குருநாதர் எனக்கு எப்படி ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்தாரோ அதைப் போல் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் செவி வழி கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… உங்கள் புலனறிவு கொண்டு ஈர்க்கும் நிலையாக… அந்த மெய் ஞானிகள் உணர்வின் சத்தை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
இந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
1.அத்தகைய பழக்கத்தினைக் கொண்டு வருவதற்குத் தான் தியான வழியினைக் காட்டி
2.அதன் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
3.காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஞானிகளின் அருள் சக்திகளையும்
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேராற்றல்மிக்க சக்திகளையும் நீங்கள் பெறுவதற்காக இதைச் செய்கின்றோம்.
ஏனென்றால் அறிந்துணர்ந்து… தெரிந்து கொண்டு அதன் வழிகளில் நீங்கள் பின்பற்றும் நிலைகள் வேறு.
“ஒருவர் நம்மைத் திட்டுகிறார்…” என்ற உடனே அந்த உணர்ச்சிகள் பட்டதும்… நம்மை அறியாமலே
1.அவர் மேல் நமக்கு எவ்வளவு எண்ணங்கள் தோன்றி… சிந்தனைகள் தோன்றுகிறதோ…?
2.அவரை எப்படி உதைக்க வேண்டும்…?
3.எதன் எதன் மறைவிலே அதைச் செயல்படுத்த வேண்டும்…? என்ற “அந்த ஞானம் பேசுகிறது….”
அதைப் போன்று தான் மெய் வழி செல்ல வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி இருப்போருக்கு அந்த ஞானிகளின் ஆற்றல்கள் துரித கதியில் கிடைக்கும்.
ஆகவே எல்லாம் தெரிந்து எடுப்பது என்றால் மிகவும் சிரமம்…!
“எதையோ பின்னிப் பின்னிப் பேசுகின்றேன்…” என்று எண்ண வேண்டாம். இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு. பல நூல்களின் தன்மை பின்னி வரும் பொழுது தான் எத்தனையோ வகையான துணிமணிகளை நாம் ஆடைகளாக அணிகின்றோம்… அழகுபடுத்தும் நிலையாக அது வருகிறது.
ஆகவே இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் பொழுதுதான் சிந்தனைக்குரிய நிலைகள் கூடி
1.யாம் சொல்லும் தியான நிலையில் வரப்படும் பொழுது பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
2.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்… அருள் வழியிலே செல்லவும் இது உதவும்.
காரணம்… குருநாதர் எனக்கு எவ்வழியிலே காட்டினாரோ அதே போன்றுதான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழி நீங்கள் சென்று விஞ்ஞான உலகில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை விடுவிக்கும் சக்தியாக… மெய் வழியைப் பெறும் சந்தர்ப்பத்தையும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்யவும் இதைச் செய்கின்றோம்.
“யாம் முழுமையாகச் சொல்லவில்லை…” என்று சிலர் அந்த ஏக்கத்தில் இருக்கலாம். முழுமையாகச் சொல்வது என்று இல்லாதபடி
1.யாம் பதிவு செய்த நிலைகளை எல்லாம்
2.நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது அந்த உண்மையின் நிலைகள் உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும்.
3.வளர்ச்சியாக… வளர்ச்சியாக… உங்களுக்குள் “உள்ளிருந்தே அது தெரிய வேண்டுமே தவிர…”
4.வெளியிலே முழுமையாகப் பேசிக் கேட்டு அதைத் தெரிந்து கொள்வதால் பலன் ஏதுமில்லை.
எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் விளையப்படும் போது தான் இருள் சூழும் நிலைகள் குறைந்து… மெய் ஒளியின் ஆற்றல்கள் கூடி… உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்… அருள் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகும்… அதைக் கவரும் தகுதியும் உங்களுக்குள் வளர்ச்சியாகும்… நீங்கள் வளர்வதற்கு அது பயன்படும்.
அதனால் தான் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் பதிவு செய்து… அருள் வழியில் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை உணர்த்துகின்றேன்.
1.ஆகவே எனக்குக் கிடைக்குமா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை
2.சந்தேகத்தின் நிலைகள் கொண்டு வந்தால் இதைச் செயல்படுத்த முடியாது.
விண்வெளியில் எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இராக்கெட்டை அனுப்புகின்றார்கள். ஆனாலும் இங்கிருந்து தான் அதை அங்கே இயக்குகிறார்கள்… இயக்க முடியுமா…! என்ற சந்தேக நிலை இல்லை.
ஆக அந்த இயந்திரத்தில் இருக்கும் ஆற்றல்களுக்கும் மனிதன் சொல்லிப் பேசி நாடாக்கள் வழி பதிவாக்கிக் கம்ப்யூட்டர் மூலம் ஆணையிடுவதற்கும் (COMPUTER LANGUAGE) “அது செருகப்படுகின்றது…”
அவ்வாறு செருகி அதிலே பதிவு செய்த நிலைகள் கொண்டு நாடாக்கள் வழி ஆணையிட்டு அந்த இராக்கெட்டை இங்கிருந்து திசை திருப்புகின்றார்கள்... அதை இவர்கள் வசதிக்குத் தக்கச் சீராக்கவும் செய்கின்றார்கள்.
இப்படி…
1.ஆயிரம் டன் எடையுள்ள அந்த இயந்திரத்தையும்
2.மனிதனுடைய எண்ண வலுவானது அந்த எண்ண ஒலிகள் அது இயக்குகின்றது (மனிதனின் எண்ண ஒலிகள் மிகவும் வலு கொண்டது)
அதைப் போன்று தான் குருநாதர் காட்டிய வழியில் “உயர்ந்த சக்திகளை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்... ஒரு கம்ப்யூட்டர் மூலம் அங்கே இராக்கெட்டை இயக்குவது போன்று.
இன்னும் சிலர்… இத்தகைய முக்கியமான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லி ஏன் இதைத் தெரியப்படுத்தவில்லை…? என்று நினைக்கலாம்.
1.உண்மைகளை வெளிப்படுத்தி… ஆர்வத்தைத் தூண்டி… அதன் மூலம் அவர்கள் வருவதைக் காட்டிலும்
2.”மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஆசையைத் தூண்டி…” அதன் வழி வருவது தான் முக்கியம்.
முக்கியமான நிலைகள் என்று பெறுவதற்குரிய நிலையில் இருந்தாலும் அதை விளம்பரம் செய்யாதபடி
1.”விளம்பரத்தைச் செய்து…” பெரும் ஆசைகளை ஊட்டுவதைக் காட்டிலும்
2.”தான் பெற வேண்டும்…” என்று ஆசை அவரவர்களுக்குள் உந்தப்பட்டு
3.அதை மையமாக வைத்து வரும் பொழுது தான் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடியும்.
சாமி நமக்கு எல்லாவற்றையும் சொல்வார்… சாமி நமக்குச் செய்து கொடுப்பார்… ஆகையினால் சாமியைச் சந்திக்க வரலாம்…! என்று அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டி… இந்த உணர்வின் வேட்கைகள் வரும் பொழுது “அது உங்களுக்குள் நிலைத்திருக்காது...”
தான் உள்ளத்தால் உண்மையான நிலையில் வேட்கைகள் உருவாகி அந்த வேட்கையின் அடிப்படையில் வரும் பொழுது தான் அந்த அருள் வழியைப் பெறும் தகுதி பெற முடியும்.
மெய் ஞானிகள் சென்ற அருள் வழி கொண்டு
1.“உங்கள் உணர்வுகளை ஒளியாக மாற்றும் வல்லமை உங்களுக்கே கிடைக்கும்…!”
2.அதைக் கிடைக்கச் செய்வதற்குத் தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு அடிக்கடி உபதேசிப்பது.