ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2026

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது


குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாகப் பெற்ற ஞானத்தைத் தான் உங்களிடம் உபதேசித்து வருகின்றேன்.
 
அன்றைக்கு என் காலிலே ஆணி. குருநாதர் செருப்பு கூடப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இரண்டு காலிலும் 28 ஆணி இருந்தது. நடக்கும் போது ஒரு சிறிய கல்லிலே மிதித்து விட்டால் போதும். அ…ஆ…! என்று உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தலையில் உச்சி முடி நட்டமாக நிற்கும்.
 
வெளியிலே சேர்ந்தாற் போல் அதிக நேரம் உட்கார முடியாது… எரிச்சலாகும். கால் ஆணி உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும்… இது எப்படி என்று…!
 
அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு…
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன நடக்கின்றது…?
3.அதில் உள்ளவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் குடும்பத்தில் என்ன நடக்கின்றது...?
4.இறந்த பின் அந்த ஆன்மாக்கள் என்ன செய்கின்றது…? என்று இதை எல்லாம் அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.
 
கஷ்டப்பட்டு அதை எல்லாம் தெரிந்து கொண்டு வந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு… உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.
 
கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.
 
எத்தனையே பேர் எம்மைச் சந்திக்க வருகின்றார்கள். உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றக்கூடிய சக்தி “உங்களுக்கு உண்டு” என்று கொடுக்கின்றோம்.
1.அதை யாரும் எடுப்பதில்லை.
2.சாமி எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார் என்ற இந்த உணர்வு தான் பெரும்பகுதியானவருக்கு உள்ளது.
3.சாமி சொன்ன வழியில் தியானத்தைச் செய்து என்ன கிடைத்தது…? என்கிறார்கள்.
 
ஏனென்றால் யாம் சொல்வதைக் கடைப்பிடித்து வழி நடந்தால் தான் நடக்கும். கடைப்பிடிக்கவில்லை என்றால் எப்படி நடக்கும்…?
 
பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆசை இருக்கின்றது… ஆனால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் வேதனையை எடுத்தால் என்ன ஆகும்…?
 
ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.
 
ஆனால் ஒரு சமயம் நல்லதானாலும் மீண்டும் அதை வைத்துத் தனக்குகந்த உணர்வை வளர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை வளர்ப்பதற்கு ஆள் இல்லை.
 
1.எத்தனையோ பேருக்கு அவருடைய துயரங்களிலிருந்து அவர்களை மீட்டி விடுகின்றோம்.
2.அதை வைத்து மீண்டும் அவர்கள் தெளிந்து தெரிந்து வருவார்கள் என்று தான் அதைச் செயல்படுத்துகின்றோம்.
 
ஆனால் அப்படிச் செய்கின்றார்களா…?
 
1.காரணம்… சக்தியை நான் எல்லா நேரமும் விரயம் செய்ய முடியாது.
2.உங்களுக்குண்டான அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றோம்.
3.அதை நீங்கள் எடுத்துக் கரையேறி மீண்டு வரும் “தன் பலம்” வேண்டுமல்லவா.
 
எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார் என்றால் சாமி எதைப் பார்ப்பார்…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதிலிருந்து நான் என்னைத் தப்புவித்துக் கொள்வதற்குத் தான் பார்க்க முடியுமே தவிர உங்களை எப்படி நான் காப்பது…?
 
1.ஒவ்வொருவரும் யாம் கொடுக்கக்கூடிய சக்திகளை வைத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
2.வாழ்க்கையைச் சீர்படுத்தி வழி நடத்திடவும்… வாழ்க்கைக்குப் பின் அடையக்கூடிய நிலையாக
3.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
 
இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை… சிறிது காலம் செய்து பழகி விட்டால் தன்னாலே வந்துவிடும்.

April 27, 2026

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?


நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்குச் சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.
 
கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற "மாதிரித் துணிகளை" (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.
 
நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.
 
சரக்கை அனுப்பி வைத்துவிட்டு ஓரிரு நாள்கள் கழித்துப் பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.
 
அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.
 
அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.
 
வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து,ச் “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.
 
சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!” என்று அவசரப்படுத்துகின்றான்.
 
ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு… பொறு…” என்று அடுத்தவர்களுக்கே சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.
 
சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.
 
அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள்… தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்…!” என்று கூறுகின்றான்.
 
1.இருந்தாலும்,  சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…” அதாவது கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது. 
 
இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே, நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.
 
இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.
 
ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை. 
 
எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த அவசரத்தால் போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.
 
சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.
 
அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம். வழியில் நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.
 
1.நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.
 
உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே…!” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.
 
உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம் உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.
 
சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால் செய்ய மாட்டோம்.
 
இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம் சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.
 
1.ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம். 
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை எடுத்துக் கொண்டு போகின்றோம்.
 
இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.
 
நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.
 
கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…” 
 
உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால் இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.
 
ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும் இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.
 
“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.
 
உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்…” என்று கூறுகின்றார்.
 
நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…” என்று கூறுவோம்.
 
அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது…” என்று கூறுவார்.
 
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது.  இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.
 
அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது. 
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும். 
2.இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.
 
குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச் செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்


விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.
 
உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.
 
அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.
 
நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.
 
1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.
 
காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.
 
விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.
 
இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.
 
ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.
 
அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.
 
ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.
 
இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.
 
1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..
 
உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.
 
மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.
 
அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

April 26, 2026

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்


ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.
 
அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் “சகோதரத் தத்துவத்துடன்” வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
 
ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை அறியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.
 
இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும். 
 
1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.
 
எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.
 
நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது… “இதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…”
 
மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.
 
பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம். 
 
இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.
 
மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.