1. குரு என்றால் யார்?
குரு என்றால் என்ன? உடலுக்குள் இருக்கும்
அனைத்திற்கும், உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும்
பொழுது, அதனின் அறிவாக இயக்குகின்றது. இந்த
உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு, சிந்தித்து பாருங்கள்.
குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்? உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ,
உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால், அது என் உயிரான குருவிற்கு
நான் செய்யும் தீங்கேயாகும்.
இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை, வளர்க்கப்பட்ட நிலைகளில் இருந்து
நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் குருவிற்கு நான் செய்யும் துரோகம்.
எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு, எத்தனையோ நிலைகள்,
உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டதுதான் இந்த உயிர்.
பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து
விடுபட்டு, நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர். அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால், அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக
வேண்டும். துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள், நாம் அனுபவித்துத்தான் ஆக
வேண்டும்.
நமது குரு, பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது,
யானையைக் காட்டி,
அந்த யானையிடமிருந்து தப்பிக்க,
யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.
பூனை, எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து,
அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ
அதைப் போல, யானையின் மணத்தை நுகர்ந்து கொள்.
திரும்பத் திரும்ப நுகர்ந்து, அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது,
யானை வலுவுடையதுதான் என்றாலும்,
அதன் வலுவின்
தன்மை உனக்குள் சிக்கி, அது தாக்கும்
நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.
சில நேரங்களில் காட்டுக்குள் போகும்
பொழுது, குருநாதர் எமக்கு
அனுபவத்தைக் கொடுத்தார். அனுபவத்தைச் சொல்லுகின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும்
இல்லை. அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு, இந்த பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக
ஆகி விடும்.
2. தீமையை அடக்கிடும் குரு
நமது வாழ்க்கையில், நாம் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி, நம் குரு காட்டிய
அருள் வழி கொண்டு, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும். அதற்கு,
குரு பக்தி வேண்டும்.
குரு கவர்ந்த,
அந்த உணர்வின் சக்தி,
குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ
அவர் நினைக்கும் பொழுதெல்லாம்
குரு, தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.
எளிதில் செயல்படுத்த முடியும்.
தீமை என்ற நிலைகள், தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும். குரு பக்தி குறைந்து,
எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ கிடைத்த
சக்தியை உதறிவிட்டது போன்று, ஆகிவிடும்.
நாம் எடுக்கும் நிலைகளை, தெய்வத்தைச் சீர்படுத்திக் கொள்ளலாம். நாம் எண்ணும்
எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால், அந்த கோபத்தைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால், அந்த வேதனையைச்
செயல்படுத்தும் தெய்வமாகின்றது.
ஆனால், இவை அனைத்தையும் ஒடுக்கி, தீமைகளை அகற்றி, அசுர உணர்வுகளைத் தடுத்து,
உணர்வினை ஒளியாக மாற்றும், மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.
அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி,
துருவ நட்சத்திரமானார். அதனைப் பின்பற்றி,
“குரு என்ற வழிகளில்” நாம் பெற்றோமானால், நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து
விடுபட முடியும். இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்து, தன்னைத் தாழ்த்திக் கொண்டு, குருவிற்கு நாம்
தவறு செய்தால், அந்தத் தவறின் பலன், முன்பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால், பின்பகுதி
அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உடலிலே, தான் செய்யும் தவறின் உணர்வை, உயிர் உணர்த்திவிடும். யாரிடத்திலும்
பொய் பேசிடலாம். ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது. பிறருக்கு, நாம் தீங்கு விளைய வைத்து விடலாம்.
ஆனால், உயிரிடமிருந்து தப்பவே முடியாது. நாம் தவறு
செய்யவில்லை. ஆனால், உயிரிடமிருந்து தப்ப முடியாது.
குருவுக்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ, அதன் பலன்கள் நிச்சயம் தெரிந்துவிடும்.
அவருடைய வாழ்க்கையில், உயிரே அவருக்குள் உணர்த்தி,
நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்தி,
தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்திவிட்டால்,
உணர்வின் அறிவை, நிச்சயம் பெற்றேதான் ஆகவேண்டும்.
ஆகவே, நமது வாழ்க்கையில் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த உடலை விட்டு
எப்போது சென்றாலும், குரு காட்டிய அருள் வழியில், அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு,
நாம் அங்கே செல்ல வேண்டும்.
ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால்,
அந்தத் தீங்கின் தன்மை பற்று கொண்டால், அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும்
பொழுது, அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.
தீமையை அகற்றிடும்
நிலைகளை,
குருவாக ஏற்றுக்
கொண்டால்
“தீமையை அடக்கிடும்
குரு” என்ற நிலைகள் அடைகின்றது.
இன்றைய செயல், நாளைய நிலைகளாக அடைகின்றது. ஆகவே நாம் எதனின் நிலைகளை வளர்க்கின்றோமோ,
அதுவே நமக்குள் குருவாகின்றது.
ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால், அந்த வேதனை உணர்வே நமக்குள்
உருவாகின்றது. அதுவே குருவாகி, நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.
திருடன் என்ற நிலைகள் வந்தால்,
அதுவே குருவாகி, திருடன் என்ற நிலைகள் அடைந்து,
பிறருடைய துன்பங்களை அறியாது,
தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும் குருதான்.
மனிதனின் வாழ்க்கையில், நம் குரு காட்டிய அருள் வழியில், நஞ்சினை வென்று, உணர்வினை
ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில், நாம் எந்த குருவைப் பின்பற்றுகின்றோமோ, அந்த “குரு உபதேசித்த உணர்வை”, தனக்குள் எடுத்தால், தீமைகளை அகற்றி, அருள் ஒளி என்ற சக்திகளை
ஊட்டும்.
அரும் பெறும் உணர்வை, நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்.
மெய்ப்பொருள் என்ற நிலைகளை உருவாக்குவோம்.
அனைத்து உலக
மக்களின் உயிரையும், ஈசனாக மதிப்போம். அனைத்து
உலக மக்களும், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று,
தவம் இருப்போம்.
3. குரு வாக்கை மதிக்க வேண்டும்
மகரிஷியின் அருளாற்றல் நாங்கள் பெற வேண்டும், எங்கள் பார்வையால், அனைத்தும்
நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை இணைத்துவிட்டால், இந்த உணர்வுகள் பிரம்மம் ஆகின்றது.
அது கருவாகின்றது, உருவாகின்றது. தீமை என்ற உணர்வின் சக்தி, நமக்குள் வராதபடி பாதுகாப்பாகின்றது.
அதற்கு குரு பலம் வேண்டும்.
நமது குருநாதர், மிகவும் சக்தி வாய்ந்தவராக
இருந்தார். அவரின் உணர்வை நுகர்ந்தேன். நுகர்ந்த
உணர்வை எனக்குள் வளர்த்தேன். வளர்ந்த உணர்வை, உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
பதிவானதை மறந்து, ஆசையின் நிலைகளை உங்களுக்குள் கூட்டினால், இந்த அரும் பெறும்
சக்தியை நாம் இழந்து, ஆசையின் உணர்வுகள் வளர்க்கப்பட்டு, கொடுத்த வாக்கினை இழக்கும்
தன்மை வரும்.
அருள் ஒளி பெறும் உணர்வை உங்களுக்குள்
சேர்க்கப்படும் பொழுது, ஆசையின்
நிமித்தம் இதில் கூட்டப்படும் பொழுது, யாம் கொடுக்கும்
வாக்கும், உங்களுக்குள் சீராக இயங்காது.
யாம் கொடுக்கும் வாக்கின் உணர்வுகள்
அது கருவாகி, அணுவாக விளைந்தாலும், அதை வளரவிடாது உங்களின் ஆசையின் உணர்வுகள் தடுக்கும். குரு கொடுத்த வாக்கின் தன்மையையும், இழக்க
நேரிடும்.
நீங்கள் எங்கே சென்றாலும், குரு பெற்ற உணர்வினை, நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது, பகைமையான உணர்வுகளை அகற்றிடும் வல்லமை
பெறுகின்றோம்.
நாம் பெற்ற உணர்வின் தன்மையே, நமக்குள் தெய்வமாகின்றது. நாம் எண்ணிய எண்ணங்களை
நுகரப்படும் பொழுது, அந்த உணர்வின் செயல் எக்குணமோ அந்தத் தெய்வமாகின்றது. இதைப் போன்று,
அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கினால், மற்றவைகளை அதனின் வலுவை இழக்கச்
செய்து, சிந்திக்கும் தன்மையைக் கொடுக்கும்.
இன்று குருவின் வலிமை கொண்டு
மாற்றவர்களை ஏமாற்றுபவர்கள்தான் உண்டு.
குருவின் நிலைகளில் ஏமாற்றிப் பிழைப்போர் நிலைகளில்
கடைசி நிமிடம், உயிர் எதையுமே மறக்காது.
அந்த உணர்வுகள் கொண்டு, உயிர் அதை வளர்த்தேதான்
தீரும்.
அந்த வினைகளை அனுபவித்தேதான் ஆகவேண்டும்.
குரு பலம் கொண்டு, குருவினை நினைத்தால்
தீமையின் உணர்வுகள் தனக்குள் வராது தடுக்கலாம்.
இதை மறந்திடலாகாது. மதி மயங்கிடலாகாது.
குருவை எவரொருவர் நிந்திக்கின்றனரோ, அருளொளி காட்டும் உணர்வை எவர் இருளச் செய்கின்றனரோ, அவர்கள் வாழ்க்கையில்
குருவின் தன்மையை இழந்து. இருளின் தன்மை அடைவர். வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில், சிந்திக்கும்
தன்மை வந்தாலும், எதுவும் வலிமை பெறாது.
குருவின் வலுவை எவ்வாறு இயக்க வேண்டுமென்றும்,
குருவின் தன்மை கொண்டு,
நம்மை அறியாது
வந்த இருளை எப்படி நீக்குதல் வேண்டுமென்றும், அதைச் செயலாக்குதல் வேண்டும்.
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குருவையே மறக்கச் செய்யும். நண்பர்கள்பால்
நண்பன் என்ற நிலைகள் இருப்பினும், அவன் தவறு செய்கின்றான் என்ற நிலைகள் வரும்பொழுது,
தவறென்ற நிலைகளில் குருவின் தன்மை கொண்டு
தவறைத் திருத்தத் தவறினால், தவறுக்கே உதவி செய்தால்,
தவறின் உணர்வின் அலைகள் சிறிது காலம் நிலைக்கும். பின் அவர் வாழ்க்கையே சீர்கெடுக்கச்
செய்யும் என்பதை மறந்திடலாகாது.
மற்றவர்களிடம் குறைகள் இருப்பினும்,
குருவின் துணை கொண்டு, குறைகளைக்
களைய வேண்டும்.
புகழ் பாடும் நிலைகள் கொண்டு,
ஆகா! உன்னுடைய வலுகள் என்ன! என்று,
போற்றுவோர் நிலைகளுடன் இணைந்துவிட்டால்,
அதன் உணர்வின் நிலைகளை, சிறிது காலத்தில் உயிர் அதனுடைய உணர்வை உணர்த்தியே தீரும்.
உயிரிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
குரு வாக்கை வாங்கினால், அந்த குருவினுடைய
நிலைகள் எளிதில் இருக்கலாம். ஆனால், குரு வாக்கின் பலன் மிக சக்தி வாய்ந்தது. அதில் எவரொருவர் தவறுகின்றனரோ, அந்தத் தவறின்
நிலைகள், நிச்சயம் இயக்கிக் காட்டும்.
4. குரு அருள் -- மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அவர்கள், காண்பித்த அருள் வழியில், யாம் அருள் உணர்வுகளைப் பெற்றோம்.
ஆகவே, யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம். வேறு யாரையும் போற்றுவதில்லை.
குருநாதர் காண்பித்த அருள் வழியில்,
யாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்வுக்குத் தக்க
யாம் நன்மைகள் அடைந்தோம்.
அதே போன்று, தியானவழி அன்பர்களும்
குரு காண்பித்த அருள் வழியில்
தாம் நுகர்ந்துக் கொண்ட அருள் உணர்விற்குத் தக்க
நற்பயன்களைப் பெற முடியும்.
யாம் சந்திக்கும் அனைவருமே அருள்ஞானம் பெறவேண்டும். அருள்சக்தி பெறவேண்டும்
என்று எண்ணி, இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான், யாம் செயல்படுகின்றோம்.
இது எவ்வளவு பெரிய சக்தி!
எத்தனை வருடம் கஷ்டப்பட்டு,
என்னென்ன வழியில் செயல்பட்டு,
எத்தனை சிரமங்கள் அனுபவித்து,
அத்தனை சிரமங்களையும் தாங்கி,
தாண்டி வருகின்றோமென்றால், எதற்காக?
அனைவரும்,
இந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.
தபோவனம் வளர வேண்டும். தபோவனம் எம்மால் வளரவில்லை.
குருநாதரால்தான், வளர்கின்றது. குருநாதருடைய உணர்வுதான் நம் அத்தனை பேருக்கும் அமைந்துள்ள
(நல்) சந்தர்ப்பம் ஆகும்.
“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு வர வேண்டும்.
நமது வாழ்க்கையில், எந்த நிலைகள் இருந்தாலும்,
உத்ராயணம் என்ற அந்த நிலைகள் வரவேண்டும். அந்த வலிமை நமக்குள் வர வேண்டும் என்று பிரார்த்தித்து,
குரு காட்டிய அருள்வழி கொண்டு, உயிரை ஈசனாக மதித்து, அவனால் உருவாக்கப்பட்ட உடலை, சிவனாக
நாம் மதித்தல் வேண்டும்.
இந்த உடலில் பகைமை புகாது, எதிரி வராது, அருள்
உணர்வைக் கூட்டி, இனி, “பிறவியில்லா நிலை எனும், நிலை பெரும் நிலையாக”, பேரின்பப் பெருவாழ்வாக
வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
5. ஞானகுரு சொன்னதைச் செய்யும் நிலை
இப்பொழுது,
யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக்
கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் “நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை
என்ன, வீட்டில் மகன் என்ன செய்து
கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்?” என்று எண்ணிக்
கொண்டிருப்பீர்கள் என்றால், யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில்
பதிவாகாது.
ஆகையால்,
ஒருவர் நம்மிடம், தீமை தரும்
உணர்வுகளையோ, வேதனை தரும் உணர்வுகளையோ, சொல்வாரே என்றால், அது
சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள்
இணைப்போமேயானால், அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது
தடுக்கலாம்.
அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில்
கேட்கும், ஆனால், ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.
இன்று,
எத்தனையோ பேர்
எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை. யாம், எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள்
இணைத்துக் கொள்வதால், அவர்கள் என்ன சொன்னாலும், கேட்டுக் கொள்வோம்.
அதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம். “போங்கள்…, உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…,” என்று சொல்வோம்.
அப்படி யாம் சொன்னால், “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே” என்று எண்ணினால் என்னவாகும்.
ஏனென்றால்,
அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை
உடனே தாங்கி,
மடக்கி அனுப்புகின்றோம்.
நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக்
கொண்டார் என்று சொன்னால், யாம் என்ன
பண்ணுவது. அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா?
யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான், அப்படிச் சொல்கின்றோம்.
மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம்,
நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்?
அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால்,
இந்தத் தீய உணர்வுகளை நீங்கள், உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ளவெண்டும்.
இவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த,
தியானத்தை சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும்,
எமது அருள் ஆசிகள்.
ஆரம்பத்தில்
யாம், அநேகம் பேருக்குப் பல நிலைகளை சொல்லிக் கொடுத்தோம். ஆனால்
அவர்கள், சொல்லிக்
கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர். மனிதரின்
இயக்கம் எப்படி இருக்கின்றது?, அதை
நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்? என்று
உணர்த்துகின்றோம்.
ஆனால், பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து
விட்டார்கள்? நாளை என்னவோ நடக்கட்டும். இன்று, நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
தான் ஒன்றைச் சொன்னால், அவ்வார்த்தையையும், தன்னையும் மற்றவர்கள்
மதிக்கும்படி செய்ய வேண்டும் என்று, இப்படித்தான், தலைகீழாகக் போகிறார்கள்.
அருளைப் பெருக்கி, இருளைப் போக்கும் தன்மையை யாம்
எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.
ஆகையால், யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு, இப்பொழுது தியானவழி அன்பர்களை, துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச்
செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.
அந்த உணர்வோடு
கொண்டு போகப்படும் பொழுது, அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை,
உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால், சாதாரண
மின்னல் வருகின்றதே, அதை நீங்கள் பார்க்கக் கூடாது.
மின்கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும்
பொழுது, அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில், ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க
உதவும்.
நாம் நுகர்ந்த
உணர்வுகள் இரத்தத்தில் கலந்து, மற்ற அணுக்களில் சேர்கின்றது.
இவையெல்லாம், குரு தன்மையால் வருவது.
“சாமி (ஞானகுரு) சொன்னார், இதையெல்லாம் பெறவேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது, நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு,
உறுதுணையாக இருக்கும்.
நான்
தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.
குரு இல்லாத
வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால்,
“குருநாதர் சொன்னார்” என்ற நிலையில்,
ஒன்றை இணைத்துப்
பார்க்கும் பொழுது, தனக்குள் உருவாகும்.
ஆகவே,
இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல், நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால், அந்த உணர்வின் அணு, உங்களை திசை திருப்பிவிடும்.
ஏனென்றால்,
“நாம் இம்மனித
உடலுக்குப்பின், பெறவேண்டியது எது?” என்பதை உங்கள்
எல்லோருக்கும், தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு
போகின்றோம்.
6. ஞானகுரு உபதேசிப்பதைக் கூர்மையாகப்
பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள்துணை
கொண்டு, யாம்,
இயற்கையின் இயக்க பேருண்மைகளை, அனுபவ ஞானமாக,
பல சிரமங்களுக்கிடையேதான், பெற்றோம்.
உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும்
பொழுது, அந்த அருள் உணர்வுகளை,
உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.
எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும்
பொழுதும், கேட்கும் பொழுதும் ஆர்வமுடன்
இருப்பீர்கள். ஆனால், அருள் ஞான உபதேசங்களை கேட்டு,
படித்த பிறகு சில நிமிடங்களில், சாலையில் சிலர்
சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைப் பார்த்து,
அதனின் உணர்வை ஈர்த்து, உங்களுக்குள்
பதிவு செய்து, வளர்க்க
ஆரம்பித்துவிடுவீர்கள்.
உதாரணமாக, ஒரு
குரு, தம் சீடரை அழைத்து,
அவருடைய கையில் காசைக் கொடுத்து, “கடைக்கு சென்று
கொழுக்கட்டை வாங்கி வா”
என்று சொல்லி அனுப்பி வைத்தார். சீடரும், தாம் கடைக்கு
சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்கு கிளம்பினார்.
சீடர் கடைக்கு செல்லும் வழியில்,
குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான்,
கடைக்கு செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ,
சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.
சீடர், “அத்ரி… சீ… தூ…” என்று
சொல்லிக் கொண்டு மூக்கை பொத்தியவாறு சாக்கடையை தாண்டி சென்றார். இப்படி சென்றவர்,
நேராக கடைக்கு போய் நின்று, “கொழுக்கட்டை தாருங்கள்” என்று கேட்பதற்கு பதிலாக,
“அத்ரி… சீ… தூ…” கொடுங்கள்
என்று கேட்டார்.
அதாவது, எமது
அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்?
நல்லவைகளை அறிந்து கொண்ட பின், சாலையில் சிலர்
சண்டை போட்டு கொண்டிருந்தால், அதைக் கண்களால் பார்த்து,
அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.
இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட
நிலையில், வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி
மீதும், குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும்.
குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும்.
“இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்”, “சாமி” நாம் எப்படி இருக்க வேண்டும் என்று
உபதேசம் செய்கிறார். ஆனால்
வீட்டில், மனைவி, குழந்தைகள்
இப்படி இருக்கின்றார்களே”
என்று, தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, தன் மனைவி, குழந்தைகளிடம் வேக உணர்வை
காண்பிப்பார்கள்.
ஏனென்றால், நமக்குள் எதிர்நிலையான உணர்வுகளான
பின், நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.
ஆனால், அருள் ஞான உணர்வுகளை
உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து, உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால், உங்களுடைய உடலில் உள்ள நோயை
குறைக்க முடியும். குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும்
வரும்.
அருள் ஞான உணர்வுகளை,
நீங்கள் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில்
பதிவாகுகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும்,
கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய
கருவிழி ருக்மணி, கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில்
பதிவாக்குகின்றது.
ஒருவரை, எமது
அருள் ஞான புத்தகங்களைப் படிக்கச் சொல்லி,
அவரைத்
தாம் படித்ததைத் திரும்பச்
சொல்லும்படிக் கேட்டால்,
அவருக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால்,
புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.
தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால், அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க
முடியும்.
யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து
வருபவர்கள், தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல
ஆரம்பிப்பார்கள்.
காரணம், எலக்ட்ரிக்,
எலக்ட்ரானிக். பதிவான உணர்வுகள், எலக்ட்ரான் என்ற
முறைப்படி, அது காற்றில்
இருப்பதை எடுத்து, நம்முடைய இயக்கச் சக்தியாக்க கூடிய ஞானம்
நமக்கு வருகின்றது.
ஞானத்தின் தன்மை வந்தால்,
நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன்,
“பெறவேண்டும்” என்று
நினைத்தால், முடியாது.
ஒரு விஞ்ஞானி,
புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது,
பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர், பல சிரமங்களை
அனுபவித்து, கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி
ஏற்றுக் கோண்டோமானால், அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.
விஞ்ஞான அறிவு கொண்டு,
கம்யூட்டரை செய்துகொடுக்கின்றார்கள். சிரமப்பட்டு தான் அதை செய்து
கொடுக்கிறார்கள். ஆனால், கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால், பயன் ஒன்றும் இருக்காது.
அதைப் போன்று,
யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை, கூர்மையாக உற்று
நோக்கிப் பதிவு செய்து கொண்டபின், அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி, நீங்கள் துருவ
நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும்.
உங்கள் உயிர் வழி, துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை
நுகர்ந்து, உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாக கொடுக்க முடியும். நாம் அனைவரும், இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு, கொண்டு
வந்துவிட்டோம் என்றால், நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த
மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும். நமக்குள் தீமைகள்
வராது தடுக்க முடியும்.
மெய் வழி வாழ முடியும். மெய்ஞானிகள் கண்ட
பேருண்மைகளை, நாமும் கண்டுணர
முடியும். மெய்ஞானிகளுடன் இணைந்து, வேகா நிலை என்ற
நிலையாக, அழியா ஒளிச்சரீரம் நாம்
அனைவரும் பெறமுடியும். எமது அருளாசிகள்.
சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போன்று,
ஒரு செடி பல
விதைகளை அளித்து, அது போன்று பல நூறு செடிகள் உருவாவதற்கு காரணமாவது போன்று,
மகரிஷிகள்
அருள் சக்தியை உங்கள் உணர்வில் சத்தாக விளைய வைத்து, உலகம் முழுவதும் படர்ந்து
வரும் நஞ்சின் தன்மையில் இருந்து, நம்மையும், மக்களையும்,
இந்த
பூமியின் தன்மையும் வாழவைக்கச் செய்திடும் நிலையாக, மனிதனின் தன்மைகளை
நிலைக்கச் செய்திடும் செயலாக, அவ்வுணர்வின் தன்மை வளரச் செய்வதற்கும்,
மற்றும் மகா
ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சென்றபின், இந்த உடலில் ஒளிசரீரம்
பெறும் தன்மைக்காக நாம் இயங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, எல்லோரையும் ஒருங்கிணைத்து, தீமைகள் எவ்வழியில் எவ்வுருவில்
வந்தாலும் அதைத் தடை செய்யும் ஆற்றலை, நீங்கள் பெறுவதற்குத்தான், இந்த உபதேசத்தின் வாயிலாக, எமது செயல்கள் நடைபெறுகின்றது.
உலகத்தை அழித்துக் கொண்டிருக்கும் விஷத்தன்மை படர்ந்து,
மனிதனுடைய
எண்ணத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. அதை மீட்க வேண்டும் என்ற நிலையில்,
எமது
குருநாதர் காட்டிய அருள் வழியில், நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை உலகம்
முழுவதற்கும் பரவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில், அருள் ஞானிகளின் உணர்வுகள் நான்கு திசைகளிலும் பரவி, இப்பொழுது அதுவும் வளர்ச்சியாகி வருகின்றது.
நாம் மட்டுமல்ல. அந்த
மகரிஷிகள், தியானம் என்ற நிலையில், உலகில் ஒவ்வொரு பாகத்திலும் இதைச் செயல்படுத்தி வருகின்றனர்.