சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி என்றால் ஞானம். அன்றைய நாள் முழுமைக்குமே ஞானத்தை வளர்த்திடும் நாளாக நாம் அமைக்க வேண்டும்.
அதற்காக நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்...1
1.என் குடும்பத்தில் நான் என்ன செய்தேன்...?
2.கல்வியில் நான் எதை எதைத் தவறவிட்டேன்...?
3.தொழிலில் நான் என்னென்ன செய்தேன்...? அதிலே எந்தெந்தக் குற்றங்கள் வந்தது...? அதனால் தொழில் எப்படி மந்தமானது...?
இதைப் போன்று ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்கும் நாள் தான் ஆயுத பூஜை நந்நாள் என்பது.
நமது வாழ்க்கையில்
1.இந்த வருடம் முழுவதுமே நாம் என்ன செய்தோம்..?
2.குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தோம்...?
3.நம் சொல்லால் குடும்பம் எப்படி ஒற்றுமையானது...? என்ற நிலையில் இந்த ஞானத்தை அறிதல் வேண்டும்.
ஆனால் சந்தர்ப்பத்தால் அந்த ஞானம் குறையப்படும் போது... அந்தக் குறைந்த நிலைகள் எப்படி இயக்குகின்றது...? ஞானம் குறைந்ததன் காரணமாக
1.வாழ்க்கையில் சிரமங்கள் எப்படி வந்தது...? துன்பங்கள் எப்படி வந்தது...? தொழில் எப்படி நஷ்டமானது...?
2.ஞானம் தவறி நுகர்ந்த உணர்வால் நம் உடலில் நோய்கள் எப்படி வந்தது...? என்று
3.அதை எல்லாம் விசாரணை செய்து நம்மை நாமே சிந்திக்கக் கூடிய நாள் தான் இது.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மை நாமே தூய்மைப்படுத்தி இந்த அருள் ஞான சக்தியை வளர்க்க வேண்டும்.
உதாரணமாக கடையிலே நஷ்டமாகி இருந்தால் அந்த நஷ்டம் எதனால் ஆனது...? என்று சிந்தனை செய்ய வேண்டும். ஆனால் சிந்தனைக்கே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்...?
அழுக்குப்பட்டுப் பட்டு ஒரு பொருள் அங்கே மறைந்திருந்தால் அதைத் துடைத்தால் தான் மீண்டும் உள்ளிருக்கும் அந்தப் பொருள் தெரிகிறது... தெளிவாகத் தெரிகின்றது.
அதைப் போன்று...
1.வாழ்க்கையில் அப்படித் தெரியப்படுத்தும் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப் படுத்தும் பொழுது
3.எது நம் நல்ல குணங்களை மறைத்தது...? எதனால் வியாபாரம் நஷ்டமானது...?
4.ஒற்றுமையாக இருந்த நம் குடும்பம் எதனால் பிரிந்து செல்லும் நிலை வந்தது...?
5.பிரிந்து வாழ்ந்ததனால் நமக்குள் நல்ல சொல்கள் எப்படி இழக்கப்பட்டது...?
6.நல்ல சொல்கள் இழந்த நிலையினால் நம் தொழில்கள் எப்படிக் குன்றியது...?
இது எல்லாம் சீர்கெடும் போது நம் உடலில் நல்ல உணர்வுகள் மாறி ஒருவருக்கொருவர் கடும் சொல் சொல்லும் போது
1.அன்னை தந்தையைப் பிரிந்து வாழும் நிலை எப்படி வருகின்றது...?
2.சகோதர உணர்வுகள் எப்படி மறைகிறது...? சகோதரர்களுக்குள் போர் செய்யும் முறைகள் எப்படி வருகின்றது...?
3.எந்தெந்தக் குற்றங்களால் நன்றாக வாழ்ந்தவரின் நிலைகள் மாறுகிறது...?
4.ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் எல்லாம் எப்படிப் பகைமையானார்கள்...? என்று
5.மேலே சொன்ன தீமைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் முறைகள் எது...? என்று
6.நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்.
ஆகவே சரஸ்வதி பூஜை என்றால் அந்த அருள் ஞானத்தை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நாளாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
ஞானிகள் காட்டிய வழியில் அந்த அருள் ஞானத்தை எடுத்து அருள் சக்திகளை வளர்த்து தீமைகளிலிருந்து மீட்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
எது எது அழுக்குகள் இருந்தததோ அதை எல்லாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
1.நம் நல்ல எண்ணங்களைக் கூர்மையாக்கி... அதனுடன் ஞானிகள் உணர்வை இணைத்து வலிமை பெறச் செய்து
2.நம் சொல்லால் செயலால் மூச்சால் எல்லோருக்கும் நன்மை பெறச் செய்யும் சக்தியாக நாம் மாற வேண்டும்.