ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2014

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் இணைக்கக் கூடாது

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே, பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது,
உணரத்தான் பயன்படுத்தவேண்டும்
உணர்ந்தபின், அதை நீக்கிடுதல் வேண்டும்.

அதாவது தெரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது. அதை நீக்கிடல் வேண்டும்.

தீமைகள் எதுவோ, அவைகளை நீக்கி,
நன்மையின் பயன் எதுவோ,
அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால், காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம், அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது, சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதேபோன்றுதான், மனிதனின் வாழ்க்கையில், பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும், பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று, அவர்கள்படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தால், உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம், அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் தீமையைக் கேட்டறிந்து,
தீமையிலிருந்து விடுபட எப்படி உதவி செய்கின்றோமோ,.
இதைப்போல நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின்,
அடுத்தகணம், நமக்கு முன் மறைந்திருக்கும்
அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து,
நமக்குள் அடுத்து தீமையை விளைவிக்காது,
சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.