ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2023

“வேதனைகள் வரும் போது தான்…” நம்மைப் பாதுகாக்கும் சக்தியைக் கூட்ட முடியும்

நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.

இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.

சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் - எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.

இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

நேற்றுத் தான் வாங்கி வந்தேன்... அதற்குள் இப்படி உடைந்து விட்டதே...! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது... அதைத்தான் சுவாசிக்கின்றோம்.

இப்படி நுகர நுகர... நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஈஸ்வரா...! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.

பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆக... இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது...?

செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.

அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.

இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).