ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2012

அருள்ஞானச் சக்கரம்

1. அருள்ஞானச் சக்கரம் விளக்கம்
எம்மை எப்படி, நமது குருநாதர் ஆயுள் கால மெம்பராக துருவ நட்சத்திரத்தோடு இணைத்தாரோ, அதே வழியில்தான் உங்கள் அனைவரையும், துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து, ஆயுள் கால மெம்பராக, அந்த துருவ நட்சத்திரத்தோடு உங்களை இணைக்கின்றோம்.

“அருள்ஞானச் சக்கரத்தை” எதற்குக் கொடுப்பது என்றால், காலை 4.00 மணிக்கெல்லாம், இந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து, தியானிக்க வேண்டும்.

அப்படி தியானிக்கும் பொழுது, ஒளி வரும்.. எதையெல்லாம் நீங்கள் எண்ணுகின்றீர்களோ, அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையும். நல் உணர்ச்சிகள் வரும்.

அருள்ஞானச் சக்கரம், ஒரு நினைவுச் சின்னம்தான். குருநாதர் கொடுத்த ஆறாவது அறிவின் தன்மையை, சக்கர வடிவில் கொடுத்தது. அந்தச் சக்கரத்தில், “பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தி சித்தி விநாயகா” என்று, மூன்று நிலைகளை வைத்தது.

பிரம்ம சக்தி என்றால், எது உருவானதோ, அதன் மணம் ஞானம்.
விஷ்ணு சக்தி என்றால், அது வெப்பமானாலும் ஈர்க்கும் சக்தி, உருவாக்கும் சக்தி.
உணர்வின் தன்மை சிவமாகும் பொழுது, சிவசக்தி (உடலாகும் பொழுது) உடலுக்குள் அந்தச் சக்தியின் இடப்பக்கம், சேர்த்துக் கொண்ட வினை. அந்தக் குணம், அது வினைக்கு நாயகனாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை, கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாக்க வேண்டும். அது அதிபதியாகும் பொழுது, இருளை நீக்குகின்றது.

ஓம் கணபதி என்ற இந்த உணர்வை எடுத்துத்தான், நம் குரு காட்டிய அருள் வழியில், நம் உடலின் சக்கரமாக, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்மை எப்படி இயக்குகின்றது? என்பதனை, சக்கரத்தை வடிவமைத்துக் கொடுத்தது.
2. சக்கரத்தை உற்றுப் பார்த்து தியானிக்கும் நிலை
நமது குருநாதர், சக்கரத்தை வடிவமைத்த இந்த உணர்வின் தன்மை கொண்டு, உங்கள் வீட்டில் வைத்து தியானிக்கும் பொழுது, நீங்கள் சக்கரத்தை உற்றுப் பார்த்து, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால், அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று, சிறிது நேரம் ஏங்குங்கள்.

ஏங்கிவிட்டு, சக்கரத்தைப் பாருங்கள். அதிலிருந்து ஒளி வரும். உங்கள் உடலில், அந்த உணர்ச்சிகள் வரும். அதற்குப்பின், உங்களுக்கு வேண்டியதை எண்ணுங்கள். சக்கரத்தின்முன், நல்லவைகளைத்தான் எண்ண வேண்டும். குறைகளையே எண்ணக் கூடாது.

எங்கு வெளியில் சென்றாலும், செல்வதற்கு முன் இந்தச் சக்கரத்தைப் பார்த்து, ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள். உங்கள் காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை, அடிக்கடி உங்களுக்குள் செருகேற்றிக் கொள்ளுங்கள். அந்த உணர்வை நீங்கள் பெற்றால், தீமையை மாற்றி அமைக்கும் சக்தி, உங்களுக்குள் வந்துவிடும்.

உங்கள் சொல்லினைக் கேட்போர் உணர்வுகளில், இருளை நீக்கும், ஞானத்தை ஊட்டும் சக்தியாக வரும். தியானவழி அன்பர்கள், நாம் அனைவரும் இதைப் பெருக்க வேண்டும். உங்கள் ஆசையை மட்டும், அந்தச் சக்கரத்தில் கூட்டிவிடாதீர்கள்.

நம் ஆசை, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் நிலையாகத்தான், இருக்க வேண்டும். உடல் ஆசையைக் கூட்ட வேண்டாம்.  எங்கள் செயல், நல்லதாக இருக்க வேண்டும். எங்கள் சொல், எல்லோரையும் நலம் பெறச் செய்ய வேண்டும். எங்கள் வாழ்க்கை, நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை மட்டும், எண்ண வேண்டும்.
3. சக்கரத்தைப் பார்த்து தியானிப்பதால் ஏற்படும் பலன்கள்
இது மாதிரி எண்ணும் பொழுது, நமக்குள் நல்ல உணர்வைக் கொடுக்கும். இப்படிச் செய்து வாருங்கள். உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த அருள் ஞானச் சக்கரத்தை, ஒரு தெளிவான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சக்கரத்தின் முன் தியானிக்கும் பொழுது, குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்களுக்குள் வளரவேண்டும். இந்த வீட்டிற்குள் வந்தால், நோய் அகல வேண்டும், என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.

இந்த உணர்வுகளைச் செயல்படுத்தினோம் என்றால், வீட்டிற்குள் தீமைகள் வராது தடுத்துவிடலாம். தீமை என்ற நிலையை மாற்றி, அருள் என்ற உணர்வுகளைப் புகச்செய்து, அதை வணங்கிப் பழக வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்தீர்கள் என்றால், தீமைகள் அகலும். உங்கள் ஊர் பக்கம், நல்ல மழை பெய்யும். நீங்கள் இருக்கும் பக்கம், உங்கள் மூச்சலைகள் பரவும் பொழுது, தானியங்கள் நன்கு விளையும். இந்த மாதிரி மாற்றி அமைத்து, வாழ்க்கையில் தீமைகளை ஒளியாக மாற்றும் நிலைக்கு, நாம் எல்லோரும் வர வேண்டும்.

நாம் எல்லோரும், ஒன்றாகச் சேர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், நாம் வாழ வேண்டும்.
நம்முடைய இந்த வாழ்க்கைக்குப் பின்,
சப்தரிஷி மண்டலம்தான் போக வேண்டும்.
நமது வாழ்க்கையில், இன்றைய ஒவ்வொரு செயலிலும், அந்த எண்ணம்தான்  அடிப்படையாக இருக்க வேண்டும்.
4. குழந்தைகள் சக்கரத்தின் முன் தியானிக்க வேண்டியது
குழந்தைகள் அந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து, அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்,. துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று, தியானிக்க வேண்டும்.

அதற்குப்பின், கல்வியில் ஞானம் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், மனபலம் பெற வேண்டும், மனவளம் பெற வேண்டும், பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். கற்றவை அனைத்தும் என் நினைவில் வரவேண்டும், சிந்திக்கும் ஆற்றல் பெற்று, எனக்குள் தெளிவு பெற வேண்டும், தெளிவான கல்வி, தெளிவான நிலை பெற வேண்டும் என்று, சக்கரத்தின் முன் அமர்ந்து, எண்ணி வணங்கினால், அந்த அருள் வழிகள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

தேர்வுக்குப் போகும் முன், இந்த மாதிரி எண்ணிவிட்டுப் படியுங்கள்.
உங்களுக்கு நல்ல ஞானத்தை ஊட்டும்.
தெளிவான நிலை வரும்.
5. நாம் இருக்கும் இடத்தில், எத்தகைய விஷத்தன்மையும் வராது தடுக்க முடியும்
குறைகளை நினைக்கும் பொழுதெல்லாம், அந்தக் குறைகள்தான், உங்களை இயக்கும். பிறருடைய தவறுகள் நம்மை இயக்குகின்றது. அந்த மாதிரி நேரங்களிலெல்லாம், ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின், யாரால் அந்தக் குறை வந்ததோ, அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும். பிறருக்கு நல்லது செய்யும் உணர்வு வரவேண்டும் என்று எண்ணும் பொழுது, இதன் உணர்வு நமக்குள் விளைகின்றது.

இந்த மாதிரி சொல்லப்படும் பொழுது, பிறர் உணர்வில் கலந்து, அவரும் மாறும் நிலை வருகின்றது.
வீட்டிற்குள்ளும் இந்த நிலை படர்ந்து, தீமைகள் வருவதில்லை.
நம் தெருவிற்குள்ளும் இது படர்ந்து, வேற்றுமையை இது மாற்றும்.
நல்ல உணர்வுகள் படரும். ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

இதைப் போன்று, ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம் அன்பர்கள் செய்துவர, நம் நாட்டிலும், இந்த உலகிலும், அருள் உணர்வுகள் படர ஏதுவாகின்றது. அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள், இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படருகின்றது.

ஆகவே, இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும், அருள் ஞானம் பெறவேண்டும், அருள் உணர்வுகள், அவர்கள் அனைவருக்குள்ளும் விளைய வேண்டும். நாளைய உலகம், அருள் உலகமாக மாற வேண்டும். இந்த உலகில் படர்ந்துள்ள, அனைத்து நச்சுத்தன்மைகளும் நீங்க வேண்டும் என்று, தொடர்ந்து இந்தச் சக்கரத்தைப் பார்த்து, தியானித்து வர வேண்டும்.

அப்படிச் செய்து வந்தால், எத்தகைய சூறாவளியோ, பூகம்பமோ அல்லது விஞ்ஞான விஷத்தன்மைகளால் ஏற்படக்கூடிய கடுமையான நிலைகளோ, நாம் இருக்கும் இடத்தில் வராதபடி, நிச்சயம் தடுக்க முடியும். அதற்குத்தான் இதைச் சொல்வது.
6. நாம் அனைவரும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளாக வளருவோம். கணவனும் மனைவியும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும். நம் குடும்பத்திற்குள், உயர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும். குறைகள் வந்தால், நீக்கிப் பழக வேண்டும்.

அதற்குத்தான், இந்த அருள்ஞானச் சக்கரத்தைக் கொடுப்பது. சக்கரத்தை நீங்கள் மதித்துப் பழகவேண்டும். வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம். நமக்குள், ஆறாவது அறிவின் இயக்கம் எப்படி இருக்கின்றது? என்பதைச் செயல்படுத்திக் கொண்டு வரும். உங்கள் சொல், பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்.

நாம் எல்லோரும், துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்.

எல்லாவற்றையும் உருவாக்கிய உணர்வு கொண்ட, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம்தான், இதையெல்லாம் தெரிந்து கொண்டோம்.

குருதேவரை நினைத்து, துருவ நட்சத்திரத்தை நினைத்து, வாழ்க்கையைக் கொண்டு போனோம் என்றால், நாம் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழலாம். இருளை அகற்றும் அருள் சக்தி பெறலாம். நாம் இருக்கும் இடத்தில், நல்ல மழை பெய்யும். ஊருக்குள் இருக்கும், பகைமையை மாற்றியமைக்கலாம், இந்த உலகையும் காக்கலாம்.

எல்லா உயிரும் கடவுள் எல்லா உடலும் கோவில்.
எல்லா உடலும் சிவன். எல்லாக் கண்களும் கண்ணன்.
எண்ணும் எண்ணம் இராமன்.
நாம் மகிழ்ச்சி என்ற எண்ணங்களையே எண்ண வேண்டும். நம் எண்ணங்களில், தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளரவேண்டும் என்ற உணர்வோடு, நாம் வாழ்வோம், வளர்வோம்.

இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டு, இதையே உறுதியாக எண்ணி, அருள் பெற வேண்டும் என்று வாழுங்கள்.

குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் உண்ர்வைப் பெறுவோம். அருள் ஒளி என்ற உணர்வைப் பெற்று, பிறவி இல்லா நிலையை அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். எமது அருளாசிகள்.