அருணகிரிநாதரின் வாழ்க்கை நிலைகளை, குருதேவர் எமக்கு உபதேசிக்கலானார்.
அதாவது, அருணகிரி தன் செல்வச் செருக்கினால், பெண் மோகம் கொண்டு,
காமவெறியினால், பல பெண்களின் படுக்கையறைகளை அடைந்து, ஊதாரித்தனமாக செல்வத்தைச் செலவழித்து,
செல்வம் அழிந்து, பெண் வியாதியாகி, முற்றி, பெருவியாதியாக மாறி, மேனியின் அழகு விகாரமாகியது.
மேனி அரித்தாலும் காமம் தணியாது, காமத்தின் உந்தலினால், தன் ஆசை நாயகிகளை அணுக, ஆசை
நாயகிகளோ அருணகிரியின் விகாரத்தோற்றத்தைக் கண்டு, காறி உமிழ்ந்தனர்.
உற்றார் உறவினர் வெறுக்க, ஊர் மக்கள் சிரித்தாலும், செல்வத்தை
இழந்திருந்தாலும், மேனியில் அரிப்பு மொய்த்தாலும், தன் காமத்தின் உந்தலினால், மோகம்
தணியாது, தன் சகோதரியிடமே காமத்தின் இச்சைகளைச் சொல்லி, ஆசை நாயகிகளை அடையப் பொருள்
கேட்கின்றார், அருணகிரி.
அருணகிரியின் சகோதரி, தன் சகோதரனின்பால் உள்ள பாசத்தால், அவனையும்
அறியாது, என்னிடமே தன் இச்சைகளைச் சொல்லிப் பொருள் கேட்கின்றானே என்ற வேதனையுடன்,
“உனக்கு இச்சைதானே தீர வேண்டும். இதோ இந்த உடலில், (தன் உடலைக் காண்பித்து) உன் இச்சைகளைத்
தீர்த்துக் கொள்” என்று சொல்லியவாறே, கீழே விழுந்து மயங்கி, சகோதரி உயிர் துறந்தார்.
சகோதரியின் நிலையைக் கண்ட அருணகிரி, தன் உடலின் வாழ்க்கையை வெறுத்து,
உடலை மாய்த்திடும் எண்ணம் கொண்டு, கோபுரத்தின் மீதேறி, கீழே வீழ்ந்திடும் தருவாயில்,
அடுத்த பிறவியாவது,
”இந்த உடலைவிட்டு
பிரியும் உயிராத்மா
உயர்ந்த குணங்கள்
கொண்ட உடலைப் பெறட்டும்” என்ற உணர்வுகள் உந்தி,
விண்ணை நோக்கி ஏங்கினார்.
அவ்வாறு ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தெய்வீகக் குணங்களின்
உணர்வுகள் கொண்ட, ஒரு மெய்ஞ்ஞானியின் உயிராத்மா, அருணகிரியின் ஏக்கத்தின் சுவாசத்தில்
ஈர்க்கப்பட்டு, இரத்தத்தில் கலந்ததனால், அருணகிரியின் உணர்வுகள், மெய்ஞ்ஞானத்தின் உணர்வுகளாக மாறின.
அதனால், கோபுரத்தில் இருந்து கீழே விழாமல், மெய்ஞ்ஞான உணர்வாக,
புலமைகள், பாடும் ஆற்றல்கள் அருணகிரி பெற்றார் என்பதை குருதேவர் உபதேசித்து அருளினார்.
அருணகிரியின், இரத்தத்தில்
குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா, “தன் மெய்ஞ்ஞானத்தின் ஆற்றல் மிக்க உணர்வலைகளை
ஈர்ப்பதை” அருணகிரி சுவாசிப்பதால், அருணகிரியின் உயிரில் உராயும்பொழுது, தெய்வீக உணர்வுகளின்
குணங்களைப் பாடச் செய்கின்றது.
சுவாசித்த மெய்ஞ்ஞானியின்
ஆற்றல் மிக்க உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து,
இரத்தம் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் கலப்பதால்,
தசைகளிலும், உடல் உறுப்புகளிலும், அணுத்திசுக்களாக உருப்பெறுகின்றன.
உருப்பெற்ற அணுத்திசுக்கள் நுண்ணணுக்களாக விளைந்து,
அருணகிரியின் உயிராத்மாவின் ஈர்ப்பிற்குச் சென்று,
உயிரின் அணைப்பில், உயிராத்மா இயங்குகின்றது.
அருணகிரியின் இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா,
மேலும் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்கின்றது. அருணகிரியின் உடலில் மெய்ஞ்ஞானியின் உணர்வலைகள்
பதிந்து, வளம் பெற்று இருந்ததனால், அருணகிரி, தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டு, தான்
கண்டறிந்த உண்மை நிலைகளைப் பாடலாகவும், உபதேசமாகவும் மக்களுக்கு உணர்த்தலானார்.
இவ்வாறு, ஊர் ஊராகச் சென்று, அங்கு அமைந்துள்ள ஆலயங்களில், தான்
கண்டறிந்த தெய்வகுணங்களின் உணர்வுகளைப் பாடியும், உபதேசித்தும் வரும் நிலையில், அதைக்
கேட்டறிந்த மக்களுக்கு, அருணகிரியின்பால் பக்தியும், அன்பும், பாசமும் பெருகலாயின.
இதைக் கண்டு பொறாமை கொண்ட மந்திரவாதிகள், அதாவது ஆவிகளைக் கைவல்யப்
படுத்திக்கொண்டு, வேள்விகள் செய்து, தெய்வத்தின் பெயரால் பல அற்புதங்களைச் செய்து,
மக்களையும் அரசனையும் ஏமாற்றி, புகழ் தேடி வந்த மந்திரவாதிகள், தங்கள் புகழ் மங்கி
வருவதைக் கண்டு, அருணகிரிக்குப் பல இன்னலகளை, விளைவித்தனர்.
மந்திரவாதிகளின் செய்கைகளைப் பொருட்படுத்தாது, பேருண்மையின்
உணர்வலைகளின் ஆற்றல்களை, பல வருடங்களில் தனக்குள் வளர்த்துக் கொண்ட உயிராத்மாவை, ஒளியாக
வளர்த்துக் கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து ஒளியாக வெளியேறினார் என்றும், இந்த நிலைகள் அனைத்தையும்
குருதேவர் காட்சியாகக் காண்பித்து, எமக்கு உணர்த்தினார்கள்.
மேற்கூறியவாறு, அருணகிரியின்
வாழ்க்கையில், தன் இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மாவின் வளர்ச்சியில், அருணகிரியின்
உயிராத்மா, மெய்ஞ்ஞானத்தைப் பெறும் உயிராத்மாவாக, வளர்ச்சி பெறுகின்றது.
இரத்தத்தில் குடிகொண்டுள்ள மெய்ஞ்ஞானியின் உயிராத்மா,
அருணகிரியின் உடலை இயக்கி,
சூரியன் வெளிப்படுத்தும் காந்த ஆற்றலையும்,
கோள்கள், நட்சத்திரங்கள், சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும்
பேராற்றல்களையும் பெற்று,
தான் பெற்ற, ஆற்றல்மிக்க உணர்வலைகளால் உருப்பெற்ற
உண்மையின் நிலைகளைப் பாடல்களாகப் பாடி,
பாடிய பாடல்களை, ஒலியலைகளாகப் படரச் செய்வதும்,
அருணகிரியின் உடலில் இருந்தவாறே,
பேராற்றல் மிக்க உயிராத்மாவாக
வளர்த்துக் கொண்டு, அருணகிரியின் உடலை விட்டு மெய்ஞ்ஞானியின் உயிராத்மா ஒளியாக வெளிவந்து,
சப்தரிஷி மண்டலங்களின்
சுழற்சி வட்டத்தைச் சென்றடைகின்றது.