ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2014

பத்து மகரிஷிகள் - பிருகு மகரிஷி. 9

1. கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்தான் பிருகு மகரிஷி. தனக்குள் ஆற்றல் மிக்க சக்திகளைக் கொண்டு, கூடுவிட்டுக் கூடு பாயும் நிலையும், மற்றொன்றை அறியும் நிலைகளையும் அறிந்துணர்ந்தவர் தான் பிருகு மகரிஷி. ஆனால், அதையெல்லாம் கற்றுக் கொண்டபின், அவர் உண்மையை உணர்கின்றார்.

பிருகு மகரிஷியும் ஒரு அரசர்தான். வியாசக பகவான் வானவியலை எடுத்து உணர்த்திய அருள் வழிப்படி, பிருகு மகரிஷி அதை எடுத்துச் செயல்பட்டார். ஜைனர்கள் படையெடுப்புக் காலங்களில், இந்தியா முழுவதற்கும் சில பகுதிகளிலே இதே மாதிரித்தான் அரச நிலைகளில் கடைப்படித்திருக்கிறார்கள்.

பார்கவனும் இதைப் போன்ற அரசர்தான். பெரும்பகுதியான நிலைகளில் முனிவர்களாக இருந்தார்கள். 38 முனிவர்கள், 48 முனிவர்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

அன்று பிருகு மகரிஷி, தான் எடுத்துக் கொண்ட நிலைகளிலிருந்து அரசாட்சியினுடைய நிலையில் எவ்வளவோ கடுமையாக இருந்தும், அரசைத் துறந்து தான் மெய்வழியைக் காணவேண்டும் என்ற நிலைக்குச் சென்றாலும், அவர் எடுத்துக் கொண்ட உணர்வு விண் செல்ல முடியவில்லை.

அவர் மீண்டும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததிலேதான், இன்று நாம் “கொங்கணவ மாமகரிஷி” என்று சொல்கின்றோமே அவர் உடலில் புகுந்தார். முனிவராக இருப்பதற்கு முன்பு, பிருகு அரசராக இருந்த பொழுது
செல்வத்திலே செருக்கும்
செருக்கின் நிலைகள் கொண்டு
விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்துக் கொண்டவர்.

அந்த உணர்வின் ஆற்றலை, மந்திரம் என்ற நிலைகள் கொண்டு மதத்தின் அடிப்படையிலே மக்கள் மத்தியிலே செருகி, அதன் வழியில் ஆற்றல் கொண்டு ஆட்சி புரிந்தவர்.

அப்படி ஆட்சி புரிந்தாலும், இந்த உடல் இருக்கும் பொழுது கூடு விட்டு கூடு பாயும் நிலையாக இன்னொரு உடலுக்குள் புகுந்து, அவன் ஆட்சி புரிந்து மீண்டும் அவன் நிலை நிறுத்தக்கூடிய தன்மைதான் அவர் பெறமுடிந்தது.

ஆக, அவர் விண் செல்லும் நிலை பெறமுடியவில்லை. ஏனென்றால், மனித உணர்வுடன் அவர் சென்றதினாலே விண் செல்ல முடியவில்லை. அவ்வாறு வந்தவர்தான் கொங்கணவ மாமகரிஷி.

பிருகு மாமகரிஷிதான் கொங்கணவ மாமகரிஷியினுடைய உடலிலே புகுந்து, மக்கள் மத்தியிலே சென்றபின் தான்  அந்த மெய்ஞானிகள் கொடுத்த அறவழியின் தன்மையை அறிய முடிந்தது.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும்,
அவன் அமைத்துக் கொண்ட கோட்டை இந்த உடல் என்றும்,
அந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எடுத்துக் கொண்ட நல்ல உணர்வின் ஆற்றலை அவனிடத்திலிருந்து எவ்வாறு தான் பெறுவது? என்பதை அறிவதற்குத்தான் கொங்கணவர் உடலிலே புகுந்தார்.

கொங்கணவர் உடலிலிருந்து கொண்டு, வீடு தோறும் சென்று யாசகம் செய்து, அவர்கள் ஒவ்வொருவருடைய நிலைகளிலும் துன்பம் போகவேண்டும் என்று செயல்பட்டு வந்தார்.

உதாரணமாக, ஒரு விளக்கில் நெருப்பு வைக்கும் பொழுது வெளிச்சமாகின்றது. சிறு நெருப்பை வைத்து ஆகாரத்தைத் தயார் செய்ய முடிகின்றது. ஆனால், பெரும் நெருப்பை வைத்துச் சமைத்தால் ஆகாரம் முழுவதும் கருகிவிடும்.

இரும்பை உருவாக்க வேண்டுமென்றால், அதற்குத்தக்க அதிகமான நெருப்பு வேண்டும். இதைப் போன்றுதான், ஒரு உணர்வின் ஆற்றலின் தன்மை சாதாரண வாழ்க்கைக்கு ஒரு அளவாக இருக்கப்படும் பொழுது, அந்த அளவின் நிலைகளில் வருகின்றது.

அதையே திரும்பத் திரும்ப எடுத்து, ஒரு மனிதனுக்குள் சேர்க்கச் செய்து அந்த உணர்வின் எண்ணங்களிலே அவர்கள் செயல்பட்டபின், அதே உணர்வை இன்னொரு மனிதனுக்குள் விளைய வைத்ததைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது, அது ஆற்றல்மிக்கதாக மாறுகின்றது. அப்படித் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டவர்தான் பிருகு முனிவர்.
2. வண்டு ரூபம் எடுத்து சிவனுக்குள்ளேயே புகுந்தார் என்பார்கள்
பிருகு முனிவர் வண்டு ரூபம் எடுத்து சில உடல்களிலே புகுந்து, தான் சொன்ன சில நிலைகளை நிலைநாட்டும் தன்மைகளை உருவாக்கி இருந்தார். பல உருவங்களினுடைய உடல் எடுத்து, சில உடல்களிலேயும் புகுந்தார். ஆகையினாலே, சிவனுக்குள்ளேயே புகுந்தான் பிருகு என்பார்கள்.

சிவன் என்பது இந்த உடல். ஒரு திடப்பொருளானது சிவம். உடலான சிவத்திற்குள் இவன் அரசன் என்ற நிலையில் செயல்பட்டாலும், இவனுடைய உணர்வை அங்கே செலுத்தினான் என்பதைக் காட்டுவதற்கு, வண்டு ரூபம் எடுத்து ஜெபிக்க விடாதபடி இவன் தடுத்தான் என்றெல்லாம் கதைகள் எழுதியிருப்பார்கள்.

ஆக, இந்த உடலான சிவத்திற்குள் நின்று இவன் சக்தியாகச் செயல்படுத்தப்பட்டு, தன் நிலைப்படுத்தினான் என்பதே உண்மை. ஆனால், கதையில் மாற்று நிலைகளாக எழுதியுள்ளார்கள். சிவம் என்பது நமது உடல்தான்.

இப்படி, ஒரு மனித உடலுக்குள் வளர்க்கப்பட்ட இந்த நிலையை
இவர் மந்திரத்தால் எடுத்து ஜெபித்து, கூடுவிட்டு கூடு பாய்ந்து
பல நிலைகள் செய்தாலும்,
கடைசி நிலையில் உண்மையை அறியப்படும் பொழுது
மெய்நிலையைக் காண்பது என்பது
அவருக்கு அரிதாகப் போய்விட்டது.

ஆக, அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொரு மனித உடலிலேயும் செருகப்பட்டு, அந்த அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அடிபணிந்து இருக்கப்படும் பொழுது, மூல மந்திரத்தாலே பல ஆயிரம் மனிதருக்குள் விளைய வைத்த இந்த நிலையை, தனக்கொத்த நிலைகளில் ஜெபித்துத்தான் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார்.
3. அரச போகம் நிலைத்ததல்ல என்று உணர்கின்றார்
நாம் எதை எதைச் செய்தாலும், புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றியபின் இத்தகைய வித்தைகளும், அரச போகங்களும் அனைத்தும் இந்த உடலில் இருக்கும் வரையிலும்தான், அனுபவிக்க முடிகின்றது.

ஆனால், இந்த உடலிலிருந்து
நாம் எந்தெந்த எண்ணங்களை எடுத்துக் கொண்டோமோ,
அந்த எண்ணத்தை நம் உடலின் சத்தாக அது மாற்றி,
அந்த உணர்வின் இயக்கமாக
நம் உயிராத்மாவில் சேர்ந்துவிடுகின்றது
என்ற பேருண்மையை அறிந்தபின் தான், அவர் அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடுவதற்காக வேண்டி, முயற்சி செய்தார்.

ஏனென்றால், உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ, அதைப் போன்று தன் உணர்வின் நிலைகளை உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு, மற்ற உணர்வின் தன்மை கொண்டு உடலை இயக்குவதும், சொல்வதும், பேசுவதும், உடலிலே வளர்க்கச் செய்வதும் உயிரின் வேலை.

அதைப் போன்று, அந்த இயக்கங்களின் நிலைகள் கொண்டு உடல் அமைப்பும், மனிதன் தன் எண்ணத்தால் பேசும் செயல் அமைப்பு இருந்தாலும், தான் சுவாசித்த அந்த உணர்வின் சத்தினுடைய நிலைகள் நம் சொல்லாலே, செயலாலே, உடலில் அது எப்படி உருமாறச் செய்கின்றது? எண்ணங்களை செயலாக்கச் செய்கின்றது?

இதைப் போன்று உணர்வின் சத்துக்கள் நம் உடலுக்குள் சென்று, தன் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது, உணர்வுக்கொப்ப அடுத்து, மாற்று சரீரம் பெறுகின்றது, என்ற உண்மையை அறிந்துணர்ந்தார் பிருகு மகரிஷி.

பிருகு மகரிஷி அரசனாக இருக்கும் பொழுது அரச போகங்கள் செய்தாலும், மந்திர தந்திரங்களுடைய நிலையை எடுத்துக் கொண்டாலும், நாம் பிறிதொரு மனிதனின் செயலை அறிந்துணரப்படும் பொழுது, அவர் உடலில் இருக்கக் கூடிய உணர்வின் ஆற்றலைத்தான் சுவாசிக்கின்றோம்.

அப்படி சுவாசித்து, நம் உடலிலே சேர்த்து அந்த உணர்வின் நிலைகள் கொண்டு நாம் இன்றைய வாழ்க்கையை நடத்தினாலும்,
பிறிதொரு உணர்வின் சத்துக்கள்,
பிறிதொரு மனிதனின் தீய சத்துக்கள்
நம் உடலில் விளைந்து, தன் உயிராத்மாவாக மாறும் பொழுது,
பின், இந்த சரீரத்திற்கு ஏற்படும் நிலையை உணர்ந்தபின் தான்
அவர் மாறுபடுகின்றார்.

அப்பொழுதுதான், பிருகு கடும் தவமிருந்து, சூரியனின் காந்த சக்தியைத் தனக்குள் சேர்த்து, தன் உணர்வின் சக்தியை அன்று அகஸ்திய மாமகரிஷி  காட்டியது போன்று, தன் உடலின் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றார்.