ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2023

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்தேன்… தீமைகளை என்னால் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று ஒரு இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றோமா...?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி... பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.