ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2012

துருவ தியானம்

1. தினமும் அதிகாலையில் 4.00 – 6.00 துருவ தியானம் செய்ய வேண்டும் (பிரம்ம முகூர்த்தம்)
மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால்  நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்க, சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று, நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் இணைக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் செலுத்தும் பொழுது, நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து, ஆன்மாவில் பட்ட அழுக்கை நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும். 

எனது வாழ்க்கையில், நான் யார், யாரையெல்லாம் பார்த்தேனோ, அவர்களுடைய குடும்பம் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெறவேண்டும். அவர்களின் குடும்பத்தில், அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற,  இந்த உணர்வின் எண்ணங்களை நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும். 

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு, ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது. இப்படி, தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்திவிட்டால், அவைகளைச் சூரியனின் காந்தபுலனறிவுகள் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும். ஆகவே,
துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
பற்றுடன் பற்றுங்கள்.
உடலின் பற்றைப்  பற்றற்றதாக்குங்கள்.
அருள் ஞானத்தை, பற்றுடன் பற்றுங்கள்.
பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்.
மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள். 
இதன் வழி, அருள்ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும்,  எமது குரு அருளும், எமது அருளும், என்றும் உறுதுணையாக இருக்கும்.
2. துருவ  தியானம் என்றால் என்ன...?
 ஒரு விஷத்தின் தன்மை பெற்றால், நல்ல குணங்கள் அழிந்துவிடும்.
அந்த விஷத்தினையே, ஒளியாக மாற்றிடும்
அரும்பெரும் சக்தி பெற்ற அகஸ்தியன்
துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக
திகழ்ந்து கொண்டிருக்கும், அதனின்று வெளிப்படும் சக்தியை,
நுகரும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.

திரும்பத் திரும்பச் சொல்கின்றேன், ஒரு செடிக்கு திரும்பத் திரும்ப, தண்ணீர் ஊற்றினால்தான், அது முளைக்கும். திரும்பத் திரும்ப, அந்தச் செடி அதன் உணர்வை நுகர்ந்தால்தான், அது வளரும். ஒருவன் தீமை செய்கின்றானென்றால், திரும்பத் திரும்ப அவன் செய்தான், செய்தான் ன்றால் அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளருகின்றது.

வேதனை என்ற உணர்வை, ஒருமுறை பதிவு செய்து, பாவம் அவன் வேதனைப்படுகின்றான் என்று திரும்பத் திரும்ப எண்ணும்பொழுது, அந்த வேதனையின் அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்,
உணர்ச்சியின் தன்மை கொண்டு,
நற்பண்பு கொண்டு, தீமையின் கொடுமைகளை அறிந்தாலும்,
தீமை என்று அறிந்த உணர்வுகள்,
அது, மீண்டும் மீண்டும் நமக்குள் உணர்வுகளை
நினைக்கும் சந்தர்ப்பம் வருகின்றது.

அப்படி, சந்தர்ப்பத்தால் ஒன்றுபட்டபின், அதை நுகரும் உணர்வும், அதை வளர்க்கும் தன்மையும் வருகின்றது. இதைத்தான், உங்களுக்காக மீண்டும் சொல்லுகின்றேன். நமது குருநாதர், அகண்ட நிலைகளை நுகர்ந்து, துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியானது என்று காட்டினார்.
உணர்வுகள் அனைத்தையும்,
உயிர் பெற்ற ஒளியின் சரீரமாக மாற்றி,
இந்த பிரபஞ்சம், அகண்ட அண்டத்தில் தான் பெற்ற நிலையும்,
அகண்ட அண்டத்தில், தன் உணர்வின் நிலைகளைக் கவர்ந்துணர்ந்து,
இன்றும் வேகா நிலை என்ற நிலை அடைந்து,
பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகளில், மகிழ்ச்சி அடைகின்றது.

அகஸ்தியனும், அகஸ்தியனின் மனைவியும், 
தீமைகளை வென்றபின், மகிழ்ந்து, 
அந்த மகிழ்ச்சி என்ற உணர்வின் ஒளி அதிர்வுகள்,
இரு உயிரும் ஓர் உயிராய் இணைந்து,
ஒளியின் சரீரமாகிப் பேரருளைப் பெற்றனர்.

நாம் ஒன்றைக் கண்டபின், இன்பத்தின் நிலைகளில் எவ்வாறு மகிழ்கின்றோம். அவ்வாறுதான், பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளில், வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். இதைப்போல்,
நம் பிரபஞ்சத்தில் இருப்பது போன்று,
ஏனைய அகண்ட அண்டத்திலும்,
ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும், உருவாகும்  உயிர்கள்,
இவ்வழியேஅதன் வளர்ச்சியைசந்தர்ப்பத்தில் அது எடுக்கின்றது.

ஒரு பிரபஞ்சத்தில் பிறந்த நிலைகள், இந்த பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்டாலும், இதனின் உமிழ்ந்து வெளிப்படும் உணர்வுகளை, பிற சூரியன்களும் கவர்ந்து கொள்கின்றது.  ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்கின்றது. எவையும் பிரிந்து வாழவில்லை,

"இன்று உள்ளது நாளை இல்லை" என்ற நிலைகளில்தான், அகண்ட அண்டத்தின் செயல் உருமாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. எவையும் தனித்து இயங்கவில்லை.

இதைப்போன்று மனிதனானபின், எத்தனையோ நிலைகள் உருமாற்றி உருமாற்றி, பிறக்கும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. வளர்ச்சி அடையும் பொழுதும், ரூபத்தின் நிலைகள் வேறு. முதிர்ந்தபின்,
உயிருடன்  ஒன்றி, விளைந்தது எதுவோ
அதைக் கொண்டு, உருக்களை மாற்றிக்கொண்டே உள்ளது, உயிர்.
ஆனால், மனிதன் அதை தடைப்படுத்தி, உயிர் ஒளியானது போன்று, உணர்வினை ஒளியாக மாற்றி, என்றும் நிலையான நிலைகள் செய்தவன், துருவனாகின்றான்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான், மீண்டும் மீண்டும் நினைவாக்கி, துருவத்தினின்று வெளிப்படும் உணர்வை, முதல் நிலைகளில்,
இந்தப் புவிக்குள் புகும் நிலைகளை,
அந்த நினைவை ஊட்ட,
உங்கள் நினைவை அதனுடன் கலக்க, 
அதனின் உணர்வை, நீங்கள் எளிதில் பெறவே, இந்த துருவ தியானம்.

நமக்கு ஒரு முறை வலித்தால், வென்று இழுக்கின்றோம். அப்பொழுது வலி தெரியவில்லை. அந்த வென்று இழுக்கும் பொழுது, உணர்வின் தன்மை அதிக நேரமானால், அந்த வலியின் உணர்வாக, அதன் வழி வருகின்றது.

மீண்டும், எதனால் வலி வந்தது என்று, திரும்பிப் பார்க்கின்றோம். அதன் வழி உணர்வினை நுகர்ந்து, வலிக்குண்டான உணர்வினை, அணுவாக மாற்றுகின்றது நமது உயிர்.அதைப் போன்று,
அரும் பெரும் பேரருளை,
பேரொளியாக மாற்றிய உணர்வினை, நினைவு கொள்ளும் பொழுது,
உங்களுடைய நினைவின் ஆற்றல்,
வான மண்டலத்திற்கே செல்லுகின்றது.

எம்மை, இப்படித் தான் குருநாதர் ஒன்றை உணர்ச்சி வசப்படும்படி செய்வது,  அகண்ட அண்டத்தையும் உற்று நோக்கும் சந்தர்ப்பத்தைத் தன்னிச்சையாகவே ஏங்கிப் பெறும்படி செய்தார்.

மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று, ஒரு உணர்ச்சியை தூண்டச் செய்து, தன் நினைவை, தானே மேலே உற்று நோக்கும்படி செய்தார். அதைத் தான் என் குரு செய்ததை, அவர் வழியில் நீங்கள் பெறவேண்டும்.
3. துருவ தியானம் செய்வதால் ஏற்படும் பலன்
நாம் ஒவ்வொரு நாளும், காலை துருவ தியானம் செய்வதனால், காலையிலிருந்து இரவு வரையிலும்,  பலருடன் பல உணர்வுடன் தொடர்பு கொள்ளும் நாம், அத்தகைய உணர்ச்சிகள்  நமக்குள் வளர்ச்சியடையாது, தடுக்க முடிகின்றது.

அவ்வாறு தியானித்தபின், கணவன் மனைவி ஒருவரை ஒருவர் எண்ணி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். நம் குழந்தைகளும், நம் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடுத்து, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும். பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும். 

எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று, அவர்கள்  வாழ்க்கையில் உடல் நலம், மன பலம் பெற்று, தொழில் வளம் பெருகி, செல்வம் பெருகி, செல்வாக்கு, சொல்வாக்கு பெற்று, அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்று, பிறரை, இதைப் போல எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அனைத்து குடும்பங்களிலும், வாழ்ந்து வரும் கணவன் மனைவி இருவரும், வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி, இரு உயிரும் ஒன்றென இணைந்து, இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கி, நஞ்சினை வென்று, பேரொளியாக்கி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

பின், அவர்களது பார்வையில் அவர்கள் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள், ஞானக் குழந்தைகளாக, கல்வியில் ஞானிகளாக, உலக ஞானம் பெற்று, உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளர வேண்டும் என்று இந்த உணர்வை நாம் ஏங்கி என்ணுதல் வேண்டும்.

இதைப் போன்று நம் நினைவினைப் பாய்ச்சும் பொழுது, இந்த உணர்வின் சக்தி வளர்ந்து, 
நம்முடைய பார்வை, குழந்தைகளை நலமாக்கவும்,
நம் பார்வை நண்பர்களை உயர்வாக்கவும்,
நண்பர்களுடைய பார்வை
நம்மிடையே மதித்து நடக்கும் உணர்வுகளாகவும்,
நம்மை அறியாது வரும் இருளை அகற்றும் சக்தியாகவும், அனைவரும் பெறுகின்றோம்.

நமது குரு காட்டிய அருள் வழியில், மெய்ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்று, அருள் வழியில்  இந்த வாழ்க்கையை வாழ்ந்து, நமது எல்லையான கடைசி எல்லை என்ற பிறவா நிலை அடைதலே, இந்த தியானத்தின் நோக்கம்.

அனைவரும் அருள் ஒளி பெறுக 
அனைவரும் அருள் ஞானம் பெறுக
அனைவரும் இந்த வாழ்க்கையில்
இருள் நீக்கும் சக்தி பெறுக..
ஓம்ஈஸ்வரா குருதேவா.