ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2014

உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள் - ஞானகுரு

இந்த உடல் சதமற்றது, நிலையாக இருப்பது உயிர்.
என்னை "சாமி...!" என்று பல பேர் கூப்பிட்டாலும்
உயிர் சென்றுவிட்டால் என்னவென்று அழைப்பார்கள்?

சவத்தை எப்போது அடக்கம் செய்வார்கள்? என்றுதான் கேட்பார்கள். 
எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
எல்லோருடைய நிலையும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.

இப்பொழுது, உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள், அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள், ஆக இந்த உடலின் தன்மை தூசியாகும்.

ஆக, இந்த உடலுக்குள் நின்றுதான், மெய்ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத்தான் உயிருடன் ஒன்றச் செய்யமுடியும்.
உடலை மதிக்கவேண்டும்,
ஆனால் உடல்மீது பற்று வைக்கக்கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே, இரு உன்னைப் பார்க்கின்றேன் என்று சொன்னால் போதும், உடலுக்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது.
அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள்,
அவர்கள் சொன்ன வழியில் சென்று
இந்த சரீரத்தைக் காக்கும் திறன் இழந்துவிடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட, அந்த மெய்ஞானிகளின் அருளைப் பெற தியானித்து அந்தத் தீய வினைகளை நீக்கி, மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன். 

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன், தியானிக்கின்றேன், வேண்டுகின்றேன், பிரார்த்திக்கிறேன்.

உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர், 
உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்,
என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.