ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2023

நாளை மனித ரூபம் இருக்குமா…?

உதாரணமாக 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகளைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி… அதில் இருக்கும் விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் துருவப் பகுதிக்குள் நுழைந்தால் மின்னலாக மாறுகின்றது... கடலில் பட்டால் மணலாக மாறுகின்றது... மரத்தில் பட்டால் கருகி விடுகின்றது.

மின்னலின் துகள்கள் நாலாபுறமும் பரவுகின்றது.
1.அதன் அருகிலே எதிர்மறையான நட்சத்திரத்தினுடைய துகள்கள் அதிகமாக இருந்தால்
2.எந்தப் பக்கத்தில் இது மோதி வெடிக்கின்றதோ மின்னல்களாகத் தாக்கப்படும் பொழுது
3.சூறாவளியாக மாறிக் கட்டிடம் மற்ற பொருள்கள் அனைத்தையும் தூக்கி வீசிக்கொண்டு போகின்றது...
4.ஏனென்றால் அதற்கு அது எதிர்நிலை... சுழிக் காற்றுகளாக இப்படி வருகின்றது.

உலகில் எந்தப் பிரதேசங்களில் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் இந்த உணர்வலைகள் பட்டுச் சுழிக் காற்றுகளும் சூறாவளிகளும் அந்தந்த மோதலுக்குத் தகுந்த மாதிரி அதிகமாக வரும்.

அணு உலைகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் எல்லாம் அந்தக் கசிவின் துகள்கள் படர்ந்திருக்கும். அதிலே நட்சத்திரத்தினுடைய எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது சூறாவளி வரத்தான் செய்யும்.

விஞ்ஞானி ஒரு பக்கம் எத்தனையோ கண்டுபிடித்தாலும் இயற்கையின் சூழ்நிலை... அந்த இயற்கையையே மனிதன் மாற்றி அமைக்கின்றான். இயற்கையிலிருந்து மாறும் நிலைகளாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்… நாம் இருக்கும் இடங்களில் அந்தச் சூறாவளி வராதபடி தடுக்க வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி அத்தகைய மூச்சலைகளை இங்கே பரவச் செய்தால்
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தங்கள் அதிகமாக வரும்பொழுது அந்த விஷக் கதிரியக்கங்கள் விலகிச் செல்லும்.
3.நம் சார்புடைய மக்களையும் காக்க முடியும்.
4.நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உணவாகக் கொடுக்க முடியும்.

இதைச் செய்யத் தவறினால் இயற்கையின் நியதிகளில் மனிதன் எங்கோ அழைத்துச் செல்லப்படுகின்றான். நாளை மனித ரூபம் இருக்குமா...? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அந்த அளவிற்கு மனித ரூபத்தைச் சீர்குலைக்கும் உணர்வு வந்துவிட்டது.

ஆகவே இனி வரும் காலங்களில் மனதில் கலக்கங்கள் வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் ஒரு நிமிடமாவது எண்ணிப் பழக வேண்டும்.
2.அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்... ஆதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிழிகளில் படர்ந்து கருவிழிக்குள் இருக்கும் கண்மணி பெற வேண்டும்
5.கருமணிகளைத் தொடர்ந்து வரும் நரம்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
6.எங்கள் எலும்புகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்
7.எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணி நாம் பழகி ஆக வேண்டும்.

இதை நாம் செய்து வளர்த்துக் கொண்டே வந்தால் முந்தைய வினைகளை நீக்க முடியும். இனி வரக்கூடிய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக அதிகமாக இந்த உடலுக்குப் பின் நமது உயிர் அங்கே அழைத்துச் சென்றுவிடும். நம்மைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.

இதைத் தவிர வேறு வழி இல்லை... மனிதனின் கடைசி நிலை…!

மனித உடலில் நாம் வாழும் நாள்கள் மிகக் குறுகியது. அதற்குள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி சிறுகச் சிறுக துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெருக்கிப் பழக வேண்டும்.