1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.
இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.
இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.
ஏன்… எப்படி…? எதனால்..?
ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.
1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாற விடாமல் தடைப்படுத்தும்.
இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.
1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.
உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!
ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.
ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?
வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”
அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.
ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.
ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.