ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2012

செடியிலிருந்து வித்தா? வித்திலிருந்து செடியா?

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள் (5)
1. நம் பூமியில் புதுச் செடிகள் எப்படித் தோன்றுகின்றது?
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம், காந்தம், விஷம் இவை மூன்றும் ஒன்றாகச் சேர்ந்து, இயக்க அணுவாக உருவான அந்த அணுக்கள் நம் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து,  பூமியில் பரவிக் கொண்டே  இருக்கின்றது.

அப்படிப் பரவிக் கொண்டிருப்பதால், கசப்பான செடியிலிருந்து வெளிப்படும் கசப்பின் சத்தை, இயக்கும் அணுவில் உள்ள காந்தம் ஈர்த்து, வெப்பம் விஷத்துடன் இணைந்து கொண்டால், கசப்பின் சத்தை இயக்கும் அணுவாக மாறுகின்றது. இந்நிலையில், கசப்பின் சத்துக்களைக் கவர்ந்த அணுக்கள், இயக்க அணுக்களாகச் செடியின் அருகில் பெருகி, பூமியில் பரவுகின்றது.

இதைப் போன்றே, ஒரு துவர்ப்பின் செடியிலிருந்து வெளிப்படும் துவர்ப்பின் சத்தை, இயக்க அணுவில் உள்ள காந்தம் கவர்ந்து, வெப்பம் விஷத்துடன் இணைத்துக் கொண்டால், துவர்ப்பின் சத்தை இயக்கும் அணுவாக மாறுகின்றது. இந்நிலையில், துவர்ப்பின் சத்துக்களைக் கவர்ந்த அணுக்கள், செடியின் அருகில் பெருகி, பூமியில் பரவுகின்றன.

துவர்ப்பின் சத்தைக் கவர்ந்த இயக்க அணுக்கள்,
கசப்பின் செடியின் அருகில் வரும் பொழுது,
கசப்பின் உணர்வால்,
தன் அருகில் வராது தள்ளி விடுகின்றது.

இதைப் போன்றே, கசப்பின் சத்தைக் கவர்ந்த இயக்க அணுக்கள், துவர்ப்பின் செடியின் அருகில் வரும் பொழுது, துவர்ப்பின் உணர்வால், தன் அருகில் வராது தள்ளி விடுகின்றது.

கசப்பின் சத்தைக் கவர்ந்துக் கொண்ட அணுக்கள்,
கூட்டமாகப் போகும் நிலையில்,
கசப்பின் உணர்வின் வலிமையால்,
துவர்ப்பின் உணர்வின் இயக்க அணுக்களைத் தள்ளிவிடும்போது,
துவர்ப்பின் அணுக்கள் வேகமாகப் போகும்.

அப்படி வேகமாகப் போகும் பொழுது, அந்தப் பாதையில், விஷச் செடியிலிருந்து வெளிப்பட்ட, விஷச் சத்தைக் கவர்ந்து கொண்ட விஷ அணுக்களில், மோதி விடுகின்றன.
மோதியவுடன்,
விஷ அணுக்களால் தாக்கப்பட்ட துவர்ப்பின் அணுக்கள்,
சுழல் காற்றைப் போன்று
சுழலும் நிலை உருவாகின்றது.

இந்த நிலையில், கசப்பின் சத்தின் உணர்வின் இயக்க அணுக்கள்,
அந்தச் சுழற்சியால் ஈர்க்கப்பட்டு,
துவர்ப்பின் சத்தின் உணர்வும்,
விஷத்தின் உணர்வின் சத்தும், சுழல் காற்று 
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நிலையில் வெப்பமாகி,
மோதிக்கொண்ட மூன்று அணுக்களும் ஒன்றாக இணைந்து,
ஒரு புதுச் செடியாக உருவாகும். “வித்தாகஉருவாகின்றது.
இவ்வாறு உருவான வித்து மண்ணில் பதிந்தால், மின்னலின் ஒளி அதிர்வுகள் வித்தின்மீது படும் சந்தர்ப்பத்தில், அதற்குத்தகுந்த நீர்ப்பதம், இருந்தால், ஒரு செடியாக முளைக்கும் நிலை ஏற்படுகின்றது.

இந்நிலையில், இந்த வித்தில் இணைந்திருக்கும் கசப்பின் உணர்வின் சத்துக்கள் 20%, துவர்ப்பின் உணர்வின் சத்துக்கள் 20%, விஷச் செடியின் உணர்வின் சத்துக்கள் 10% என்ற கலந்துள்ள உணர்வுகளுக்கு ஒப்ப, அரளிச் செடியாக உருவாகும் நிலை ஏற்படுகின்றது.
2. செடியிலிருந்து வித்தா? வித்திலிருந்து செடியா?
இதைப் போன்று, வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் கசப்பின் சத்தை, இயக்க அணு வேம்பின் சத்தைக் கவர்ந்திடும் நிலையில், வேம்பின் இயக்க அணுவாக உருவாகின்றது.
ரோஜாச் செடியின் பூவின் மணத்தின் சத்தை, இயக்க அணு கவர்ந்திடும் நிலையில், ரோஜாச் செடியின் மணத்தை இயக்கும் அணுவாக மாறுகின்றது.
விஷச் செடியிலிருந்து வெளிப்படும் சத்தை, இயக்க அணு கவர்ந்திடும் நிலையில், விஷத்தை இயக்கும் அணுவாக மாறிவிடுகின்றது.

வேம்பில் விளைந்த வித்து நிலத்தில் பதிந்து இருந்தால், தாய் மரமான வேம்பின் சத்தைக் கவர்ந்து, வேப்பமரமாக வளர்கின்றது.

ரோஜாச் செடியில் விளைந்த வித்து நிலத்தில் பதிந்து இருந்தால், ரோஜா செடியின் சத்தைக் கவர்ந்து, ரோஜாச் செடியாக வளர்கின்றது.

விஷச் செடியில் விளைந்த வித்துக்கள் நிலத்தில் பதிந்து இருந்தால், விஷச் செடியின் சத்தைக் கவர்ந்து. விஷச் செடியாக வளர்கின்றது.

வேம்பின் உணர்வின் சத்தைக் கவர்ந்திடும் அணுக்கள் கூட்டமாகப் போகும் நிலையில், கசப்பின் உந்தும் உணர்வால், ரோஜாச் செடியின் துவர்ப்பின் சத்தைக் கவர்ந்துக் கொண்ட இயக்க அணுக்கள், வேகமாக விலகிச் செல்லும்.

அந்தச் சூழ்நிலையில், விஷச் செடியிலிருந்து வெளிப்படும், விஷச் சத்தைக் கவர்ந்து கொண்ட இயக்க அணுக்களில் மோதியவுடன், சுழல் காற்றாக மாறும்.

அப்படிச் சுழலும் நிலையில்,
வேம்பின் உணர்வின் சத்தை ஈர்க்கும் சூழ்நிலையில்,
இந்த மூன்று அணுக்களும்,
ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலையில் வெப்பமாகி,
இந்த மூன்று இயக்க அணுக்களும் ஒன்றாகி,
ஒரு வித்தாகும் நிலை உருவாகின்றது.

இவ்வாறு உருவான வித்தில், 100% வேம்பின் சத்தும், 20% ரோஜாச் செடியின் சத்தும், 3% விஷச் செடியின் சத்தும் கலந்து ஒரு வித்தானால், இந்த வித்து நிலத்தில் பதிந்தால், நீர்ப்பதம் இருப்பின், அது சமயம் மின்னல் உருவானால், மின் அதிர்வுகள் இந்த வித்தில் பாயும் பொழுது, வித்தில் உள்ள சத்தின் உணர்வுகள் இயங்கும் நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு, இந்த வித்தில் இயங்கும் நிலை ஏற்படும் பொழுது, இந்த வித்தில் உள்ள  சத்தின் உணர்வுகள்,
100% வேம்பின் சத்தைக் கவர்ந்து கொள்கின்றது.
20% ரோஜாச் செடியின் துவர்ப்பின் சத்தைக் கவர்ந்து கொள்கின்றது.
3% விஷச் செடியின் சத்தைக் கவர்ந்து கொள்கின்றது.

அப்படி  கவர்ந்து கொண்டு வளரும் பொழுது, இந்த மூன்று வித உணர்வுகளின் சத்துக்கள், ஒன்றாக இணைந்து கொண்ட உணர்வுகளுக்கொப்ப, கருவேப்பிலைச் செடியாக உருவாகிறது.
செடியில் இருந்து வித்தா? வித்தில் இருந்து செடியா? என்ற வினாக்களுக்கு விடையளித்து விட்டு, வித்து எப்படி உருவானது? என்று காட்சியாகக் காண்பிக்கிறார் குருதேவர்.