நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.
ஆமாங்க... என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.
நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.
அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா...?
அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இட்ட்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.
“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.
அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.
ரோட்டில செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.
இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”
தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.
அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.
இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.
சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.
கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது - என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.
ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தி விடும்.
அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).