கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.
அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.
ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.
இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!
கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள்… தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.
1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவ\னுக்குத் தான் தெரியும்.
அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.
இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!
இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.
குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.
இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் இந்த எண்ண ஓட்டத்தை “எப்படியும் செலுத்தி வாழலாம்…” என்று இருக்கக் கூடாது.
ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற பின் அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.
அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.அதைப் போன்ற எண்ணமுடன் நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.
மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.
சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.
அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.
1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!