ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2016

யாரை நாம் நேசிக்க வேண்டும்...?

கோவிலுக்குச் சென்று நாம் எப்படி வழிபடுகின்றோம்? காவியத் தொகுப்புக்களில் நம் ஞானிகள் எதைக் காட்டியுள்ளார்கள்? உண்மையான தவம் எது?

கோவிலுக்குச் சென்று எனக்கு இப்படிச் செய்தார்களே, எனக்கு இப்படி இருக்கிறதே என்ற உணர்வின் தன்மை கொண்டு வேதனையைத் தவமாக எடுத்தால் என்ன செய்யும்?

என்னை அப்படிப் பேசினார்கள், அப்படியெல்லாம் உதவி செய்தேன் எனக்கு இப்படியெல்லாம் தொல்லை வந்தது என்ற இந்த உணர்வை நீங்கள் சுவாசித்தால் இதுவும் தவம் தான்.

அந்தத் தவமிருந்தால் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்?

இந்த உடலின் பற்று கொண்ட உணர்வின் தன்மை கொண்டு நாம் மீண்டும் மறு பிறவிக்கு இழுக்கும் நிலைகளும் நம் ஆசையின் எல்லை எதுவோ இது சாகாக்கலையாக இந்த மனித உடலில் உருவாகி இன்னொரு உடலுக்குள் செல்ல செய்யும்.

இன்னொரு உடலுக்குள் சென்றவுடன் இந்த உடலில் என்னென்ன ஆசைகளை நினைவில் வைத்தோமோ இதே ஆசை புகுந்த உடலுக்குள் அது உருவாக்கி அந்த உடலையும் கெடுத்து அந்த ஆசையை அங்கே தூண்டச் செய்து அதை வீழ்த்த உதவும்.

இது பேயாகச் சென்று இந்த உணர்வின் ஆசைகளை உருவாக்கி இங்கே நோயை உருவாக்கும். பின் அதை வீழ்த்திய பின் உடலை விட்டு வந்த பின் நமக்குள் தீமையின் விளைவே அங்கே உருவாகும்.

மீண்டும் மனிதனல்லாத உருவைத் தான் நம்மைப் பெறச் செய்யும். ஆகவே, இதை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

நம்முடைய காவியத் தொகுப்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். ஆலயத்தில் நாம் எவ்வாறு வழிபடுதல் வேண்டும் என்று தெரிந்து கொள்தல் நல்லது.

ஆகவே, இந்தப் பேருண்மைகள் உணர்த்தியது அனைத்தும் மகரிஷிகள். 

அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பின்பற்றி இந்தத் தெய்வ குணத்தை நாம் பெறவேண்டும், மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெறவேண்டும், அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும். அவர்கள் தொழிகள் வளம் பெறவேண்டும் என்று பிறரை நீங்கள் இந்த முறைப்படி எண்ணினால் போதும். இது பக்தி.

நாம் எடுப்பது தியானம். தியானித்து அதை நமக்குள் பெறுகின்றோம். ஆனால், ஆலயத்திற்குள் வரும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று இதைச் சொன்னால் “தவம்”.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நம்முடைய சொல் அனைத்துமே தவமாக அமைகின்றது. அப்பொழுது தவத்தின் தன்மை என்ன?

வலிமை கொண்டு சுவாசித்து நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவமிருக்கும் பொழுது நமக்கு நன்மை ஏற்படுகின்றது.

இதைத்தான் ஆறாவது அறிவு கொண்டவன் வள்ளியைக் காதலிக்கின்றான் என்று காட்டப்பட்டது. அப்படி என்றால் என்ன அர்த்தம்?

தன்னைப் பாதுகாக்கும் வலிமை மிக்க சக்தியைத்தான் இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் நேசிக்க வேண்டும்.

அதை நாம் பற்றுதல் வேண்டும். அதை நாம் சுவாசித்தால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வ ஆணையாக நம் உடலினின்று அது இயக்கப்பட்டு இந்த ஆறாவது அறிவின் தன்மையைச் செயலாக்கும் தன்மைக்கே வருகின்றது, மாற்றுகின்றது.

July 9, 2016

நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல, அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்கியிருந்தால் அதனின் ஆற்றல் நமக்குள் இருந்தால் இதனைக் கண்ணுக்கு நினைவுக்குக் கொண்டு வந்து இந்த உணர்வின் நிலையை உயிரான ஈசனிடம் ஒன்றுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும், எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வின் வலிமை பெறச் செய்தல் வேண்டும்.

அப்படி வலிமை பெறச் செய்யும் பொழுதுதான் நாம் நுகர்ந்தறிந்த தீமையான உணர்வின் தன்மையை இங்கே பிளக்கின்றது “நரசிம்மா”. நம் ஆன்மாவில் பட்ட தீமையின் நிலைகளை இது அப்புறப்படுத்துகின்றது.

ஒரு ரோஜாப் பூவின் தன்மை வளரும் பொழுது ஒரு வேம்பின் உணர்வின் தன்மை அருகில் வந்தால் அதை நீக்கி விடுகின்றது.

ஒரு வேதனைப்பட்டவன் உணர்வுக்குள் ஒரு மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னால் இதை நீக்கிவிடும். மீண்டும் அந்த வேதனைதான் வரும்.

இந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் என்னதான் சொன்னாலும் கூட நல்லதைக் கண்டாலும் விஷத்திற்குள் அதைக் கலந்தது போன்று ஆகிவிடும்.

அந்த வேதனை என்ற நிலை நல்ல சொல்லுக்குள் கலந்து அவர்கள் சிந்தனைகளை இழக்கத்தான் செய்யுமே தவிர சிந்தனையை ஊட்டாது. சிந்திக்கும் திறனை விடாது.

“விஷத்தைக் குடித்தபின் நீங்கள் சிந்திப்பீர்களா..,?”

ஒரு வேதனையான உணர்வு தனக்குள் வந்தால் வாலி. ஆக, யார் அவரைப் பார்த்தாலும் அவர்களுடைய சம வலுவைப் பெற்றுக் கொள்வான் என்று இயக்கத்தின் வலிமை பெறுகிறான் என்று காரணப் பெயரை வைத்து அன்று தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள் ஞானிகள்.

அதைத்தான் சாதாரண வாழ்க்கையில் இருக்கப்படும் பொழுது இந்தத் துயரத்தையும் துன்பத்தையும் தவறு செய்பவர்களையும் இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் அறிந்து அந்த உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் நுகர்ந்து தீமை என்று விலகிச் சென்றாலும் அடிக்கடி தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்து தீமையை உணர்த்தும் நிலை ஆனாலும் தீமையையே வளர்க்கும் அணுக்கள் பெருகிவிடுகின்றது.

எதைத் தீமை தீமை தீமை என்று எண்ணுகின்றோமோ அதன் உணர்வுகள் தனக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. இதைத்தான் சிவனுக்குள் நந்தீஸ்வரா.

அதிகமான நிலைகளில் அதைச் சுவாசித்தால் அதன் கணக்கின் பிரகாரம் உன்னுடைய செயல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தால் சிவன் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் கண்ணுக்குள் நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று நெற்றிக் கண்ணான உருவாக்கும் அவனிடம் அந்த அருள் உணர்வை உருவாக்கும்படி வேண்டுதல் வேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல. அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல.

July 8, 2016

உணவை உட்கொள்ளும் பொழுது எந்த எண்ணம் கொண்டு உட்கொள்கிறோம்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சுவையான உணவைச் சாப்பிடுகின்றோம். ஆனால், அந்த நேரத்தில் எதையெல்லாம் எண்ணுகின்றோம்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணவாக அந்த வேதனைப்படும் உணர்வுகள் இணைக்கப்படுகின்றது.

இந்த உணர்வின் ஆற்றலை எதனுடன் இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நமக்குள் உமிழ்நீராகி உடலுக்குள் சென்று அணுக்கள் உருவாகின்றது.

சாப்பிடும் பொழுது ஒரு நான்கு நாளைக்குச் வேதனையாகவே சொல்லிப் பாருங்கள். உணவுடன் கலந்து அந்த இரண்டாவது நாள் வந்தவுடன் “அம்மா.., அப்பா...,” என்று வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒரு சில பேர் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தால் இதைப் போன்ற வேதனைப்படும் நிலைகளை உற்றுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அடுத்தவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் சேரச் சேர என்ன ஆகும்?

கஷ்டமான உணர்வின் சேர்க்கை அமிலமாக மாறி அது உணவுடன் சேர்த்து அவர் எந்தெந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அதையெல்லாம் இவருக்குள் உருவாக்கும் தன்மையாக மாற்றிவிடும்.

நண்பராகப் பழகியவர் இப்படி எண்ணினார், திடீரென்று விபத்தாகி இப்படிச் செத்தார், அதனால் குடும்பத்தில் இப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள், அதனால் ரொம்பவும் வேதனை ஆகிவிட்டது என்று சொன்னால் போதும்.

எல்லாவற்றையும் “உம்” கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். இதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டு இரசித்து உணவை உட்கொள்வார்.

இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் போன பிற்பாடு அங்கே அவர் விபத்தில் சிக்கிய உணர்வு இங்கே இயக்கும். இவர் சாப்பிட்டுச் சென்ற பின் விபத்தின் தன்மையை இங்கே உருவாக்கும்.

இந்த இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்கலாம்.

என்னதான் சீராக இருப்பவர்களையும் பாருங்கள். சாப்பிடும் போது பார்த்தோம் என்றால் கஷ்டப்பட்டது, வேதனைப்பட்டது, சிரமப்பட்டது போன்ற நிலைகளையே அவர்களை அறியாமல் பேசச் செய்யும்.

பின் ரொம்பவும் வேதனைப்படுவார்கள். ஏனென்றால் வேதனை என்பது விஷமான உணர்வு. நன்றாக இருக்கும் குடும்பத்தில் எதிர்பாரத நிலைகள் ஏற்படும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் நல்லது.

ஆகவே, உணவு உட்கொள்ளும் பொழுது கூடுமான வரையிலும் இதைப் போன்ற நிலைகள் வராது தடுத்துக் கொள்தல் வேண்டும். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் சாப்பிடும் இந்த உணவு முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த உணவு அமிர்தமாக மாறி என் உடலுக்குள் இணைய வேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி அந்த ஏக்க உணர்வுடன் உணவை உட்கொண்டால் நமக்குள் அதற்குத்தக்க உமிழ்நீராக மாறி அது நல்ல அமிலமாக உடலுக்குள் இணையச் செய்கின்றது..

அதனால் உடல் உபாதைகளையும், வலிகளையும், அதே சமயத்தில் எதிர்பாராது இயக்கும் தீமையான உணர்வின் நிலைகளிலிருந்தும் நம்மை நாம் மீட்டிக் கொள்ள முடியும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் அனைத்தும் நம் காவியப் படைப்புகளுக்குள் உண்டு

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போதெல்லாம் அவரவர்கள் உயிரை எண்ணுதல் வேண்டும்.

நம் உயிர் “ஓ” என்று இயக்கி (ஈசனாக இருந்து) நாம் எதையெல்லாம் எண்ணி ஏங்குகின்றோமோ அவை அனைத்தையும் அந்தந்தக் குணத்திற்குத் தகுந்த அணுவாக மாற்றி “ம்” என்று உருவாக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் அந்த அணுக்கள் எத்தனை வகை குணங்கள் இருக்கின்றதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக (குருதேவா) இயங்குகின்றது, இயக்குகின்றது.

அது தான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

நமது ஞானிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்து பெற்ற சக்திகளை இராமயாணம், மகாபாரதம், கந்தப்புராணம், சிவபுராணம், விநாயக புராணம் என்று காவியங்களாகத் தொகுத்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அந்தக் காவியங்களில் கூறப்பட்டுள்ள மூலக்கூறுகளை நாம் சீராகப் பயன்படுத்தினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்றபின் தான் மனிதனாக உருவாக்குகின்றது.

மனிதனானபின் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் எங்கே செல்வது? நமது எல்லை எது? என்ற நிலையைத் தன்னில் அறிந்தவன் அகஸ்தியன்.

பின் அணுவின் ஆற்றலின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான். நம் புவியின் நிலைகளில் இருந்து வான்வீதியை உற்று நோக்கினான்.

வானில் நடக்கும் வானஇயல் தத்துவத்தையும் கண்டான் அகஸ்தியன். அவ்வாறு வானில் விளைந்த உணர்வுகளைத் துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து புவிஇயலாக மாற்றுவதையும் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

இங்கே புவிஇயல் நிலைகளில் விளைந்த சத்தினை உயிரியலாக உயிர் அணுக்கள் மாற்றிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்த பின் மனிதனாக உருவானோம் என்பதையும் அறிந்துணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்ல வேண்டும் என்ற தன் அனுபவத்தில் பெற்ற நிலையை தன்னுள் விளைந்த சக்தியை இன்று அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் அனைத்தும் இராமயாணம், மகாபாரதம், கந்தப்புராணம், சிவபுராணம், விநாயக புராணம் போன்ற காவியங்களுக்குள் உண்டு.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியின் துணை கொண்டு அவைகள் அனைத்தையும் நாம் ஊடுருவிப் பார்ப்பது நல்லது.

தான் யார் இந்தப் பிள்ளை யார்? என்ற நிலையில் தன்னைத் தான் அறிதல் என்ற நிலையில் நாம் அகஸ்தியன் கண்ட வான இயல், புவி இயல், உயிரியல் அனைத்தையும் நாமும் காண முடியும்.

அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்றால் வேகா நிலை எனும் கல்கி என்ற நிலையை அழியா ஒளியின் சரீரம் பெற முடியும்.     

July 6, 2016

“ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா..!” என்று சொல்லும் பொழுது நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்...?

நமது உயிர் நம் உடலுக்குள் “ஓ...” என்று இயங்கிக் கொண்டயுள்ளது. "ம்..." என்று உடலாக ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றி அதையும் “ஓ...” என்று இயக்கிக் கொண்டயுள்ளது. இது தான் ஓம் நமச் சிவாய, ஓம் நமச் சிவாய.

ஓம் நமச் சிவாய என்றால் ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்று இயக்குகின்றது. ஒன்றின் துணை கொண்டு ஒன்று இயங்குகிறது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் அனைத்தும் காரணப் பெயரை வைத்துச் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகவே, ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அவரவர்கள் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். அவர்கள் எண்ணிய எண்ணத்தை இறைவனாக மதித்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அது இறையாகி அதன் உணர்வு செயலாகும் போது அதுவே தெய்வமாகின்றது.

ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும்? உயிருடன் எதை இணைக்க வேண்டும்?

எதை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்? எதை உடலாக மாற்ற வேண்டும்? என்ற நிலையை நமது சாஸ்திரங்களில் தத்துவங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, தத்துவப்படி நாம் எப்படி இயக்க வேண்டும்? நாம் இயங்க வேண்டும்? எதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதுதான் அதிலே உள்ளது.

நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உயிரிலே இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உயிர் அணுவாக உருவாக்கிவிடும். உடலுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

அந்த ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது கல்கி, அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம். சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது. 

July 5, 2016

உயிரின் துணை கொண்டு அனைத்துச் சக்திகளையும் பெறும் தகுதி உங்களுக்கு உண்டு

இன்று நாம் சாமியை நம்புகின்றோம், சாமியாரை நம்புகின்றோம், மந்திரங்களை நம்புகின்றோம், மாயங்களை நம்புகின்றோம்.

ஆனால், அனைத்துச் சக்திகளையும் பெறும் தகுதி உங்களுக்குள் உண்டு. அதை உருவாக்கும் உயிரால் உண்டு.

யாம் உபதேசிக்கும் போது ஆறாவது அறிவால் இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் உருப்பெறும் சக்தியாக வருகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்றால் உங்களுக்குள் அருள் ஞானம் வருகின்றது. வாழ்க்கையில் இருளைப் போக்கும் அருள் சக்தி உங்களுக்குள் வளர்கின்றது.

நீங்கள் தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்கள் உங்களுக்குள் வளர்த்திட முடியாது.

ஆனால், உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் பதிந்திடும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை நீங்கள் எளிதில் பெறமுடியும்.

இன்று டி.வி.க்களில் எப்படி அலை வரிசையிலே அனுப்பும் பொழுது அந்தந்த அலை வரிசைகளை எடுக்கும் பொழுது வருகின்றதோ இதைப் போல உங்களில் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று அருள்ஞான வித்தினைப் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றோம்.

ஆக, பதிவு செய்து கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எங்கி அந்த உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலேயும் இதை நீங்கள் பெற்று துன்பங்களைப் போக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் துன்பங்கள் விளைவிக்கும் உணர்வை அது மாற்றும்.

இப்பொழுது உபதேசித்த உணர்வை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் கிடைக்கும். அதே சமயம் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இருப்பதனால் அதை எளிதில் நீங்கள் பெற யாம் உதவ முடிகின்றது.

இங்கே தபோவனத்திற்கு வந்தவர்களும் இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்க்கை வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் (ஞானகுரு) தியானித்து அந்த அலைகளை தவமாக உங்களுக்குத் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதே போல் நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

தியானித்துவிட்டு அந்த்த் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் சார்புடையோருக்கும் கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெறவேண்டும் என்ற இந்த இணைப்பு வந்தால் நமக்குள் நலம் பெறும் சக்திகள் வளர்கின்றது.

தீமைகள் அகலுகின்றது. மெய்ப்பொருளைக் காணும் திறன் பெறுகின்றது. பிறவியில்லா நிலைகள் அடைகின்றீர்கள். இதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.

July 4, 2016

அருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்வதற்குக் காரணம் என்ன?

வருடா வருடம் இராமாயணத்தைப் பற்றிச் சொல்பவர்கள் மாற்றிச் சொல்கிறார்களா?

இல்லையே.

அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்போது கூர்மையாகக் கவனித்து அந்தக் காவியங்களை நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

மகாபாரதத்தை இன்றைக்குப் படிப்பார்கள். மறுபடியும் அடுத்த வருடம் கேட்டாலும் அதையே தான் சொல்வார்கள். நாம் அதைப் பதிய வைத்துக் கொள்கிறோம் அல்லவா.

அதைப் போன்று தான் யாம் இப்பொழுது இந்த உணர்வோடு அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.

அந்த மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு இந்த நினைவைத் திரும்பத் திரும்பக் கொண்டு வருகின்றோம்.

இதைக் கேட்கிற வரையிலும் கேட்கிறார்கள்.

ஏனென்றால், எல்லோருமே நாம் பல சங்கடங்களில் இருக்கின்றோம். கடலில் பெருங்காயத்தைக் கரைத்தால் அந்த இடத்தில் வாசனை வருகின்றது. அப்புறம் மங்கிவிடுகின்றது.

கடலைப் போல நமக்குள் எத்தனையோ நம்மை வெறுக்கும் உணர்வுகள் ஜாஸ்தியாக இருக்கின்றது.

அதற்குள் இப்பொழுது யாம் அருள் உணர்வுகளை உபதேசிக்கும் பொழுது முன்னாடி இந்த மணம் இருக்கும். அப்புறம் இது உள்ளுக்குள் போய் மறைந்து போய்விடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இந்த அருள் சக்தியை காடு மேடெல்லாம் அலையச் சொல்லி பல சந்தர்ப்பங்களை உருவாக்கி இந்தக் கஷ்டங்களெல்லாம் உனக்குள் எப்படி வருகின்றது என்று நேரடியாகக் காட்டினார்.

எனக்குள் பல கஷ்டங்களை உருவாக்கி கஷ்டத்திலிருந்து மீள்வதற்கு அணுக்கள் எப்படி உருவாகிறது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்று இதையெல்லாம் அனுபவத்தில் கொடுத்தார்.

தீமைகளிலிருந்து மீட்டிடும் நிலைகளை குருநாதர் காட்டிய வழியில் யாம் அனுபவித்து அதில் உருவான உணர்வின் வித்தை அந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள நீங்கள் எந்தெந்த வழிகளில் செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

கோவிலுக்குப் போனால் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் விநாயகரை வணங்கும் பொழுது யாம் சொல்லும் முறைகளில் நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களைக் காக்கும்.

July 3, 2016

கணவன் மனைவி உடல் இரண்டானாலும் ஞானிகள் உணர்வை ஒன்றாக்கி விட்டால் “இரு உயிரும் ஒன்றாகிவிடும்”

ஒருவருக்கொருவர் தொடர்பில்லாது நாம் யாரும் இல்லை.

ஒருவர் நம்மைத் திட்டியிருந்தால் அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவரை நினைக்கும் பொழுதெல்லாம் நமக்குள் அந்தத் திட்டும் உணர்வுகள் வரும்.

அவர் மேல் கோபமும் வெறுப்பும் ஊட்டும் உணர்ச்சிகளைச் சுவாசிக்க நேரும்.

அதே சமயம் அந்தத் தீய அணுக்களின் தன்மை எதை வைத்து அவர்கள் திட்டினார்களோ அதன்படி நமக்குள் அந்த உணர்வுகள் வளர்ந்து நம்மை நசுங்கச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு இந்தத் துருவ தியான நேரங்களில் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் படி அன்று விநாய தத்துவத்தை காட்டினார்கள் ஞானியர்கள்.

அந்த விநாயகரைத் “தான் யார்...,? இந்தப் பிள்ளை யார்...,?” என்று சிந்திக்கச் செய்து உயிரால் வளர்க்கப்பட்ட நிலையும் அந்த வளர்ந்த நிலைகள் துருவ மகரிஷிகளின் ஆற்றலை நாம் எல்லோரும் பெறவேண்டும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஆகவே, கணவனும் மனைவியும் இந்த மனித உடல் இரண்டாக இருப்பினும் அந்த ஞானிகள் காட்டிய உணர்வை ஒன்றாக்கிவிட்டால் இரு உயிரும் ஒன்றாகி இரு உடலின் உணர்வுகள் ஒன்றாகிவிடுகின்றது.

இந்த உடலை விட்டுச் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் தீமைகள் அனைத்தையும் வென்று ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்கின்றார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ முடியும்.

இப்பொழுது மனிதனாக நாம் இருக்கும் பொழுது தன் இனத்தை விருத்தி செய்கின்றோம்.

அந்த ஒளியின் சுடராகத் தனக்குள் உருவாக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் எண்ணி இந்த உணர்வின் தன்மையை வளர்க்கப்படும் பொழுது ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

ஆகவே, இந்த நிலையைப் பெறச் செய்வதற்குத்தான் நாம் இந்தத் துருவ தியானத்தை வலியுறுத்துகின்றோம்.

துருவ தியானத்தின் மூலம் இந்த வாழ்க்கையில் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டு அந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்றி பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

தெய்வீகக் குடும்பமாக வளர்வோம், வாழ்வோம். தெய்வீக சக்திகளை நமக்குள் வளர்ப்போம். பேரானந்த நிலை அடைவோம்.

ஆகவே, ஞானிகள் கொடுத்த விநாயகர் தத்துவத்தை நமது வாழ்க்கையில் நாம் சீராகப் பயன்படுத்தி என்றும் பிறவியில்லா நிலையை அடைவோம். எமது அருளாசிகள்.

அருள்ஞானியின் உணர்வுகளை நுகர்ந்து உயிருடன் இணைக்கப்படும் பொழுது “நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள்”

இங்கே ஆறாவது அறிவு கொண்டு முருகன் சேனாதிபதி இந்த உடலைக் காக்கக்கூடியவன் என்று அவனைக் காட்டுகின்றார்கள்.

அவன் சேனாதிபதி என்றால் அவனுக்கு விரோதியாக வருபவர்களையும் தீமைகளை உருவாக்கும் அவனை பிரம்மா என்ற நிலையை அவன் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டான்.

யார்..,? பிரம்மாவைச் சிறைப்படுத்திவிட்டான் சேனாதிபதி.

இந்த ஆறாவது அறிவிற்குள் நாம் அந்த அருள் ஞானியின் உணர்வையும் இந்த வைரத்தைப் போல ஜொலிக்கும் உணர்வுகளையும் இந்தத் தெய்வீகப் பண்புகளையும் தான் நுகர்ந்து அந்த உயிரான ஈசனிடம் இணைக்கப்படும் பொழுது “உருவாக்கும் சக்தி பெற்றவன்”.

இந்த ஆறாவது அறிவால் தான் கார்த்திகேயா.

இதையெல்லாம் தெரிந்து அதை நுகர்ந்து உயிருடன் இணைத்து அதை உருவாக்கும் சக்தி பெற்றவன்.

யார்..,? இந்தச் சேனாதிபதி.

ஏனென்றால் வரும் தீமைகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையும், அதே சமயத்தில் அவன் பிரம்மாவைச் சிறைப்பிடித்துவிடுகின்றான் இந்த  ஆறாவது அறிவு.

தனக்குள் உருவாகும் சக்தி உருப்பெறும் சக்தியைக் கையில் எடுத்துக் கொள்கின்றான்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அந்த வைரத்தைப் போல ஜோலிக்க வேண்டும், இந்தத் தங்கத்தைப் போல என் மனது மங்காது இருக்க வேண்டும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த வலிமை மிக்க சக்தியால் எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது இது “வள்ளி”

இவ்வாறு உடலுக்குள் சுவாசித்த பின் தெய்வ ஆணையாக இந்த உடலுக்குள் இயக்கப்படுகின்றது. இந்த உணர்வின் தன்மையைப் பெற்று தீமைகள் தன்னை அணுகாது அந்த உணர்வின் வலிமையால் நீக்குகின்றான் சேனாதிபதி.

எவ்வளவு தெளிவாக நம் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்? நாம் உணர்ந்தோமா?

ஆகவே, காவியத் தொகுப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பேருண்மைகளை நாம் தெரிந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் வராது தடுக்க முடியும்.

இதைத்தான் நம் ஆலயங்களில் காட்டப்பட்டுள்ளது. அந்த ஞானிகள் காட்டிய முறைப்படி அந்த அருள் சக்திகளைச் சுவாசித்தால் நாம் அந்தத் தெயவ நிலையை அடைய முடியும்.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாக நீ ஆகின்றாய். “நீ தெய்வமாகு” என்பதே ஆலயத்தில் காட்டப்பட்டுள்ளது. 

July 1, 2016

“கலகப் பிரியன்” - நாரதன்

ரிஷியின் மகன், நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் “அதோ வருகின்றான்...,” அவனிடம் அணுகுவோம். அவனுக்கு அனைத்துமே தெரியும் என்று கண்கள் சொல்வதாக வியாசகர் உணர்த்தியுள்ளார்.

 ரிஷியாக்கியது யாரை?

அந்த வசிஷ்டரும் அருந்ததியும் அவர்கள் இருவரும் ஒன்றாகி அந்த உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகி நிலை கொண்டவர்கள். அதிலிருந்து வெளிப்படும் உணர்வினை சூரியன் காந்த சக்தி கவர்கின்றது அலைகளாக மாற்றுகின்றது. அது தான் ரிஷியின் மகன் நாரதன் என்பது.

 மனிதர்களாக இருக்கும்போது தன் இச்சைக்காகத் தான் எண்ணும்போது தன் இன விருத்தியை (புத்திரர்களாக) உருவாக்குகின்றது.

ஆனால், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து தீமைகளை வென்று இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாக வாழ்பவர்கள் தனக்குள் “ஒளியின் அணுக்களாக” மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அதனால்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

ஒன்றும் ஆகாத தாவர இனச் செடியின் சத்தாக இருந்தாலும் சூரியன் அதைத் தனக்குள் கவர்ந்து வைத்து கொள்கின்றது. அதிலே விளைந்த வித்துக்களை நிலத்தில் ஊண்றிய பின் அதன் அறிவாக அது இயக்கி அதைச் செடியாக வளர்த்துத் தன் இனத்தின் வித்தாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று தான் மனிதனானபின் கணவனும் மனைவியும் இரு மணமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி துருவ நட்சத்திரமாக ஆகியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து விளைந்து கொண்டிருக்கும் உணர்வுகள் இந்த பிரபஞ்சத்தில் விளையும் நஞ்சினை ஒடுக்கி ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது.

அவ்வாறு உணர்வின் அலைகளாக மாற்றி கொண்டிருக்கும் அந்த அலைகளை கண்களால் நாம் உற்றுப் பார்த்து அந்த வானுலக ஆற்றலை நுகர்தல் வேண்டும்.

அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அதைத்தான் நாரதன் என்றும் கலகப்பிரியன் என்று சொல்லுகின்றார்கள்.

நாம் பாசத்தால் அன்பால் ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்வு நமக்குள் வந்தபின் நாம் என்ன செய்கின்றோம்?

“அடப் பாவமே..., இப்படி இருக்கின்றதே..,” என்றுதான் நாம் எண்ணுகின்றோம்.

ஆனால், அதை நீக்குகின்றோமா என்றால் இல்லை.

ஏனென்றால், சூரியனின் வேலை எதனை நுகர்கின்றோமோ அதன் அறிவாகத் தான் அது இயக்கும். எதன் அறிவை நமக்குள் பதிவு செய்கின்றோமோ அதன் உணர்வின் இயக்கமாக இயக்கி அந்த வேதனையை நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

தாவர இனச் செடிகளை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்று நமக்குள் வேதனைகளை உருவாக்குகின்றது.

இப்படித் தனது வாழ்க்கையில் இவ்வாறு இருப்பதை அறிந்து வருகின்றார் ரிஷியின் மகன் நாரதன், அவர் ஒரு கலகப் பிரியன். கலகமோ நன்மையில்தானே முடியும் என்று காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு நோயாளியின் தன்மையைப் பிடித்துக் கொண்டபின் திரும்பத் திரும்ப அவன் நோயினைப் பற்றித் தான் பேசுவோம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மையை நாம் நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் அவர் படும் வேதனையைப் பற்றிய சிந்தனைகளை நமக்குள் சிந்திக்க விடாது அதை அடக்கும்.

ஆகவே, அதுதான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன், அதாவது கலகப் பிரியன்.

நமக்குள் விடாப்பிடியாக வரும் தீமைகளை நீக்கிவிட்டு நமக்குள் தெளிந்த மனதை அது உருவாக்கும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியமாகப் படைத்துள்ளார் வியாசகர்.