ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2012

ஆதிசக்தியின் அருள் பெற்ற "ஈஸ்வரா குருதேவா"

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்லும் பொழுது, ஓம் என்பது பிரணவம். ஆக, எனக்குள் ஜீவனாக இருந்து இயங்கும் உயிரைத்தான், “ஓம்” என்று சொல்வது.

“ஓம்” அதாவது, அது இயங்கி, எனக்குள் “ம்” என்று அடங்கி, நான் எண்ணிய இயக்கங்கள் அனைத்தையும் இயக்குகின்றது,. என்று பொருள்.

ஆக “ஓம்” ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது, இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும், இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து தசைகளுக்கும், இந்த உடலில் உள்ள எண்ணங்கள் அனைத்திற்கும், குருவாக இருப்பது நமது “உயிர்”.

ஆகையினாலேதான், “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்லும் பொழுது உயிரை எண்ணி ஏங்க வேண்டும். அதே சமயம், நமது குருநாதர் பெயரும் “ஈஸ்வரா” என்பதுதான்.

ஆக, அவர் ஜீவன் உள்ள சக்தியாக, குருவாக நின்று,
விண்வெளியின் ஆற்றல்மிக்க சக்தியை வளர்த்து,
உயிர் எப்படி ஒளியாக நின்று இயங்குகின்றதோ, இதைப்போல, அவர் மனித உடலிலிருந்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி, என்றும் நிலையான ஒளி சரீரமாக, சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றாக ஒன்றி, இன்றும் நிலைத்திருக்கின்றார்.

அவர் உடலிலே, உணர்வை ஒளியாக மாற்றிய நன்நாள் தான் “வைகுண்ட ஏகாதசி” என்பது. “ஏகாதசி” என்பது என்றும் ஒளிமயமான நாள், துயரமற்ற நாள் என்பார்கள்.

ஆகவே, நமது குருநாதர் பெயரும் “ஈஸ்வரா” என்று வருவதனால், அவருடைய நினைவையும்” உயிருடன் ஒன்றி நினைத்து, நாம் எண்ணி ஏங்க வேண்டும்.
ஆக, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணும் போதெல்லாம்,
வெறும் வார்த்தைகளாகச் சொல்வது பயனற்றது.

நாம் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போது, நம் உயிரைப் “பரிபூரணமாக” நினைவில் வைத்து, நமக்குள் ஈசனாக இருந்து இயங்குவதும், நம் உடலுக்குள் அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இயக்கிடும் நிலை பெற்றது, என்ற நினைவு கொண்டுதான், நாம் எண்ணி ஏங்க வேண்டும்.

ஏனென்றால் எல்லா மகரிஷிகளும் பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகள், மனித உடலுக்குள் எப்படி இயங்குகின்றது என்று காட்டினார்கள்.

“ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா” என்று சொல்லும்போது,
சூரியன் விஷத்தால் தாக்கப்பட்டு,
அந்த விஷத்தின் தாக்குதல் தாங்காது,
சுழற்சியின் வேகம் அதிகமாகி,
அதனால் ஏற்படும் வெப்பத்தின் தணல்கள் இங்கே வளர்ந்து,
விஷத்தை அது வெளிப்படுத்தி,
இந்த பிரபஞ்சத்தை இயக்கும் நிலைகள் பெற்றது.

நம்மைத் தேள் கொட்டினால், துடிதுடித்து வேகத்தின் இயக்கம் நமக்குள் அதிகமாகின்றது,
இதைப் போன்றே, இந்த உயிரணுவிற்குள்
விஷத்தின் துடிப்பு அதிகமாகத் தூண்டும் நிலைகள் வரும்போதுதான்,
உயிரணுவாகத் தோன்றி,
அந்த இயக்கத்தின் ஆற்றல் கொண்டு,
விஷத்தின் தாக்குதல் தாங்காத நிலைகள் கொண்ட,
உயிரின் துடிப்பலைகள்
ஏற்படும் நிலைகளால் தான்
மற்றதை உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது.

ஆகவேதான், “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா” என்று சொல்லுகின்றோம்.
உயிர் இவ்வாறு உயிராக இயங்குவதற்கு,
ஆதிசக்தியான விஷத்தின் உணர்வின் இயக்கச் சக்தியாக அது மாறி,
அது உயிரின் இயக்கமாக மாறுவதைத்தான்,
“ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா”
என்று எண்ணுகிறோம்.

ஆகவே, அந்த இயக்கத்தின் தொடர்பாக, இந்த உயிரின் துடிப்பு அதிகமாகும்போது, சூரியனுக்கு எப்படி வெப்பங்கள் ஏற்படுகின்றதோ, அதைப்போல நம் உயிரின் நிலை கொண்டு, இந்த துடிப்பின் இயக்கத்தால் இயங்கும் நிலை கொண்டு, நம் உடலில் காந்தங்கள் பரவுகின்றன.

சூரியன், தனக்குள் வெப்ப காந்தங்களை உருவாக்கி, ஓர் பிரபஞ்சத்திற்குள் அனைத்துக் கோள்களையும் தனக்குள் அணைத்து, அதனினின்று பெரும் சக்தியாக தனக்குள் ஒளியாக மாற்றி, தன் ஒளியின் சுடராக, அந்த காந்தத்தை உற்பத்தி செய்து, மற்றவைகளையும் இயக்கச் செய்கின்றது.

ஆக நமது உயிரும், இதைப்போன்ற நிலைகள் கொண்டு இயக்கப்பட்டு, உணர்வின் அலைகளை காந்த அலைகளாகப் பரப்பி, இந்த உடலுடன் உடலாக இயக்கச் செய்து, இந்த உணர்வின் எண்ண அலைகளாக இயக்குகின்றது. அவ்வாறு, இந்த நிலைகளில்  நமக்குள் இருந்து, ஈசனாக இயக்கிக் கொண்டிருப்பது நமது உயிர்,
என்ற இந்த நிலையை, தெளிவுறத் தெரிந்து கொள்வதற்கு,
“ஈசனான” நமது குருநாதர்
அந்த இயக்கச் சக்தியை உணர்ந்த நிலையை உணர்த்தி,
அவர் உணர்த்திய நிலைகள் கொண்டுதான், எமக்குள் இயங்கும் உயிரை ஈசனாக மதித்து, குருநாதர் காட்டிய வழியில், யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.