இழந்து விட்டாய்.

நான் உனக்குக் கொடுத்த சக்தியை, நீ எண்ணி இருந்தால், உனக்கு பயம் வந்திருக்குமா? என்னைக் காணவில்லை என்று எண்ணியதால், உனக்குப் பயம் வந்தது. உன் மன வலிமையை அறியவே, நான் மறைந்திருந்தேன்.

இனியாவது, நான் கொடுத்த சக்தியை அறிந்து,
உன்னை அறிந்து,
உன்னைக் காத்து,
உலகை அறிந்து,
உலகைக் காத்திடும் ஞானியாக,
ஆகவேண்டும் என்று என் மனதைத் தெளிவாக்கினார். பின் அமைதியாகத் தூங்கிவிட்டோம்.