சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா
சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
சப்தரிஷிகள் என்றால் யார்…?
இருளை அகற்றி ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.
அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.
உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.
ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று தியானிக்கச் சொல்கிறோம்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.
சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.
அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.
அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்...
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்... பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.
நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ...ம் நமச்சிவாய... என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.
அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே...! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.
அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்... இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.
சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த ஏக்கம்... நாம் அதுவாக மாறுகின்றோம்.