ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2021

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.

அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.

தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை... என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்...
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்...
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்... என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம்... நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக...” மாறி விடுகின்றது.

குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே... நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே... என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.

அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.

1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.

காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.

அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?

எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி... நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று...
2.அது அடங்கி... உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை... வெறுப்பாக இருக்கின்றது... எங்கெங்கோ நினைவுகள் போகின்றது...! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.

தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்... நல்லதாக அமையும்.